
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சிறு வயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்ற கனவு இருக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவ கனவு கனவாக மட்டும் இல்லாமல் நனவாகவும் சில மருத்துவம் தொடர்பான படிப்புகள் உள்ளன. பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்று மருத்துவ துறையை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு செய்ய ஏற்ற படிப்புகளின் பட்டியல் குறிப்புகள் சில:
1) BPT (இளங்கலை பிசியோதெரபி):
பிசியோதெரபிஸ்டாக விரும்பும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆறு மாத இன்டர்ன்ஷிப்பை உள்ளடக்கிய 41/2 ஆண்டு படிப்பான பி.பி. டி யை படிக்கலாம். உடல் இயக்கம் சார்ந்த நோய்களுக்கு எளிய உடற்பயிற்சிகள் மூலம் தீர்வு காணும் படிப்பாகும் . இந்த படிப்பில் சேர மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான பாடநெறி ஆறு மாத கட்டாய மருத்துவப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
2) இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் (BVSc):
கால்நடை மருத்துவம் என்பது கால்நடை மருத்துவ இயல் விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியது . இந்த கால்நடை மருத்துவ அறிவியல் கல்வி நடைமுறைத் தொழிற்கல்வியாகும். விலங்குகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் காப்பதே கால்நடை மருத்துவர்கள் பணியாகும். கால்நடை மருத்துவ இயல் விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான சிகிச்சைகளை பற்றியதாகும்.
3) பிஎஸ்சி கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜி:
இருதய நோய்கள் மற்றும் எக்கோ கார்டியோகிராபி , மைக்ரோபயாலஜி, நிணநீர் திசுக்கள் போன்ற பராமரிப்பு தொடர்பான படிப்பு இது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளில் உதவ முடியும்.
4) பிஎஸ்சி பயோடெக்னாலஜி:
மூன்று ஆண்டுகள் பயோடெக்னாலஜியில் இளங்கலை அறிவியல் படிக்கும் படிப்பு இது. மூலக்கூறு மற்றும் பயன்பாட்டு உயிர் வேதியியலில் கவனம் செலுத்துவதும், பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களுடன் மாணவர்களுக்கு போதுமான அறிவு மற்றும் திறன்களை வழங்கும் படிப்பு இது.
5) மருத்துவ ஆராய்ச்சியாளர்:
இந்த படிப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மனிதர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் பாதுகாப்பானதா என பரிசோதிக்கும் விஞ்ஞானிகள் இவர்கள். இந்த படிப்பில் சேர பார்மசி, மருத்துவம், உயிரியல் துறையில் இளங்கலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
6) உணவியல் நிபுணர் :
டயட்ரீசியன் படிப்பு உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஏற்ப உணவு முறைகளை ஒழுங்குபடுத்தும் படிப்பாகும். மூன்று ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும் இத்துறை சார்ந்த படிப்பிற்கு பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதில் சமுதாய உணவியல், நிர்வாக உணவியல் , ஆலோசனை உணவியல் நிபுணர், மருத்துவ உணவியல் நிபுணர் போன்ற பல துறைகளும் உள்ளன. நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மதிப்பிடுதல் , தனி நபர்களுக்கான உணவு திட்டம் வகுத்தல், ஆலோசனை வழங்குதல் போன்றவை அடங்கும்.
7) பிஎஸ்சி சைக்காலஜி:
சைக்காலஜி என்பது உளவியல் சம்பந்தப்பட்ட படிப்பாகும். மூன்று ஆண்டுகள் படிப்பிது. மனித நடத்தை மற்றும் மனதை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்வதற்கான ஒரு இளங்கலை பாடத்திட்டமாகும். மனிதவள மேம்பாடு, தொழில் மற்றும் பிற துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
8) பிஎஸ்சி நர்சிங்:
செவிலியர் படிப்பிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பான பணி இது. இது நான்கு ஆண்டுகால இளங்கலை பட்ட படிப்பாகும்.
9) BDS ( இளங்கலை பல் அறுவை சிகிச்சை):
பல் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே தொழில்முறை படிப்பாகும். இது ஐந்து ஆண்டுகள் கொண்டது.
10) BSMS (இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை):
இளங்கலை சித்த மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் +2 வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு படிப்பும் பின்பு ஒரு ஆண்டு பயிற்சியும் இருக்கும்.