எதையும் எப்போதும் ஆவணப்படுத்தும் மனம் மனிதனின் இயல்பாகவே இருந்து வருகிறது. முக்கியமான, சுவாரசியமான நிமிடங்களை நிகழ்வுகளை இந்த செயல் நிரந்தரப்படுத்தும் என்ற நம்பிக்கையே இதன் காரணம். கடந்து, மறந்து போகக்கூடிய சம்பவங்களைக் கால ஓட்டத்தில் தொலையாமல் பதித்து வைக்கும் முயற்சியில் நாம் என்ன என்ன செய்கிறோம்.
புகைப்படம் எடுத்துக்கொள்வதும் எழுதுவதும் இதன் முயற்சியே. எல்லோருக்கும் எழுத வராது என்கிற நம்பிக்கை கொண்டவர்கள், (முயற்சி செய்யாதவர்கள்) சுலபம் என்று கருதி புகைப்படம் எடுக்கிறார்கள். டைரி எழுதும் பழக்கம் அரிதிலும் அரிதாகிவிட்டது. ஓசியில் கிடைக்கும் டைரியிலும் பால் கணக்குதான் எழுதுகிறோம்.
கைப்பேசி, பேசுவதை விட, புகைப்படம் எடுக்கவே அதிகம் பயன்படுகிறது தற்போது. மற்றவர்களைப் பிறரை எடுப்பதை விடத் தன்னை தானே புகைப்படம் எடுக்கும் போக்கு கூடிப்போய் கோணலாக வாயை முகத்தைக் குவித்துக்கொள்(ல்)வது கொடுமையிலும் கொடுமை. அஷ்ட கோண முகபுஜங்க ஆசனம் என்று யாராவது இதனை யோகப் பயிற்சியில் சேர்த்துவிடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது!
இந்த பழக்கம் மோகமாகவே மாறிப்போய் சிலகாலம் ஆகிவிட்டது. படம் எடுத்துக்கொள்வதும் சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதும் நாகரிக அடையாளங்கள். இதனைச் செய்யாதவர்கள் கற்கால மனிதர்கள் போலப் பார்க்கப்படுகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட படங்கள் எடுக்கிறார்களே... அவற்றை என்ன செய்கிறார்கள்? வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வலைத்தளங்கள் தான் தற்போதைய கல்வெட்டுகளா? வரலாற்றைப் பதிவு செய்ததாக நினைக்கிறார்களா? எங்கே செல்லும் இந்த மோகம்?
எனக்குத்தெரிந்த ஒரு நண்பன் கைகொடுப்பதை வணக்கம் சொல்வதை மறந்து கைப்பேசியுடன் கையுயர்த்தியபடி நடமாடுகிறான்! யாரைப்பார்த்தாலும் அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுப்பது என்பதை வழக்கமாகவே ஆக்கிக்கொண்டுள்ள நபர்களையும் அறிவேன்.
ஆவணப்படுத்துவது என்பது ஆணவப்படுத்துவது ஆகிவிட்டதோ? தன் இருப்பை, பெருமையை, அறிமுகம் ஆனவர்களை எல்லோரையும் எப்போதும் பறைசாற்றும் மனோபாவம் சமூகத்திற்கு என்ன நன்மை பயக்கும்? வசதியும் வாய்ப்பும் இருப்பதால் வரைமுறை தெரியாமல் செயல்படும் போக்கின் வெளிப்பாடு தான் இதுவா? நுகர்வோர் கலாச்சார போக்கின் எச்சம் தான் இதுவா?
"சரி, இப்படி மாய்ந்து மாய்ந்து எடுக்கும் பல நூறு படங்களை என்ன செய்கிறாய்?" என்று செல்ஃபி குமாரிடம் கேட்டேன். "Facebookல் போடுவேன், லைக்ஸ் வரும்," என்றான் ஏதோ தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சாதனை செய்தவன் போல. "அப்புறம்?" என்றேன். பிறவிப்பெருங்கடனை அடைந்தவினிடம் கேட்கும் கேள்வியா இது என்பது போல பார்த்துவிட்டு, "நீக்கி விடுவேன்" என்றான்.
சுரேஷும் பல படங்கள் எடுப்பான். ஆனால் facebookல் போடமாட்டான். "நீ என்னடா செய்வாய்?" என்றேன். "Cloudல் போட்டுவிடுவேன்" என்றான். "பிறகு?" என்றேன் அப்பாவியாக. "ஸ்டோர் செய்துவிடுவேன். அவ்வளவு தான்டா" என்றான். அவனது மைன்ட் வாய்ஸ், 'டேய் மடையனே இவனையெல்லாம் நண்பன் என்கிறோமே' என்று என்னை விளிப்பது எனக்கு தெளிவாக கேட்டது. நாய் பெற்ற தெங்கம்பழம் என்பது அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்து தொலைத்தது.
யாரை பார்த்தாலும் எப்போது பார்த்தாலும், அவர்களது மனநிலை அறியாமல் போனை உயர்த்தி ஒரு போஸ் கொடுங்க என்பது ஒரு விதமான அநாகரீகம் இல்லையா? இதில் ஒரு மில்லி மீட்டரேனும் வன்முறை கலந்து இல்லையா?
சற்றே பிரபலம் ஆனதும் அதனை பறைசாற்றி, பிரபலத்தை / பிம்பத்தை கூட்டிக்கொள்வது தற்கால நிகழ்வுகளில் இன்றியமையாத தன்மை. அதனை 'செலிபெரிட்டி' என்று மகிழ்கிறது சமூகம். இவர்களைப் போன்ற ஜீவன்களுடன் செல்பி எடுத்து ஸ்டேட்ஸில் போட்டுக்கொள்ளுவது சுவாசிப்பதை விட முக்கியமான செயல். நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான ஒரே அத்தாட்சி அது தான். இப்படி செய்யாதவர்கள் நவீன தீண்டாமையால் ஒதுக்கப்படுவீர்கள்.
கல்யாண வீடுகளில், அரிதாக சந்திக்கும் சந்திப்புகளில், நீண்ட நாட்கள் கழித்து ஒன்று சேரும்போதைய நிகழ்வுகளில் செல்பி எடுப்பதை யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு விபத்தின்போதும், மரண, துக்க வீடுகளிலும் சிலர் ஒப்செசிவாக (obsessive) இதனை செய்வதை ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது. எதனை நினைவில் நிறுத்த நிரூபிக்க இதனை இவர்கள் செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆண்டவன் எனக்கு அறிவு கொடுக்காததை எண்ணி வருத்தப்படுகிறேன்.
நிகழ் காலத்தில் வாழ்வதற்குரிய தகுதியை இழக்க செய்த ஆண்டவனை என்ன செய்யலாம். அவனையும் ஒரு செல்பி எடுத்து சுட்டுவிடலமா?
செல்பிஎடுத்து வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம்
சென்றிடுவார் வாழ்வை தொலைத்து
என்று திருவள்ளுவர் இப்போது இருந்தால் ‘கைபேசியின்மை’ என்ற அதிகாரத்தில் எழுதி இருப்பாரோ.
அலுப்பு தட்டியோ அல்லது வேறொரு விபரீதமான பழக்கம் டிரெண்ட் ஆகும் வரை இதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.