
திருமணத்தை வெற்றிகரமாக்குவதற்கு சில திறன்களை வளர்த்துக்கொள்வது நல்லது. தம்பதிகளுக்கிடையே உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் நம்பிக்கைகளின் வெளிப்படையான பரிமாற்றத்தில்தான் திருமண பந்தம் செழித்து வளர்கிறது. அதனைப் போற்றி பாதுகாப்பதற்கு சில திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.
1. தகவல் தொடர்பு திறன்கள்: நல்ல தகவல் தொடர்புத் திறன்கள் உறவை மேம்படுத்துவதற்கு முக்கியமான தேவையாகும். திருமண உறவுகளில் தொடர்பு என்பது ஒரு நதி ஓடை போன்றது. எண்ணங்களும் உணர்வுகளும் அமைதியாகப் பாயும் பொழுது அது ஒரு அழகான சூழலை உருவாக்கும். அதுவே கொந்தளிப்பாக இருக்கும்பொழுது அழிவுகரமானதாக மாறிவிடும். தண்ணீர் ஓட்டம் தடைபடுவது போல தகவல் தொடர்பு தடைபடும்பொழுது அழுத்தம் அதிகரித்து வார்த்தைகள் தடித்து விடுகின்றன. அது சுமுகமான சூழ்நிலையை பாதித்து விடுகிறது. நல்ல தகவல் தொடர்பு முறையை கொண்டிருப்பது அன்பையும் ஆர்வத்தையும் தூண்டி நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
2. காது கொடுத்துக் கேட்பது: பெரும்பாலும் நாம் மற்றவர்கள் பேசுவதை பொறுமையாக காது கொடுத்துக் கேட்பதில்லை. நாமே பேசிக் கொண்டிருக்கிறோம். இதனால் பிரச்னைகள் அதிகமாகிறது. எனவே, நம் துணை நம்மிடம் பேச வரும் பொழுது, முழுவதுமாக கவனம் செலுத்தி அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவசர அவசரமாக எதிர் பதில் கொடுப்பது தேவையற்றது. பதில் அளிப்பதற்கு முன்பு முழுமையான மனதுடன் கேட்க முயற்சிக்கவும். ஒரு பயனுள்ள உரையாடல் என்பது இரண்டு பக்கங்களில் இருந்தும் வர வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. உங்கள் குறைபாடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்: ஒரு பிரச்னை என்று வரும்போது நம் மீது தவறு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்கக் கூடாது. ஈகோவை ஒதுக்கிவிட்டு நல்ல முன்மாதிரியாக இருந்து, நம் குறைபாடுகளை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இதன் மூலம் இருவருடைய பரஸ்பர புரிதலும் அதிகரித்து உறவை நெருக்கமாக்கும். தனிப்பட்ட பொறுப்பு என்பது பலவீனம் என்பதை விட, பலம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் பக்கம் தவறு இருப்பின் அதை ஒப்புக்கொள்ள தயங்கக் கூடாது.
4. சமரசம் செய்ய முயற்சி செய்யுங்கள்: எப்போதும் வாதம் செய்யும்பொழுது வெல்வதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக, அந்தப் பிரச்னைகளையும், தேவைகளையும் தீர்க்கும் வழியைக் கண்டறிய வேண்டும். இருவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஆக்கபூர்வமான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கணவன், மனைவி இருவருமே ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்துவது அவசியம். வாதம் செய்யும்பொழுது உங்கள் துணையை கடந்த கால தவறுகளுக்கு குற்றவாளியாகவோ, பொறுப்பாளியாகவோ ஆக்க முயற்சிக்கக் கூடாது. இது மனதில் நீங்காத வடுவாக மாறி பிரச்னைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
5. விமர்சனங்களுக்கு செவி சாயுங்கள்: நம் செயல்களை விமர்சிக்கும்பொழுது தற்காப்பு உணர்வுடன் அதை மறுப்பது தவறு. விமர்சனத்தை ஏற்றுக்கொள்வது எப்பொழுதுமே கடினமாகத்தான் இருக்கும். இருப்பினும் வார்த்தைகளை விட அந்த விமர்சனத்திற்கு பின்னால் உள்ள காரணத்தில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையிலேயே அந்த விமர்சனம் சரியாக இருந்தால் ஒப்புக்கொண்டு, அதனை மாற்றிக் கொள்வதற்கு வழி தேட வேண்டும். விமர்சனங்கள் எப்பொழுதுமே நம்மை மெருகேற்றவே செய்யும்.
6. கண்ணோட்டத்தை மாற்றுங்கள்: கோபங்கள் வெடிக்கும்பொழுது அவை ஆக்ரோஷமாக மாறாமல் இருப்பதற்கு ஒரு சிறிய இடைவெளியை எடுத்துக் கொள்ளலாம். ‘இந்தச் சின்ன வேலையைக் கூட உன்னால் செய்ய முடியவில்லையா?’ என்றோ, ‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்பது போன்ற வார்த்தைகளையோ பயன்படுத்த வேண்டாமே. அதற்கு பதில், அந்த செயலால் நாம் அடைந்த வருத்தத்தை மெதுவாக பதிவு செய்வதன் மூலம் வாக்குவாதங்கள் நீடிக்காமல், குற்றச்சாட்டுகளை அடுக்கி ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதை விட, நம் உணர்வுகளையும், கண்ணோட்டத்தையும் பிறர் புரிந்து கொள்ளும் வகையில் பேசுவதும், மௌனம் சாதிப்பதும் சிறந்ததல்லவா!