வாழ்க்கையில் அனைவருமே ஆரோக்கியமாக இருப்பதுடன், அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ‘வலிய வரும் வம்பு சண்டைகளுக்குப் போகாமல் இருந்தாலே நிம்மதியாக இருக்கலாம்’ என்பார்கள் பெரியவர்கள். அமைதியைத் தேடி பல வகையான வழிகளில் முயற்சி செய்பவர்கள் இந்த ஒற்றை வார்த்தையான, ‘நோ’வை உபயோகித்து உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழலாம்.
1. உணவு: வயிற்றில் பசி இல்லாதபோது யார் உபசரித்தாலும் அது அமுதமே ஆனாலும், ‘நோ’ சொல்லி விடுங்கள். திணிக்கப்படும் உணவுகள் விஷமாகி ஆரோக்கியக் கேடு தரும் என்பதை அறியுங்கள்.
2. ஓய்வு: தேவையற்ற நேரத்தில் ஓய்வு எடுக்கச் சொல்லி மனம் அடம்பிடிக்கும். அந்த நேரத்தில், ‘நோ’ சொல்லிவிட்டு பிடித்த வேலைகளைச் செய்யுங்கள். அதிக ஓய்வு என்பது நேரத்தை வீணாக்கும். வெற்றியைத் தடுக்கும்.
3. தூக்கம்: ஒருவருக்கு தினமும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் தேவைதான். ஆனால், விழிப்பு வந்த பின்னும் சொகுசாக படுக்கையில் படுத்துக் கிடப்பத சோம்பல் தந்து விடும். அதற்கு ‘நோ’ சொல்லி சோம்பலை தூரத்தில் தள்ளுங்கள்.
4. டிவி, செல்போன்: தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மட்டுமே நேரத்தை கழிக்கின்றனர். தேவைக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்தி, மற்ற நேரங்களில் அதற்கு ‘நோ’ சொல்வது கண்களுக்கு நல்லது மட்டுமல்ல, மனதிற்கும் அழுத்தத்தைத் தவிர்க்கும்.
5. நொறுக்குத்தீனி: கண்ட நேரத்தில் உண்ணத் தூண்டும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சத்தற்ற நொறுக்குத்தீனிகள் நாக்குக்கு ருசிதான். ஆனால், உடலுக்குக் கிடையாது. கண்டிப்பாக அவற்றுக்கு ‘நோ’ சொல்லி விடுங்கள்.
6. குளிர்பானங்கள்: நொறுக்குத்தீனிகள் வரிசையில் வரும் பாட்டில் பானங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரும் கேடு தருபவையாகும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடியுங்கள். அல்லது இளநீர், பிரெஷ் ஜூஸ் குடியுங்கள். வாயு அதிகமுள்ள சோடா பானங்களுக்கு ‘நோ’ சொல்லி விடுங்கள்.
7. பிடிவாதம்: மன அழுத்தம் தரக்கூடிய பிடிவாதத்துக்கு ‘நோ’ சொல்லவேண்டியது மிகவும் அவசியம். பிடிவாதம் நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும், நாமும், நம்மை நேசிப்பவர்களையும் விலக வைத்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
8. விவாதம்: தேவையற்ற விவாதங்களுக்கு அவசியம் ‘நோ’ சொல்லி விலகி விடுங்கள். நேர்மையான விவாதத்தை எதிர்கொள்ளலாம். நேர விரயத்துடன் மன உளைச்சளையும் தரும் விவாதத்தால் எந்தப் பயன் இல்லை.