
தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களில் விளையாட்டிற்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. கபடியில் தொடங்கி ஏறு தழுவுதல் வரை என்று சொல்லிக் கொண்டே போகலாம்..! அதிலும் குறிப்பாக நகைச்சுவையோடும், அலுப்பு தெரியாமலும் கலகலப்போடு விளையாடும் விளையாட்டுகளை பற்றி கூற வார்த்தைகளே இல்லை! அப்படிப்பட்ட விளையாட்டுகள்தான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.
பொதுவாக கிராமங்களில் ஆலமரத்தின் நிழலில் சிறுவர்கள் கோலி குண்டு அடித்தல், பம்பரம் சுற்றுதல், ஆலமர விழுதை பிடித்து தொங்குதல், ஊஞ்சலாடுதல், என்று விடுமுறை நாட்களில் சுவாரசியமாக பொழுதை கழிப்பார்கள். அதேபோல் சிறுமிகளும் நொண்டி, பல்லாங்குழி தாயக்கல், சிலுக்கட்டை என்று விளையாடுவார்கள். இது மட்டுமில்லாமல் மரத்தில் அடைந்துள்ள கிளிகள், புறாக்கள், காக்கைகளை பார்த்து ரசிப்பதும் சிரிப்பதும் என்று ஆலமரத்தைச் சுற்றி ஒரே குதூகலமாகவே இருக்கும்.
அப்போது கூட்டாஞ்சோறு ஆக்குகிறோம் என்ற பெயரில், கொட்டாங்குச்சியில் தண்ணீரை ஊற்றி அதில் ஆல மர இலைகள், பழங்களை குட்டி குட்டியாக வெட்டி போட்டு, அடியில் மூன்று கல்லை வைத்து காய்ந்த ஆலங்குச்சிகளை எரிய விட்டு ஜாலியாக கொட்டாங்குச்சியில் குழம்பு போல் செஞ்சி, ஒருவருக்கொருவர் ஆலமர இலையில் சோற்றுக்கு பதிலாக மண்ணைப் போட்டு குழம்புக்கு பதிலாக கொட்டாங்குச்சியில் செய்த குழம்பை ஊற்றி தின்பது போல் தின்னாமல் கூடி சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவார்கள்.
இதுபோல் ஆடி பாடி ஓடி சந்தோஷமாக விளையாண்ட குழந்தைகளின் சந்தோஷம், இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது! இதற்கெல்லாம் காரணம் மொபைல்தான். செல்போனிலேயே ஒரு பேச்சு இல்லாமல், கலகலப்பு இல்லாமல் ஊமை போல் உட்கார்ந்த இடத்திலேயே விளையாண்டால் எப்படி சந்தோஷம் கிடைக்கும்?
இதைப்பற்றி இப்போது உள்ள பெற்றோர்களுக்கு முறையான விழிப்புணர்வு இல்லை என்றே கூறலாம். ஓடி ஆடி விளையாடுவதால் குழந்தைகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் மேம்படும்! சோம்பேறியாக போனில் விளையாண்டால் குழந்தைகளுக்கு எப்படி ஆரோக்கியம் மேம்படும்? இப்போதுள்ள பெற்றோர்கள் அவர்கள் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அனுபவித்த சந்தோசத்தை அவர்கள் குழந்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே! என்று சொல்லும் போது பரிதாபமாகதான் இருக்கின்றது!
இதற்கு முதலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஃபோனில் விளையாடுவதை கண்டிக்க வேண்டும். அதற்கு பதிலாக தாங்கள் சிறுவயதில் விளையாண்ட பல்லாங்குழி, பம்பரம், நொண்டி, தாயக்கல், கிட்டிப்புள், சிலுக்கட்டை போன்ற விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கலாம். இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையும் ஆரோக்கியமும் மேம்படும்.
இப்படி அதிக நேரம் போனை பார்த்து விளையாடுவதால் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு, மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
80’s, 90’s காலகட்டத்தில் வாழ்ந்த குழந்தைகளின் மனநிலையை விட, இப்போது 2’k காலகட்டத்தில் வாழும் குழந்தைகளின் மனநிலை ஆனது சற்றே மாறுபட்டு காணப்படுகிறது. இதிலும் குறிப்பாக இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மன அழுத்தம், பதட்டம் ஏற்பட என்ன காரணம் என்று கேட்டால் மொபைல்தான்…! ஆடி பாடி ஆலமரத்தடியில் சந்தோஷமாக விளையாண்ட வாழ்க்கை 90’s காலத்தோடு முடிந்து விட்டது. இப்போது இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துயிர் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் பெற்றோர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது..!