
கோடை விடுமுறை காலம் வந்துவிட்டால், பலரும் பயணங்களை மேற்கொள்வது வழக்கம். வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கவும், வேலைப்பளுவில் இருந்து சற்று ஓய்வெடுக்கவும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது. ஆனால், இப்படி பயணங்கள் மேற்கொள்ளும் போது வீட்டில் நாம் அன்போடு வளர்க்கும் செடிகளை செடிகளை கவனிப்பது கடினமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பயணத்தை மகிழ்ச்சியாகவும், செடிகள் வாடாமலும் பார்த்துக்கொள்ளலாம்.
முதலில், செடிகளின் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருக்க தேங்காய் நார் தூள் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். உலர்ந்த தேங்காய் ஓடுகளை பொடி செய்து செடியின் வேர்ப்பகுதியில் தூவி, மண்ணோடு கலந்துவிட்டு தண்ணீர் ஊற்றினால் போதும். இது மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்து செடிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
அடுத்ததாக, தண்ணீர் பாய்ச்சுவதற்கு மாற்று ஏற்பாடு செய்வது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்கலாம் அல்லது தானியங்கி தண்ணீர் பாய்ச்சும் கருவிகளை பயன்படுத்தலாம். இவை, உங்கள் செடிகளுக்கு தேவையான நீரை சரியான நேரத்தில் வழங்கி, அவை வாடிவிடாமல் பாதுகாக்கும்.
செடிகளை சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பால்கனி அல்லது மொட்டை மாடியில் வைப்பதை விட குளியலறை போன்ற குளிர்ந்த இடங்களில் வைப்பது நல்லது. குளியலறை மற்ற இடங்களை விட குளிர்ச்சியாக இருப்பதுடன், ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இது செடிகள் வாடுவதை தடுக்கும்.
நீண்ட நாட்கள் பயணம் மேற்கொள்ளும் போது செடிகளுக்கு உரம் போடுவது அவசியமான ஒன்று. உரம் செடிகளுக்கு தேவையான சத்துக்களை வழங்கி, அவை ஆரோக்கியமாக வளர உதவும். இதனால், நீங்கள் வீட்டில் இல்லாத போதும் செடிகள் வாடாமல் பசுமையாக இருக்கும்.
எனவே, இந்த கோடை விடுமுறையில் உங்கள் பயணத்தை திட்டமிடும்போது, இந்த எளிய குறிப்புகளை மனதில் கொண்டு செயல்பட்டால், உங்கள் செடிகள் வாடிவிடுமோ என்ற கவலை இல்லாமல் மன நிம்மதியுடன் பயணத்தை அனுபவிக்கலாம். செடிகளும் உங்கள் வருகைக்காக பசுமையுடன் காத்திருக்கும்.