அதிக ஆசை எப்போதும் ஆபத்தில் முடியும்!

அதிக ஆசை
அதிக ஆசை
Published on

ம்மில் பலருக்கும் பணத்தின் மீது ஆசை இருக்கும். ஆனால், நியாயமில்லாத எந்த ஆசையும் ஆபத்துதான் என்பதை உணராமல் சில சமயம் செயல்படுவோம். எதிலும் அளவோடு ஆசைப்பட வேண்டும். அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடையாளம் என்பதை உணர்த்தும் நிகழ்வுதான் இது.

ஒரு பிச்சைக்காரன் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் யாசகம் எடுத்து வந்தான். அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் அவன் நன்கு அறிவான். அவன் எப்போதும் முதுகில் ஒரு பழைய பையைச் சுமந்து வருவான். அதில் பழைய துணிகளும் பேப்பர்களும்தான் இருக்கும். எந்த வீட்டிலாவது அவனுக்கு எதுவும் போடவில்லை என்றால், சத்தமாக முணுமுணுத்துக் கொண்டே நகர்வான். அதற்குப் பயந்து, பெரும்பாலான வீடுகளில் அவனுக்கு ஏதாவது கொடுத்துவிடுவார்கள்.

இப்படி அவன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை ஒரு தேவதை ஒன்று பார்த்தது. ஒரு நாள் ஒரு வீட்டில் அவனுக்கு எதுவும் போடவில்லை. “வீடுதான் மிகப் பெரியது. ஆனால், இங்கு இருப்பவர்களிடம் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. யாருக்கும் கொடுக்கும் மனதும் இல்லை. கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அடுத்த வீட்டிலும் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. "இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால், இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல், அதைச் சூதாட்டத்தின் மூலம் பல மடங்காக ஆக்கலாம் என நினைத்தான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும், இந்தப் பிழைப்பை விட்டுவிட்டு நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடுவேன். பேராசைப்பட மாட்டேன்" என்றான்.

அவன் இப்படிச் சொன்னதும், அந்த தேவதை அவனுக்கு முன்பு தோன்றி, "நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கும் தேவதை. நீ உன்னுடைய பையைப் பிடி. அதற்குள் தங்க நாணயங்களை போடுகிறேன். அதை வைத்துக்கொண்டு நிம்மதியாக இரு" என்றது.

பிச்சைக்காரன் அந்த தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் இருந்த தங்கக் குடத்தில் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தன. எல்லாவற்றையும் தானே வாங்கிக்கொள்ள வேண்டும் என நினைத்தான். உடனே தனது பையைத் திறந்து, அதில் இருந்த எல்லாவற்றையும் கீழே போட்டான். பையை விரித்துப் பிடித்தான். அப்போது அந்த தேவதை, "பைக்குள் விழுகிற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை தவறிக் கீழே விழுந்தால் மண்ணோடு மண்ணாகிவிடும்" என எச்சரித்தது.

இதையும் படியுங்கள்:
பின் கழுத்து கருமைக்கான மருத்துவக் காரணங்களும் தீர்வுகளும்!
அதிக ஆசை

அவன் அதைக் காதில் வாங்கவில்லை. பையை விரித்துப் பிடித்தபடி இருந்தான். பை நிரம்பியதும், நாணயங்களைக் கொட்டுவதை தேவதை நிறுத்தியது. “இப்போது உன்னிடம் இருக்கிற நாணயங்கள், இந்த ஊரிலேயே உன்னை பெரிய பணக்காரனாக உன்னை மாற்றும். போதும்தானே?” என்றது தேவதை.

"இன்னும் வேண்டும்" என்றான் அவன். தேவதை மேலும் கொஞ்சம் போட்டது. “நீ ஆசையின் எல்லைக்கோட்டைத் தாண்டுகிறாய், பேராசைக்காரனாக மாறிவிட்டாய்” என்றது தேவதை. பிச்சைக்காரன் அப்போதும், "இன்னும் வேண்டும்" என்றான். தேவதை மேலும் கொஞ்சம் தங்க நாணயங்கள் கொடுத்துவிட்டு, "உனது பை கிழியப்போகிறது” என்றது. பிச்சைக்காரன் அதைக் கேட்காமல், “இல்லை... இன்னும் கொஞ்சம் போடு, எனது பை தாங்கும்" என்றான்.

மேலும், சில நாணயங்களைப் போட்டதுமே பை கிழிந்தது. உள்ளே இருந்த நாணயங்கள் கீழே விழுந்து மண்ணோடு மண்ணாக மாறின. தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார்கள். அது எப்படி என்றால் ஆசை நிராசையாகும் பொழுது. மன அழுத்தம் நம் உடல் நிலையை பாதிக்கும் அப்படி என்றால் அது துன்பம்தானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com