பால்கனி புறா தொல்லையா? பைசா செலவில்லாமல் விரட்ட இதோ 5 எளிய இயற்கை வழிகள்!

Natural pigeon repellent ideas
Natural pigeon repellent ideasAI Image
Updated on

புறாக்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவை வீட்டு பால்கனியில் குடியேறினால் பல பிரச்னைகளை உருவாக்குகின்றன. புறாக்களின் எச்சம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், கட்டிடத்தின் அழகையும் கெடுக்கின்றன. மேலும் அவற்றின் கழிவுகள் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துகின்றன. இரசாயனங்கள் அல்லது பறவைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் முறைகளைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் உங்கள் பால்கனியைப் பாதுகாப்பதற்கான வழிகளை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

பால்கனியை சுத்தமாக வைத்திருத்தல்:

புறாக்கள் தங்குவதற்கு முக்கியக் காரணம் அவை அமர்வதற்கு ஏற்ற இடங்களும், உணவும் கிடைப்பதுதான். பால்கனியில் சிந்தும் சிறு உணவுத் துணுக்குகள் அல்லது செல்லப் பிராணிகளின் உணவுகள் புறாக்களை ஈர்க்கும். எனவே, பால்கனியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

புறாக்கள் தாகம் தணிக்க தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களைத் தேடி வரும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் தட்டுகளில் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

தடைகளை உருவாக்குதல்:

புறாக்கள் அமர முடியாதபடி சில எளிய தடைகளை உருவாக்குவது மிகச்சிறந்த இயற்கை முறையாகும்.

நூல் அல்லது கம்பி கட்டுதல்: புறாக்கள் அமரும் கைப்பிடிச் சுவர்களுக்குச் சற்று மேலே (2-3 அங்குலம் உயரத்தில்) ஒரு மெல்லிய கம்பியையோ அல்லது நைலான் நூலையோ இறுக்கிக் கட்டலாம். இதனால் அவை சமநிலை இழந்து அந்த இடத்தில் அமர்வதைத் தவிர்க்கும்.

சாய்வான தளங்கள்: பால்கனியில் உள்ள தட்டையான பரப்புகளில் மரம் அல்லது பிளாஸ்டிக் பலகைகளை 45° கோணத்தில் சாய்வாகப் பொருத்தினால், புறாக்கள் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் விலகிச் செல்லும்.

ஒளியைப் பிரதிபலிக்கும் பொருட்கள்:

புறாக்களுக்குப் பிரகாசமான மற்றும் மின்னும் ஒளி பிடிக்காது. இது அவற்றின் பார்வையைச் சிதறடித்து அச்சத்தை ஏற்படுத்தும்.

பயன்படுத்தாத சி.டிக்கள்: பழைய சி.டிக்களைக் கயிற்றில் கோர்த்து பால்கனியில் தொங்கவிடலாம். காற்றில் அவை ஆடும்போது சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிப்பது புறாக்களை அருகில் வரவிடாமல் தடுக்கும்.

அலுமினியம் ஃபாயில்: பால்கனியின் ஓரத்தில் அலுமினிய ஃபாயில் தாள்களை ஒட்டி வைக்கலாம். இதுவும் ஒளியைப் பிரதிபலிப்பதோடு, ஒருவித சத்தத்தையும் உண்டாக்கி புறாக்களை விரட்டும்.

இதையும் படியுங்கள்:
நந்தவனத்து பூக்கள்: குழந்தைகளை வளர்க்கும் கலையும்... பெற்றோரின் கடமையும்!
Natural pigeon repellent ideas

இயற்கை வாசனைப் பொருட்கள்:

சில குறிப்பிட்ட வாசனைகள் மனிதர்களுக்குப் பிடித்தாலும், பறவைகளுக்கு அவை எரிச்சலைத்தரும்.

காரமான பொடிகள்: மிளகுத் தூள், காய்ந்த மிளகாய் பொடி அல்லது இலவங்கப்பட்டை பொடியை புறாக்கள் அடிக்கடி அமரும் இடங்களில் தூவி விடலாம். இதன் காரமான மணம் புறாக்களை அங்கிருந்து ஓடச் செய்யும்.

வினிகர் மற்றும் தண்ணீர்: சமஅளவு வினிகர் மற்றும் தண்ணீரைத் கலந்து பால்கனியில் தெளிப்பதன் மூலம் அந்த வாசனைக்கு பயந்து புறாக்கள் வராமல் தடுக்கலாம்.

பொம்மைகள்:

பொம்மைப் பாம்புகள்: ரப்பர் பாம்புகள் அல்லது ஆந்தை போன்ற பொம்மைகளை பால்கனியின் மூலையில் வைக்கலாம். இதை உண்மையான எதிரி என்று நினைத்து புறாக்கள் நெருங்காது. ஆனால், ஒரே இடத்தில் வைக்காமல் அவ்வப்போது இடமாற்றி வைப்பது அவசியம்; இல்லையெனில் அவை பொம்மை என்பதைப் புறாக்கள் கண்டறிந்துவிடும்.

மேலே சொன்ன முறைகள் அனைத்தும் புறாக்களுக்குத் தீங்கு விளைவிக்காத, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகள். இவை உடனடியாக 100% பலன் தராவிட்டாலும், பொறுமையுடன் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பால்கனியைப் புறாக்களின் தொல்லையிலிருந்து நிரந்தரமாகப் பாதுகாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com