
நாம் கடைகளிலிருந்து வாங்கி வரும் புதினா போன்ற மூலிகை இலைகளை, அன்றே பயன்படுத்தாமல் வைத்திருந்தால், மறுநாள் அவை வாடி, வதங்கி, நிறம் மங்கி, சுவை குன்றி தூக்கி எறியும் நிலைக்கு சென்று விடும். தற்காலப் பெண்மணிகள் அவற்றை மீண்டும் உபயோகப்படுத்துவதற்கு, அதை நன்கு கழுவித் துடைத்து, பிளாஸ்டிக் டப்பா அல்லது துளைகளிட்ட எவர் சில்வர் டப்பாவில் வைத்து மூடி ஃபிரிட்ஜில் வைப்பதுண்டு. சிலர் ஈரத் துணியில் வைத்து சுருட்டி ஃபிரிட்ஜில் வைப்பதும் உண்டு.
இதெல்லாம் நமக்கு எதிர்பார்த்த பலனைத் தராது. இந்த மாதிரியான நவீன வீட்டு உபயோக சாதனைங்கள் ஏதுமின்றி, நம் முன்னோர்கள், மூலிகை தாவரங்களை வாடி வதங்காமல், வாசனை குன்றாமல் பல நாட்கள் வரை எப்படிப் பாதுகாத்து வந்தனர் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதுபோன்ற மூலிகை இலைகளை ஃபிரிட்ஜில் வைக்கும்போது, ஃபிரிட்ஜினுள் உள்ள ஈரப்பதமும் குளிர்ச்சியும் அவற்றை ஃபிரஷ்ஷாக வைத்துப் பாதுகாக்க உதவாது. அதற்கு பதில் நம் முன்னோர்கள் செய்தபடி, அதாவது கொஞ்சமாக ஈரப்படுத்திய துணியில் வைத்து மெதுவாக சுற்றி, அதை ஒரு மரத்தாலான கொள்கலனில் (Container) வைத்து அந்த மர டப்பாவை வீட்டிலுள்ள உலர்ந்த குளிர்ச்சியான இடத்தில் வைத்துவிட்டால், இலைகள் ஒரு வாரம் வரை பசுமை மாறாமல் புதிதாகவே இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டிய படிப்படியான வழிமுறைகள்.
கடையிலிருந்து ஃபிரஷ்ஷாக வாங்கி வந்த மூலிகைகளை, இலைகளில் கீறல் விழாதபடி மெதுவாக அழுக்குகள் நீங்கும்படி கழுவி, காற்றோட்டமாய் வைத்து அல்லது சுத்தமான காட்டன் துணியால் துடைத்தெடுக்கவும். நன்கு காற்றுப் புகும்படியான சுத்தமான லினன் அல்லது காட்டன் துணியில் மிகக் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஈரப்படுத்தவும். அதில் மூலிகைகளை வைத்து, அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக சுருட்டி ஒரு மர டப்பா அல்லது காற்றோட்டமான கார்ட்போர்டில் வைக்கவும்.
பிளாஸ்டிக் பைகள் அல்லது மூடி போட்ட டப்பாக்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அவை மேற்கொண்டு ஈரப்பதம் உண்டாகச் செய்து இலைகள் அழுகி விட வழி வகுக்கும். பின், மூலிகைகள் வைத்துள்ள மர டப்பாவை உலர்ந்த, சமையல் அறை அலமாரி அல்லது தரைப் பகுதி மூலையில் வைத்து விடவும். அவை ஒரு வாரம் வரையிலும் கூட பசுமை மாறாமல், சுருங்காமல், புதிதான தோற்றதுடனேயே காணப்படும்.
ரோஸ் மேரி மற்றும் தைமே (Thyme) போன்ற கடினமான தாவரங்களை மிகக் கொஞ்சமான ஈரப்பதம் கொண்ட துணியிலும், துளசி, கொத்தமல்லி போன்றவற்றை சிறிது அதிக ஈரம் கொண்ட துணியிலும் வைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஈரப்பதத்தை பரிசோதித்து, அததற்குத் தேவையான ஈரம் குறையாமல் வைத்துப் பராமரிப்பது மிகவும் முக்கியம். இந்த உத்திகளை சிறிதும் தவறாமல் பின்பற்றி, நாமும் இவற்றின் மணமும் சுவையும் குன்றாமல், சமையலில் பயன்படுத்தி நற்பலன் பெறுவோம்.