
அறுபது வயதினர் குழந்தைகள் என்றால், எண்பது வயதினர் கைக்குழந்தைகளுக்குச் சமம். அறுபதில் அடியெடுத்து வைப்பதை ஒருவகையில், 'முதுமையில் இளமை' என்றே சொல்லலாம். அப்படியென்றால் எண்பதில் அடி எடுத்து வைப்பதை என்னவென்று சொல்வது? இன்னொரு குழந்தை என்றா? பிறந்த குழந்தையைப் பார்த்துப் பார்த்து வளர்ப்போம் அல்லவா? அதேபோல்தான் எண்பதுகளில் இருந்த மாமாவையும் அத்தையையும் நான் பார்த்துக்கொண்டேன்.
எலும்பு வலிமை இழத்தல் என்கிற ஆஸ்டியோபொரோசிஸ் முதலில் வந்தது. அதனால் குறைந்தது இருபது நிமிடமாவது மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வைத்தேன். அதேபோல், ஒரு பத்து நிமிடம் தோட்டத்தில் நாற்காலி போட்டு சூரிய ஒளியில் அமரச் செய்தேன்.
அவர்கள் உணவில் சிறு சிறு மாற்றங்களாக சிறுதானியங்களில் கஞ்சி, தினமும் கீரை, கருவேப்பிலை பொடி சூடான சாதத்தில் பிசைந்து ஒரு கவளம்... இதையெல்லாம் பின்பற்றினேன். காலை 10 மணிக்கு என் வேலைகளை எல்லாம் முடித்த பிறகு மாமாவிடம் சென்று அன்றைய சமையல், நாளிதழில் வந்த செய்திகளைப் பற்றி எல்லாம் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகே என் வேலைகளைத் தொடர்வதை வழக்கப்படுத்திக்கொண்டேன்.
அதேபோல், மாலை தேனீர் அருந்தும் நேரத்தில் மாமாவிடம் சென்று குடும்ப நிகழ்வுகளைப் பற்றி பேசி வருவேன். ஒருபோதும் எனது மாமா, 'போர் அடிக்கிறது' என்று சொன்னதே இல்லை. நான் எங்கு வெளியில் சென்று திரும்பி வந்தாலும் அவருக்காக அவருக்குப் பிடித்த புத்தகங்கள் வாங்கிவந்து தருவேன். (புத்தக வாசிப்பு அவருக்கு மிகவும் பிடிக்கும்.) அவர் தன்னை தனிமையில் இருப்பதாக ஒருபோதும் எண்ணியது இல்லை.
நன்றாகப் பேசி இரவு வணக்கம் சொல்லி தூங்கச் சென்ற மாமா காலையில் எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அத்தைக்குத்தான் மாமாவின் பிரிவினால் வருகிற மன அழுத்தம் வந்தது. 60 வருடம் மாமாவுடன் அந்நியோன்யமாக வாழ்ந்த அத்தை, மாமா தவறியதும் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
அதிகப்படியான முட்டி வலியினாலும், இரண்டு முறை வழுக்கி விழுந்ததாலும், அத்தை படுத்த படுக்கையாகி விட்டார். (அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை) வீடு, பள்ளி, கணவர், பிள்ளைகள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர் உடல் பலவீனமாகி படுக்கையில் விழுந்துவிட்டதும், 'யாருக்கும் பலனில்லாமல் இப்படிப் படுக்கையில் கிடக்கிறோமே' என்கிற சுய இரக்கம் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது. நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் அனைவரும் அவரை தனியே விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக்கொண்டோம். ‘தான் எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்தது போய் தனக்கு எல்லோரும் செய்யும்படி ஆகி விட்டதே' என்ற மனக்கவலை அவர்களுக்கு நிறைய இருந்தது.
அவரின் பள்ளி வாழ்க்கை, அவரின் சக ஆசிரியைகள், வகுப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்... எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிப் பேசி அவரை சரி செய்தோம். வார விடுமுறை நாட்களில் கண்டிப்பாக அவருடன் உணவருந்துவது எங்களது ப(வ)ழக்கமானது.
மாமா தவறிய பிறகு, முழுக்க முழுக்க மகன்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என அவர்கள் எண்ணக்கூடாது என்று பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிற்கு முதலிலேயே அவரிடம் பணத்தைக் கொடுத்து பிள்ளைகளாகட்டும், நாங்களாகட்டும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி, அவர்கள் கையால் பணத்தைப் பெற்றுக்கொள்வோம். இது அவர்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஒருசேரத் தந்தது.
அதுமட்டுமல்ல, இரவில் தூங்கும்போது அவர்கள் தனியாக உறங்கக்கூடாது என்று ஒரு வாரம் என் கணவரும், மறுவாரம் என் மைத்துனரும் மாறி மாறி அவர்களுடன் படுத்துக்கொள்வார்கள்.
இப்படி அவர்கள் தனியே இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட எழாமல் பார்த்துக்கொண்டோம். மொத்தத்தில் ஓய்வு பெற்ற எனது மாமா, அத்தைக்கு கூடுமானவரை வீட்டில் இதமான சூழ்நிலையைத் தந்தோம். அவர்கள் உபயோகமில்லாது போய்விடவில்லை. அலுவலகம், பள்ளி தொல்லைகளிலிருந்து விடுபட்டுச் சற்றே நிம்மதியான சூழ்நிலையில் ஓய்வெடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பதை உணரச் செய்தோம். பேரன், பேத்திகள் எல்லோரும் தொடர்ந்து அவர்களை மரியாதையுடனும், மனம் நோகாத பேசும்படியும் பார்த்துக்கொண்டோம். பழைய காலத்தை அசை போடும்போது, கேட்ட கதைதான் என்றாலும் உட்கார்ந்து பொறுமையாகக் கேட்டோம்.
இவையெல்லாம்தான் ஓய்வு பெற்றவுடன் இருக்கக்கூடிய உடைந்த மனதை சரிபடுத்தும். இத்தனை வருடங்களாக வேலைக்குப் போய்க்கொண்டு எங்களையும் கவனித்த எங்கள் அத்தை மாமாவுடன் நட்புறவாகப் பேசி சின்னச்சின்ன காரியங்களில் ஈடுபடுத்தினோம்.
இன்றைய 20; நாளைய 60 என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்வில் என்றும் மகிழ்வே! 60 வயது குழந்தைகளையும் 80 வயது கைக்குழந்தைகளையும் மகிழ்வித்து மகிழ்வோம்!