
நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பல தலைவர்களின் வாழ்வில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பை இந்தப் பதிவில் காண்போம்.
தண்டி உப்பு சத்யாகிரகத்திற்காக காந்தியடிகள் 24 நாட்களில் 241 மைல்கள் நடந்தார். 97 தொண்டர்களுடன் புறப்பட்ட இந்த யாத்திரை முடிவடையும்போது 2 மைல் நீளம் இருந்தது. 5.4.1930 அன்று காலை 8.30 மணிக்கு,உப்பைக் கையில் அள்ளினார் மகாத்மா காந்தி. அந்த உப்பு அப்போது 1,600 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட கையளவு உப்பு இதுதான்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆங்கிலேயப் படைகள் குதிரை மீது வந்து தடியால் அடித்தபோது, அடித்தவரின் முகத்தைப் பார்க்க கூடாது என்று கண்களை மூடிக் கொண்டார் ஜவஹர்லால் நேரு. ‘அடித்தவனைப் பார்க்காமல் ஏன் கண்களை மூடினீர்கள்?’ என்று நேருவிடம் கேட்டபோது, ‘இந்தியா விடுதலை பெற்ற பின்னர் நாமும் பதவியில் அமர்வோம். அப்போது நமது மனம், நம்மை அடித்தவனை பழி வாங்கிவிடக் கூடாது என்று நினைத்து அடித்தவனின் முகத்தை பார்க்க வேண்டாம் என கண்களை மூடிக் கொண்டேன்’ என்று பதிலளித்தார் நேரு. நம்மை துன்புறுத்தியவன் எதிரியாயினும், பழி வாங்கக் கூடாது என்ற மனித நேயத்தை கொண்டிருந்தவர் நேரு.
விடுதலைப் போராட்டக் காலத்தில் பாலகங்காதர திலகரின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசு ரகசிய போலீஸ்காரர் ஒருவரை திலகர் வீட்டில் சமையல்காராக இருக்கும்படி அனுப்பி வைத்தனர். அவரும் அப்படியே திலகரின் சமையல்காராகப் பணிபுரிந்து வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள், சமையல்காரராக இருந்த ரகசிய போலீஸ்காரர் திலகரை வணங்கி, ‘எஜமான், சம்பளம் போதவில்லை. போட்டுத் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு திலகர் சிரித்துக்கொண்டே, ‘ஏனப்பா, நான் உனக்கு ஆறு ரூபாய் சம்பளம் தருகிறேன். ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கமோ உனக்கு 25 ரூபாய் சம்பளம் கொடுக்கிறது. இன்னும் உனக்குத் திருப்தி ஏற்படவில்லை என்றால் நீ உன் முதல் எஜமானரான பிரிட்டிஷ் அரசாங்கத்திடம்தான் கேட்க வேண்டும்’ என்றார். ரகசிய போலீஸ்காரரின் தலை அவமானத்தால் தாழ்ந்து விட்டது. அதற்குப் பிறகு அவர் அங்கே வேலைக்கு வரவில்லை.
காந்திஜி சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் திரட்டும் நிதிக்காக உதவும்படி1945ல் நாட்டு மக்களிடம் வேண்டிக் கொண்டிருந்தார். ‘தாரக்’ என்ற ஒருவர், அதைக் கேட்டு மனமிரங்கி மத்திய பிரதேசத்திலிருந்து 30 ரூபாய்க்கு காசோலையை அனுப்பி வைத்தார். அதில் காந்தியின் இயற்பெயரை குறிப்பிடாமல் ‘மகாத்மா காந்தி’ என்று எழுதி விட்டார்.
ஆகவே, அதற்குப் பணம் தர வங்கி மறுத்து விட்டது. காந்திக்கோ, அந்தப் பணத்தை இழக்க மனமில்லை. அதனால் ‘மகாத்மா காந்தி’ என்றே கையெழுத்திட்டு,செக்கை அனுப்பி வைத்தார். ஆனால், மறுமுறையும் செக் திரும்பி வந்து விட்டது. ஏனெனில், கிராஸ் செய்த செக்கை அவருடைய பெயருள்ள கணக்கில்தான் வரவு வைக்க முடியும். ஆனால், செக்கில் இருந்த ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரில் எந்த வங்கியிலும் கணக்குக் கிடையாது. கடைசியில் ‘செக்’கை அனுப்பியவருக்கே அதை திருப்பி அனுப்பிவிட்டு, சரியான பெயரில் பணத்தை அனுப்பி வைக்குமாறு வேண்டிக்கொண்டார், காந்திஜி!
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு சமயம் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி ஒருவர் அரசாங்க அறிக்கையின் நகல் ஒன்றை ரகசியமாக ராஜேந்திர பிரசாத்திற்கு அனுப்பி வைத்தார். அதை உடனே அவர் குழுவினர் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டு போனார்கள். அதைப் படித்துப் பார்ப்பதற்கு முன்பு, அது எப்படி கிடைத்தது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டார். உடனே, அதைப் படித்துப் பார்க்க மகாத்மா காந்தி மறுத்து விட்டதோடு, அதை அந்த அரசாங்க அதிகாரியிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி ராஜேந்திர பிரசாத்திடம் கூறிவிட்டார்.
அதோடு, ‘ரகசியமான முறையில் கிடைக்கும் எதையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது’ என்று கட்டளையிட்டார். இப்படி நடைமுறையில் சத்தியத்தைக் கடைபிடித்து வர மற்றவர்களுக்கு போதித்தார் காந்திஜி.
‘கிராம பொருளாதார மேதை’ என்று புகழப்பட்ட ஜே.சி.குமரப்பா மிகவும் கண்டிப்பானவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்திஜி நடத்திய சேவாக் கிராமவாசிகளிடம் குற்றங்குறைகள் கண்டால் மிகவும் கடுகடுப்பாகத்தான் நடந்து கொள்வார். இது பற்றி மீரா பென் என்பவர் ஒரு முறை காந்திஜியிடம் புகார் செய்தார்.
அதற்கு காந்திஜி புன்முறுவலுடன் இப்படிக் கூறினார், ‘அந்த ஆசாமி மதராஸ்காரர். அவர் ரத்தத்தில் மிளகாய்க் காரம் சற்று கூடுதலாகவே ஊறியிருக்கும். நாம்தான் சற்று அனுசரித்துப் போக வேண்டும்’ என்றாராம்.