தற்போது வரும் புதுப்புது நோய் தாக்குதலுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால்தான் அதன் பாதிப்புகளில் இருந்து எளிதாக விடுபட முடியும். இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி நமது உடல் உறுப்புகளை ஆக்கிரமிக்கும் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. மேலும், கிருமிகளின் அடுத்த தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் கவசமாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை உணவு, உடற்பயிற்சி மூலம் அதிகரிக்கலாம். தன்னம்பிக்கையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும், மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.
ஆராய்ச்சியாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நான்கு வகைகளாக வகைப்படுத்துகின்றனர்.
உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலில் ஏற்படும் நுண்ணுயிரிகளின் தாக்குதலைத் தாங்கும் உடலின் இயல்பான திறன் ஆகும்.
அடாப்டிவ் நோயெதிர்ப்பு என்பது பல்வேறு உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப உடலில் உருவாகிறது.
செயலற்ற நோய் எதிர்ப்பு சக்தி என்பது குழந்தைகளுக்கு உருவாவது. நஞ்சுக்கொடியிலிருந்தும் பின் ஒரு வருடம் வரை தாய்ப்பாலின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும் நிலை. இது காலப்போக்கில் குறையும் தன்மை கொண்டது.
நோய்த்தடுப்பு காரணமான நோய் எதிர்ப்பு சக்தி கடைசி வகை. நோய்த்தடுப்பு என்பது இறந்த நோய்க்கிருமிகள் அல்லது பலவீனமான நோய்க்கிருமிகளை, சிறிய அளவுகளில், உடலுக்குள் அறிமுகப்படுத்தும் செயல்முறையாகும். அவற்றை தாங்கி உடல் நோய்வாய்ப்படாமல் ஆன்டிபாடிகளை வளர்ப்பதை உறுதி செய்கிறது.
இனி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் சில பொருள்களை பார்ப்போம்.
சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. திராட்சைப் பழம், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகியவை அவற்றுள் சில.
பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் செரிமான நொதிகளும் நிறைந்துள்ளன. குடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு இது முக்கியமானது.
மாதுளையில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-டூமர் பண்புகள் உள்ளன. மேலும், இதில் வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளதால் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
ஒமேகா 3, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே மற்றும் ப்யூட்ரேட்டின் அடங்கிய உணவு நெய். எனவே, தினமும் போதுமான அளவு நெய்யை உட்கொள்வது நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
துளசி ஆயுர்வேத நூல்களில் காணும் மற்றொரு எதிர்ப்பு சக்தி தரும் மூலப்பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் அடங்கியுள்ளது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுடன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களைத் தடுக்கிறது.
இத்தனை இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கியமானது தண்ணீர். நமது உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இரத்தம் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது.
நமது உடலால் இயற்கையாகவே வைட்டமின்களை உற்பத்தி செய்ய முடியாது என்பதால், ஒவ்வொரு நாளும் வைட்டமின் கொண்ட உணவை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியுடன் நலம் பெறுவோம்.