ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 29ம் தேதி ‘டிக் டாக் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. கடிகாரத்தின் ஓசை ‘டிக் டாக்’ என ஒலிக்கும். அது, நேரம் கடந்துகொண்டே இருப்பதை உணர்த்தும் ஓசையாகும். டிக் டாக் தினம் என்பது வருடம் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதற்குள் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களை செய்து முடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
டிக் டாக் தினத்தின் முக்கியத்துவம்: புத்தாண்டு தொடங்கும் முன்பு முடிக்கப்படாத வேலைகளை பற்றிய நினைவூட்டல் நாளாக இது அமைகிறது. முடிக்கப்படாத பல அலுவல்கள், வணிக ரீதியான செயல்கள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதை இந்த தினம் நினைவூட்டுகிறது.
ஆண்டின் இறுதி நெருங்கும்போது பல விஷயங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. முடிக்கப்படாத வணிக ரீதியான செயல்கள் பொதுவாக காலண்டர் ஆண்டு முடிவதற்குள் முடிக்கப்பட வேண்டும். பெரிய வணிகக் கொள்முதல் மற்றும் வரி ஆண்டிற்கான தொண்டு நன்கொடைகள் போன்றவற்றை டிசம்பர் 31ம் தேதிக்கு முன் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும். மேலும் நிதி தொடர்பான பரிவர்த்தனைகள், பயன்பாடுகள், மருத்துவத் திட்டங்கள் ஆகியவை சரியாக செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்கும் நாள் இது.
டிக் டாக் தினத்தை அனுசரிக்கும் விதம்: இந்த தினம் முடிவடையும் ஆண்டை மதிப்பிடுவதற்கும், நிலுவையில் உள்ள பணிகள், திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது. அடுத்த ஆண்டு முழுவதும் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு தனி நபர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுதலாக அமைகிறது.
இந்த நாள் புதிய ஆண்டிற்கான, புதிய தொடக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதால் இந்த வருடத்தில் முடிக்காமல் விட்டுவிட்ட விஷயங்களை பற்றி ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும். அவற்றை வரும் ஆண்டிலாவது முடிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இது அடுத்த ஆண்டை தெளிவான தீர்மானத்துடன் தொடங்க அனைவருக்கும் உதவுகிறது. வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை சிறந்த முறையில் தொடங்குவதை உறுதி செய்யும் நாளாக இது இருக்கிறது.
இந்த ஆண்டில் எதை அடைந்தோம் என்பதை பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வாழ்க்கை இரண்டையும் கவனிக்க வேண்டும். முடிக்க எண்ணி செய்யாமல் விடப்பட்ட பணிகள் அல்லது இலக்குகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். ஆண்டு முடிவதற்குள் செய்து முடிக்க வேண்டிய முன்னுரிமை பட்டியலை உருவாக்க வேண்டும். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டுத் தீர்மானங்களை எடுத்திருந்தால் அதை எப்படி திட்டமிடலாம் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்.
வரும் ஆண்டை வரவேற்கத் தயாராகும் விதத்தில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டும். இதில் தனிப்பட்ட வளர்ச்சி, தொழில் லட்சியங்கள் அல்லது உடல்நலம் தொடர்பான இலக்குகளும் இருக்கலாம். இவை பற்றிய தீர்மானங்களை குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் பணிகளை முடிக்கவும், புதிய இலக்குகளை அமைக்கவும், நேர்மறையான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவிக்கும் வாய்ப்பாக இந்நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிசம்பர் 29ம் தேதியை ஒரு அர்த்தமுள்ள நாளாகக் கருதி பழைய பணிகளை முடித்துவிட்டு, புதிய ஆண்டிற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வரவிருக்கும் ஆண்டில் அதிக சாதனை படைத்தவர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள இந்த நாளை பயன்படுத்திக்கொண்டு அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும். இந்த நாளில் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, கடந்துபோன கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். சிலர் எதைச் செய்யவில்லை என்பதைப் பற்றி கவலைப்படுவதிலும் வருத்தப்படுவதிலும் அதிக நேரம் செலவிடுகிறார்கள். பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.