
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் வந்தவுடன் பொதுவாக ஆடை, ஆபரணங்களில், அழகுப் பொருட்களில் நம் மனதைப் பதிப்போம். அந்த விசேஷத்திற்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பிப்போம். ஆனால், முக்கியமான சிலவற்றை கடைசியில் எடுத்துச் செல்லலாம் என்று மறந்து விட்டுச் செல்வதும் பலரது வழக்கம். அப்படி வெளியூர் செல்கையில் மறக்காமல் எல்லாவற்றையும் எடுத்துச் செல்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
நாம் திருமணம், காது குத்து, முடி இறக்குதல், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் என்று ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிக்கு வெளியூருக்குச் செல்வதாக முடிவு செய்து இருந்தால், அதோடு சேர்த்து அங்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கும் போய் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டுதான் புறப்படுவோம். சொந்தங்களை விட்டு நீண்ட தொலைவில் வசிக்கின்ற நாம், வெளியூரில் நடைபெறும் ஒரே ஒரு நிகழ்ச்சியாக மட்டும் பயணிக்க விரும்ப மாட்டோம்.
அப்படிப் பயணிக்கும் முன்பு யார் யார் வீட்டுக்கு என்னென்ன பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதை எழுதி வைத்துக் கொண்டால், அங்கு சென்று எதையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல், யார் யார் வீட்டுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கினோம் என்பதை தனித்தனி கவரில் அவரவர்களின் பெயரை எழுதி வைத்துவிட்டால், அவற்றை கொடுக்கும்போது தேட வேண்டிய அவசியம் இருக்காது. இதேபோல், துணிமணிகள், கொடுக்க வேண்டிய அன்பளிப்பு அனைத்தையும் அவரவர் வீட்டுக்கான கவர்களில் போட்டு வைத்து விட்டால் எடுப்பதும் கொடுப்பதும் சுலபம்.
அதேபோல், எந்த விசேஷத்திற்காக ஊருக்குச் சென்றிருக்கிறோமோ அந்த விசேஷத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து கொண்டு தப்பாமல், தவறாமல் பத்திரிக்கையையும் எடுத்து வைத்துக் கொண்டு செல்வது நல்லது. அதை விடுத்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்ட பின்பு கடைசியாக பத்திரிக்கையை எடுத்து வைத்துக் கொண்டு செல்லலாம் என்று நினைத்திருப்போம். ஆனால், அதை கடைசியில் ஞாபக மறதியாக விட்டு விட்டுச் செல்பவர்களும் உண்டு.
ஆதலால் வாட்ஸ் அப்பில் பத்திரிக்கை அனுப்பாதவர்கள் வீட்டுப் பத்திரிக்கையை, நேரில் கொடுத்து இருக்கிறார்கள் என்றால், அதை வாட்ஸ் அப்பில் ஏற்றி விடுங்கள். அது மிகவும் பாதுகாப்பு. செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் நல்ல வழிகாட்டி அந்த பத்திரிக்கையில் இருக்கும் அட்ரஸ்தான்.
அதை விடுத்து ‘நாம் சொந்த ஊருக்குத்தானே போகிறோம். அங்கே போய் பார்த்துக் கொள்ளலாம்’ என்று அலட்சியமாக பத்திரிக்கையை விட்டுவிட்டு வந்து உறவினர் வீட்டில் அல்லது நண்பர்கள் வீட்டில், ஹோட்டலில் தங்கும்பொழுது எந்த மண்டபம் என்று சொல்லத் தெரியாமல் விழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
விசேஷத்தை நடத்துபவர்களிடத்தில் இதைக் கேட்பதற்கும் தயக்கமாக இருக்கும். மற்ற உறவினர்களிடத்தில் போன் செய்து கேட்கவும் பத்திரிக்கை வைத்தவர்களை அலட்சியமாக நினைப்பதாக எண்ணத் தோன்றும். இப்படி விசேஷ பத்திரிக்கையை சரியான முறையில் எடுத்து வைக்காததால் பல்வேறு விதமான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆதலால் அவற்றை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.