
-அனிஷா வி. எஸ்.
அன்றாடம், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவை. ஒரு நல்ல வார்த்தை, ஒருவரின் மனதை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அதே நேரத்தில், யோசிக்காமல் பேசப்படும் வார்த்தைகள், ஒருவரது மனதை வருத்தமடையவும் செய்கிறது.
பல நேரங்களில், நாம் சாதாரணமாக கேட்கும் சில கேள்விகளும் கூட பிறருக்கு தயக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். எனவே, யாரிடம் பேசுகிறோம், அவர்களின் நிலைமை என்ன என்பது போன்றவற்றைப் புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
இந்நிலையில், நம்மிடம் நெருங்கிய உறவுகள், நண்பர்கள் என்றாலும் கூட, அவர்களிடம் நாம் சில கேள்விகளைத் தவிர்த்துவிட வேண்டும். அத்தகைய மூன்று முக்கியமான கேள்விகள் என்ன என்பது பற்றி விரிவாகக் காணலாம்.
வருமானம் குறித்து கேட்காதீர்:
நாம் சில நேரங்களில் நெருங்கிய நண்பர்களோடு அல்லது உறவினர்களோடு பேசும் போது கூட, வருமானம் தொடர்பான கேள்விகளை கேட்பது தவறாகும். ஒவ்வொரு நபரின் வாழ்க்கை சூழ்நிலை வெவ்வேறாக இருக்கலாம். சிலர் தங்கள் நிலையை வெளிப்படுத்த தயங்குவார்கள்.
சிலர் இன்னும் வாழ்க்கையில் நிலைபெற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களாக இருப்பர். நல்ல நட்பு என்பது ஒருவரின் குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும், அவர்களின் வருமான நிலையை வைத்து அல்ல. எனவே, பிறரின் வருமானத்தை பற்றி கேட்காமல் இருப்பது நல்லது.
விஷேஷம் இல்லையா? என்ற கேள்வியை ஏன் தவிர்க்க வேண்டும்?
அடுத்தது, பலருக்குப் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி: விஷேஷம் இல்லையா? என்ற கேள்வி.
புதிய தம்பதிகளைப் பார்த்தவுடன் நாம் கேட்கும் வழக்கமான கேள்வி இது. ஆனால், இக்காலத்தில் பல்வேறு மருத்துவ, சமூக காரணங்களால் இயற்கையாக கரு உண்டாகும் நிலை அதிகளவில் குறைந்து வருகிறது. இந்த கேள்வி அவர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தக்கூடும். அவர்களின் சூழ்நிலையை நாம் முழுமையாக அறியாமல் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பது அவர்களை வருத்தமடைய செய்யும். எனவே, இதுபோன்ற கேள்விகளை விட்டுவிட்டு நேர்மறை எண்ணங்களுடன் வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும்.
விருந்தினரை வரவேற்கும் விதம் முக்கியம்:
வீட்டிற்கு வருபவர்களிடம் நாம் அன்போடு பேசுவது மிக முக்கியம். ஆனால், சிலர் வீட்டிற்கு வந்தவர்களிடம் “சாப்பிடுகிறீர்களா?” “தங்குகிறீர்களா?” எனக் கேள்வி கேட்டு உபசரித்து பழகிவிட்டனர். அதற்கு மாறாக, நேரடியாக ‘சாப்பிடுங்க’, ‘தங்குங்க’ போன்ற வார்த்தைகளை அன்போடு கூறினால், அவர்கள் தயக்கமின்றி பழகக்கூடிய சூழல் உருவாகும்.
நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. சில நேரங்களில் நாம் கேட்கும் கேள்விகள், பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, எந்த விஷயத்தை, எப்போது, யாரிடம் பேச வேண்டும், கேட்க வேண்டும், என்பதைக் கவனமாக உணர வேண்டும். ஒருவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தும் கேள்விகளை தவிர்த்து, அன்பாகவும் மரியாதையுடனும் பேச வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை விரும்பி மதிக்க வேண்டும் என்றால் நம் வார்த்தைகளும் முதலில் நன்றாக இருக்க வேண்டும். பிறருடைய மனதை புரிந்துகொண்டு பேசினால், உறவுகளும் மகிழ்ச்சியாக நிலைத்திருக்கும்.