பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை; அவமதிக்காமல் இருக்கலாமே!

Disrespect
Disrespect
Published on

க மனிதர்களை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் தயவு செய்து அவர்களை அவமதிக்க முயற்சிக்காதீர்கள். ஒருவரை நாம் அவமதிக்கும்போது அவர்கள் மனதளவில் காயமடைகிறார்கள். அந்தக் காயத்திற்கு மருந்தே கிடையாது. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் சற்று யோசியுங்கள்.

மற்றவர்களின் தவறுகளைக் கவனிப்பதை விட, அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் செய்த நல்ல செயல்களைப் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, மாறாக அவர்கள் செய்த தவற்றையோ அல்லது ஏதாவது ஒரு செயலையோ அடிக்கடி சொல்லி அவர்களை அவமதிக்காதீர்கள். ‘உனக்குத் தெரியவே தெரியாது, உன்னால் ஒன்றுமாகாது’ என்றெல்லாம் கூறி யாரையும் அவமானப்படுத்தாதீர்கள்.

மற்றவர்களிடம் பேசும்போது, அவர்களை மதிக்காத வகையில் வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். சத்தமிட்டு அல்லது கோபமாகப் பேசாதீர்கள். அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேளுங்கள். ‘நான் சொல்வதுதான் சரி’ என்று நினைத்துக்கொண்டு அடுத்தவர்களை அவமதித்து இழிவுபடுத்தாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
காதலில் வெற்றி பெறுவதற்கான 7 அறிகுறிகள்!
Disrespect

உங்களுடைய குறைகளை மறைப்பதற்காகவும், உங்களுடைய சுயமதிப்பை அதிகரிப்பதற்காகவும் அடுத்தவர்களை பகடைக்காயாக ஆக்காதீர்கள். சில நேரங்களில் நகைச்சுவை செய்வதாக நினைத்துக்கொண்டு அடுத்தவர்களை அதன் மூலம் அவமதிக்காதீர்கள். உங்களுக்கு ஒருவேளை அவ்வாறு விளையாட்டாக சொல்வதில் ஆனந்தம் இருக்கலாம். ஆனால், அந்த விளையாட்டான அம்பு அடுத்தவர்களின் இதயத்தை எப்படி கிழிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

அடுத்தவர்களை அவமதிப்பதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். அவர்களின் சுயமதிப்பு குறைகிறது. நீங்கள் நினைக்கலாம், ஒருவரை அவமதித்தால் அவர் அதன் காரணமாக முன்னேற முயற்சிக்கலாம் என்று. அது முற்றிலும் தவறு. உங்களின் அவமதிப்பால் அவர் இன்னும் பின்னுக்குச் செல்லலாம்.

இதையும் படியுங்கள்:
'கிளவுட் கிச்சன்' என்றால் என்ன?
Disrespect

மற்றவர்களை நாம் அவமதிக்க அவமதிக்க நம்முடைய கணக்கில் வட்டி ஏறிக் கொண்டே போகும். கடைசியில் மொத்தமாக அந்த வட்டி குட்டி போட்டு பல மடங்காய் நமக்கே திரும்பி வரும். மற்றவர்களை நாம் பாராட்டினால் அவர்கள் ஒருவேளை அதை மறந்து விடலாம். அதைப்போல், நீங்கள் அவமதித்ததையும் அவர்கள் மேலோட்டமாக மறந்திருக்கலாம். ஆனால், அது அவர்கள் மனதிற்குள் ஊற்றாய் பெருகி இருக்கும். அந்த ஊற்று வெளியே உடைத்து வருவதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

காற்று எப்போதும் ஒரு பக்கமே வீசாது. திடீரென அவர்கள் பக்கம் திரும்பி சந்தர்ப்பமும் அவர்களுக்கு சாதகமாக அமைந்து ஒரு அருமையான வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தால் அவ்வளவுதான். உங்கள் நிலைமை அதோகதிதான். அவர்களை நீங்கள் எப்படியெல்லாம் அவமதித்தீர்களோ அவை எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களை தாக்கினால் என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் வீசிய பந்தை எல்லாம் அவர்கள் உங்கள் பக்கம் வீசினால் அதன் விளைவு மிக அதிகமாக இருக்கும். பின்னர் வருத்தப்படுவதிலோ அல்லது வேதனைப்படுவதிலோ ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஆகவே, மனைவி, கணவர், குழந்தைகள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், சுற்றி இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களை அவமதிக்காதீர்கள். அவர்களுக்கு தக்க மரியாதையை கொடுத்து நேசத்தோடும் அன்போடும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com