வளரும் வயதிலிருக்கும் சிறு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆரோக்கியம் தரும் சத்து மிக்க உணவுகளைக் கொடுத்து வளர்ப்பது மிக முக்கியம். அதில் முன்னணியிலிருக்கும் பத்து வகை இந்தியன் சூப்பர் உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்:
ராகி (கேழ்வரகு) மாவில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கவும், இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை உயரச் செய்யவும் உதவும். ராகி மாவில் கஞ்சி, தோசை, லட்டு போன்ற உணவுகளை தயாரித்து குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம்.
ஆம்லா (நெல்லிக்காய்) வில் வைட்டமின் C சத்துக்கள் மிக அதிகம். இவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் செரிமானம் சீராக நடைபெறவும், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். ஆம்லாவில் ஜூஸ், சட்னி போன்றவை செய்து குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம்.
நெய்யை ஆரோக்கியமான கொழுப்பின் பவர் ஹவுஸ் எனலாம். நெய் செரிமானம் சிறப்பாக நடைபெறவும், ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் உதவும். நெய்யை பருப்பு சாதத்தில் சேர்த்துப் பிசைந்து தினமும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்ப்பது சிறந்த பலன் தரும்.
மஞ்சளில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் அதிகம். அவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், காயங்கள் விரைவில் குணமடையவும் உதவும். மஞ்சள்தூளை பால் அல்லது சூப்பில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுக்கலாம்.
மக்கானாவில் கால்சியம் மற்றும் ப்ரோட்டீன் சத்துக்கள் அதிகம். இவை குழந்தைகளின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவும். நாள் முழுவதும் குழந்தைகளுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
பேரீச்சம் பழத்தில் இயற்கையான இனிப்புச் சத்தும் நார்ச்சத்தும் அதிகம். இவை உடலுக்கு அதிகளவு சக்தி தரக்கூடியவை. பேரீச்சம் பழங்களை ஸ்மூத்திகளில் சேர்த்தும், மற்ற நட்ஸ்களுடன் கலந்து சத்து உருண்டைகளாகப் பிடித்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
அதிகளவு இரும்புச் சத்து நிறைந்த வெல்லத்தை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதிலாக உணவுகளுடன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதிரசம், பணியாரம், ராகி புட்டு போன்ற ஸ்னாக்ஸ்களின் தயாரிப்பில் சேர்த்து செய்யலாம். வெல்லம் சிறப்பான செரிமானத்துக்கும் உதவும்.
தேங்காய் பூவில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து அதிகம். இதை பொரியல், சட்னி, ஸ்மூத்தி போன்றவைகளுடன் சேர்த்து சமைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தேங்காய்த் தண்ணி உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும்.
முளை கட்டிய மூங் தால், கம்பு, கேழ்வரகு, கொண்டைக் கடலை போன்றவற்றில் ப்ரோட்டீன் சத்துக்கள் அதிகம். இவை சுலபமாக ஜீரணமாகவும் செய்யும். இவற்றை சாலட் மற்றும் ஸ்டிர் ஃபிரை (Stir-fry) போன்றவற்றுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
ஸ்வீட் பொட்டட்டோவில் வைட்டமின் A மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம். இவை முறையே கண் பார்வை சிறக்கவும், செரிமானம் சீராக நடைபெறவும் உதவி புரிபவை. இவற்றை வேக வைத்து மசித்தும், ரோஸ்ட் பண்ணியும் கொடுத்து குழந்தைகளை உண்ணச் செய்யலாம்.
மேற்கூறிய உணவுகளை அடிக்கடி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாமே!