
குளிர்காலத்தில், வீட்டுக்குள் இருப்பது கூட, ஃப்ரிட்ஜில் இருப்பது போல் தோன்றும். தரையில் கால் வைத்தால், ஏதோ ஐஸ்கட்டியில் மிதித்தது போல ஜில்லென்று இருக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் காலையில் கஷ்டபட்டு எழுந்தாலும், காலை தரையில் வைக்க முடியாத அளவிற்கு குளிர் வாட்டும். குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இது மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.
அதோடு, இது கால் வலி கால் மரத்துப் போதல் போன்ற பிரச்னைகளும் அசௌகரியங்களும் ஏற்பட வழிவகுக்கலாம். இந்நிலையில், வீட்டின் தரையை கதகதப்பாக வைத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய சில டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போமா?
குளிர்காலத்தில் வீட்டின் தரை ஜில்லென்று இருப்பதைத் தடுக்க தரையில், கம்பளம் மற்றும் தரை விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
தரை விரிப்புகள் போதிய அளவு இல்லாத சமயத்தில், வீட்டில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் துணிகளைப் பயன்படுத்தி தரை விரிப்புகள் செய்து கொள்ளலாம்.
சாக்குத் துணிகளால் தரையை மூடி விரிப்புகளாக பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது மேசை விரிப்புகளையும் ஸ்கிரீன் துணிகளையும் தரை விரிப்புகளாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் வழியாக, வீட்டின் தரையை கதகதப்பாக வைத்துக் கொள்ள முடியும். கால்களை குளிர்ச்சியாகமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
குளிர்காலத்தில் தரையைச் சுத்தம் செய்வதற்கு ஈரப்பதமான துணி, மாப் மற்றும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, வேக்குவம் கிளீனரைப் (Vacuum cleaner) பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெளியில் இருந்து வரும் குளிர்ந்த காற்றினால் கூடக் வீட்டின் தரை குளிர்ச்சியுடன் இருக்கலாம். எனவே, வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சிறு இடைவெளி விடாமல் மூடி வைக்க முயற்சி செய்யலாம். ஸ்கிரீன் துணிகளைக் கொண்டு, ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி குளிர்ந்த காற்று வீட்டினுள் நுழைவதைத் தடுக்கலாம்.
குளிர்காலத்தில், வீட்டு அறைகளையும் தரையையும் சூடாக வைத்துக் கொள்ள எல். ஈ. டி விளக்குகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இது உங்கள் வீட்டை மிதமான சூட்டில் இருப்பதுபோல் உணர வைக்கும். அல்லது மெழுகுவர்த்திகளையும் பொருத்துவதன் வழியாக உங்களையும் உங்கள் வீட்டையும் குளிரில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும்.
மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, வீட்டின் அறைகளையும் தரையையும், உங்கள் உடலையும் குளிர்காலத்தில் கதகதப்பாக வைத்துக் கொள்ளலாம்.