ரயில் நட்பு – 'அன்றும், இன்றும்' வாழ்க்கையே ரயில் போலே…

Train
Train
Published on

ரயில் வண்டி கண்டு பிடிக்கபட்ட நாளிலிருந்தே சொல்லப்பட்டுவரும் வாழ்க்கைத் தத்துவம் இது: நம் வாழ்க்கையும் ரயில் பயணம் போலதான். குறிப்பிட்ட இடத்திலிருந்து ரயிலில் ஏறும்போது நம்முடன் வேறு சிலரும் ஏறுவார்கள், நண்பர்களாவார்கள். ஆனால் நாமோ அல்லது அவர்களோ அவரவர் இறங்குமிடம் வந்து விட்டால் பிரிந்து விடுவோம்; பிறர் பயணைத்தைத் தொடர்வார்கள். இறங்கியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சிலர் ஏறி நம்முடன் பயணத்தைத் தொடரலாம். அவர்களுடனும் நட்பு கொள்ளலாம். இந்தப் புது நட்புக்கும் பயண நேரம்தான் காலாவதி நேரம்…

நட்பு, பாசம், அன்பு, சண்டை, பகை என்ற கணக்கில் வாழ்க்கைப் பயணம், ரயில் பயணம் இரண்டும் ஒன்றுதான். ஆனால் ரயில் பயணத்தில் நாம் இறங்கிக் கொள்ளும் இடத்தையும், நேரத்தையும் நாம் தீர்மானித்துக் கொள்கிறோம். ஆனால் வாழ்க்கையிலிருந்து நாம் இறங்க வேண்டிய நேரத்தை இறைவன்தான் தீர்மானிக்கிறார்.

ரயில் பயணத்துக்கு முன் பதிவு செய்து கொள்ள குறிப்பிட்ட பிரதான ரயில் நிலையங்களில் உள்ள அலுவலகத்திற்குச் செல்கிறோம்; அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து தருகிறோம். ரயில் அலுவலர் நாம் குறிப்பிடும் நாள், நேரத்தில், குறிப்பிட்ட ரயிலில் இடம் இருந்தால் உடனே பதிவு செய்து பயணச் சீட்டும் கொடுப்பார்; உரிய கட்டணத்தை நாம் செலுத்துகிறோம்.

‘‘எனக்கு லோயர் பர்த் வேணும் சார், இந்த ரயிலில் எந்தப் பெட்டியிலாவது இருக்கிறதா என்று பாருங்களேன்,‘‘ என்று நாம் கோரிக்கை விடுப்போம்.

அலுவலர் ‘‘லோயர் பர்த் ஒண்ணுமே இல்லையே சார்,‘‘ என்று கணினி தகவலை ஆதாரமாக வைத்து பதிலளிப்பார்.

‘‘அப்பர் பர்த்தாவது… கொஞ்சம் பாருங்களேன்.‘‘

அலுவலருக்கு இந்த இரண்டு வாக்கிய விசாரணையிலேயே எரிச்சல் வந்துவிடும். ‘‘அப்பர் பர்த்துமில்லே, சுந்தரர் பர்த்துமில்லே,‘‘ என்று தன் ஆன்மிக அறிவைக் கடுமையாக வெளிப்படுத்துவார்.

‘‘சரி, சம்பந்தர் ரயிலிலாவது இருக்கிறதா, பாருங்களேன்,‘‘ என்று நாம் வீம்புக்கு நம் ஆன்மிக அறிவைக் காட்டினால், அவருடைய ஆன்மிகம் ஆத்திரமாக மாறிவிடும். ‘‘என்ன சார், கிண்டல் பண்றீங்களா?‘‘ என்று கேட்டு முன்பதிவு விண்ணப்பப் படிவத்தை நம்மிடமே வீசி எறிவார்.

‘‘சார், சார், நான் கேலி பண்ணலே, சம் அதர் டிரெயின்ல இருக்கா பாருங்கன்னுதான் கேட்டேன்,‘‘ என்று மனசுக்குள் விஷமமாகச் சிரித்துக் கொண்டு நாம் பேசினால், அவரும் சிரித்து விடுவார். ரயில் பயணத்தின் முதல் பகை/நட்பு இதுதான்.

இதையும் படியுங்கள்:
மன நலனைக் காக்கும் 6 மந்திரங்கள்!
Train

இப்போதெல்லாம் ஆன்லைன் புக்கிங், தத்கல் பதிவு என்றெல்லாம் வந்துவிட்டதால், முன்பதிவு கவுண்டரில் பாதி சண்டை குறைந்து விட்டது.

யந்திரத்தனம் என்பது இதுமாதிரியான ரயில்வே முன்பதிவு வசதிக்கும் மிகவும் பொருந்தும். ஆமாம், முன்பெல்லாம், ஒவ்வொரு பெட்டியிலும் அதில் யாரெல்லாம் பயணிக்கிறார்கள், எங்கே இறங்கப் போகிறார்கள் என்ற விவரம் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். பிறருக்கு முன்னால் நம் லக்கேஜுகளுக்கு இடம் பிடிக்கும் ஆக்கிரமிப்பு ஆர்வத்தில் ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னாலேயே போய்விடுவோம். கீழ் பர்த்துக்கு அடியில் லக்கேஜைத் திணித்துவிட்டு, நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியே வந்து பயணியர் பட்டியலை நோட்டம் விடுவோம். நமக்கு அடுத்த, அடுத்தடுத்த இருக்கையை/படுக்கையைப் பயன்படுத்துபவர் யார் என்றெல்லாம் கவனித்துக் கொள்வோம். நினைவுத் திறன் ஆரோக்கியமாக இருந்தால் அந்தப் பெயர்களும் ஞாபகத்தில் இருக்கும். ரயில் பயணம் தொடங்கும்போதே, ஏற்கெனவே இவ்வாறு தெரிந்து கொண்ட சக பயணியர்களின் பொது விவரங்களை வைத்து, ‘மதுரையா சார்? நான் திருநெல்வேலி,‘ என்று ஆரம்பித்து இருவரும் ஒரே மன அலைவரிசையில் இருந்தால், தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம், சிலசமயம் இரவு உணவு பகிர்தலும் நட்பை வலுப்படுத்தும். நிறைவாக விஸிடிங் கார்டு அல்லது தொலைபேசி எண் பரிவர்த்தனையுடன் பயணமும், சந்திப்பும் முடியும். பின்னாளில் அந்த எண்ணைத் தொடர்பு கொள்கிறோமா, இல்லையா என்பது வேறு விஷயம். அன்றைய பயணம் சுமுகமாக, இனிய நட்புடன் நிறைவடைந்தது என்ற திருப்தி இருந்தது.

இதையும் படியுங்கள்:
பழங்கால கிராமத்து வாட்டர் ஹீட்டர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Train

இப்போதெல்லாம் முன்பு மாதிரி இல்லை. பெட்டிக்கு வெளியே பட்டியல் ஒட்டப்படுவதில்லை; தன் இருக்கை எது என்று விடும் நோட்டம், பகை ஒளியைத்தான் பரப்புகிறது. லக்கேஜ் ஆக்கிரமிப்பின் எல்லைச் சண்டையும் ஆரம்பமாகிவிடும். இந்த சண்டையாளருடன் வரும் குடும்பத்தார் அல்லது நண்பர்கள் மூலம் சமாதானமோ, தொடர் வாக்குவாதமோ ஏற்படும்.

ஒருங்கிணைந்த பயணம் சில மணி நேரம்தான் என்ற புரிதலை தினந்தோறும் ரயில் நமக்குத் தந்து கொண்டுதான் இருக்கிறது; அதையே வாழ்க்கை முறையாக அனுசரித்துக் கொள்ள முடியாதபடி நம் ஈகோ தடுக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com