மழைக்காலத்தில் உங்க நாய், பூனைகளைத் தாக்கும் அந்த 'கொடூர' எதிரி! உஷாரா இருங்க!

Ticks
Ticks
Published on

வானம் மேகமூட்டமாகி, மழை தூறல் போட்டாலே நமக்கெல்லாம் குஷியாகிவிடும். சூடாக டீ குடித்துக்கொண்டே மழையை ரசிக்கத் தோன்றும். ஆனால், நம் வீட்டில் வளரும் நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு இந்த மழைக்காலம் ஒரு மிகப்பெரிய சோதனைக் காலம். நமக்கு எப்படி மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் வருகிறதோ, அதேபோல விலங்குகளுக்கும் பல பிரச்சனைகள் வரும்.

 அதில் மிக முக்கியமானது மற்றும் ஆபத்தானது 'உண்ணி' (Ticks) தொல்லைதான். சின்னதாக இருக்கும் இந்தப் பூச்சிகள், நம் செல்லங்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து, பெரிய நோய்களையே உண்டாக்கிவிடும். இந்த மழைக்காலத்தில் நம் வீட்டுச் செல்லக்குட்டிகளை எப்படிப் பாதுகாப்பது என்று பார்ப்போம்.

ஏன் இப்போது ஆபத்து அதிகம்?

வெயில் காலத்தில் இந்தப் பூச்சிகள் அதிகம் இருக்காது. ஆனால், மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம், இந்த உண்ணிகள் முட்டை போட்டு, இனப்பெருக்கம் செய்வதற்கு மிகவும் வசதியாக அமைந்துவிடுகிறது. வீட்டுத் தோட்டத்தில் புற்கள் வளர்ந்திருந்தாலோ அல்லது செடிகள் அடர்த்தியாக இருந்தாலோ, அங்கே இவை பதுங்கியிருக்கும். உங்கள் நாய் அல்லது பூனை அங்கே விளையாடச் செல்லும்போது, சத்தமில்லாமல் அவற்றின் ரோமங்களுக்குள் புகுந்து, தோலைக் கடித்து ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்துவிடும்.

அறிகுறிகள் என்ன?

உங்கள் நாய் எப்போதும் உடம்பைச் சொறிந்து கொண்டே இருக்கிறதா? அல்லது வழக்கத்திற்கு மாறாகச் சோர்வாக, ஒரே இடத்தில் படுத்துக் கிடக்கிறதா? சாப்பாடு வேண்டாம் என்று மறுக்கிறதா? உஷாராகிவிடுங்கள். இதெல்லாம் உண்ணித் தொல்லையின் அறிகுறிகள்தான். சில சமயங்களில் முடி கொட்டுதல், காய்ச்சல் மற்றும் தோல் சிவந்து போவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா!
Ticks

இதை கவனிக்காமல் விட்டால், 'லைம் நோய்' (Lyme disease) போன்ற பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு, மூட்டு வலி வரும். அதிகப்படியான ரத்தத்தை இந்த உண்ணிகள் குடிப்பதால், விலங்குகளுக்கு ரத்த சோகை ஏற்பட்டு, அவை நடமாடவே முடியாத அளவுக்கு பலவீனமாகிவிடும் அபாயம் உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்!

  1. வாரம் இரண்டு முறையாவது, உண்ணிகளை விரட்டும் பிரத்யேக ஷாம்பூ (Anti-tick shampoo) போட்டுக் குளிப்பாட்டுங்கள். குளிப்பாட்டும்போது காது மடல்கள், கழுத்து, வால் பகுதி மற்றும் கால் இடுக்குகளை நன்றாகச் சோதிக்க வேண்டும். உண்ணிகள் பெரும்பாலும் அங்கேதான் ஒளிந்திருக்கும்.

  2. உங்கள் செல்லப்பிராணி தூங்கும் மெத்தை அல்லது துணியை ஈரம் இல்லாமல், எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருங்கள். அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

  3. கடைகளில் விற்கும் பவுடர் அல்லது ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தலாம். ஆனால், உண்ணித் தொல்லை அதிகமாக இருந்தால், சுய வைத்தியம் பார்க்காமல் உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்துக்கு நல்மருந்து செல்லப்பிராணி வளர்ப்பு!
Ticks

செல்லப்பிராணிகள் நம் வீட்டின் ஒரு அங்கம். அவற்றுக்குத் தங்களுக்கு ஏற்படும் உபாதைகளை வாய்விட்டுச் சொல்லத் தெரியாது. அதனால், மழைக்காலம் முடியும் வரையாவது, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளையாட விட்டுவிட்டு வீட்டுக்குள் வரும்போது, அவற்றின் உடலை ஒருமுறை முழுமையாகச் செக் செய்யுங்கள். உண்ணி இருந்தால் அதை அகற்றுங்கள். நம்முடைய சிறு கவனம், அந்த வாயில்லா ஜீவன்களைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com