
தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று. நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக தூங்க வேண்டும் என நினைப்போம். ஏனென்றால் அப்போது தான் அடுத்த நாள் நாம் நம்மை தயார்படுத்திக்கொண்டு மீண்டும் ஓட முடியும். ஆனால் தூக்கத்திலும் நமக்கு இடையூறு ஏற்பட்டால் நாம் என்ன செய்வது. நமது உடலில் உள்ள பெரிய நோய்களை எல்லாம் குணப்படுத்திவிடலாம் போல, ஆனால் நம் உடலில் உள்ள சிறிய நோய் தான் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் நிம்மதி இல்லாமல் செய்துவிடும். அதில் ஒரு பிரச்சனை தான் இந்த குறட்டை. பல பேரின் தூக்கத்தை கெடுத்த இந்த 'குறட்டை பிரச்சனையை எவ்வாறு சரிசெய்யலாம்?' என காண்போம்.
குறட்டை:
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்த பாதையில் எங்காவது தடை ஏற்பட்டால் குறட்டை வரும். தூங்கும் போது தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்த நிலையில் இருக்கும். அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடும். இவ்வாறு குறுகியப் பாதையின் வழியாக காற்று செல்லும் பொழுது இந்த குறட்டை ஒலி ஏற்படுகிறது.
குறட்டை வருவதற்கான காரணங்கள்:
உடல் பருமன் உள்ளவர்களுக்கு கழுத்துப் பகுதியில் தசைகள் அதிகமாக காணப்படும். இதனால் சுவாச பாதையின் அளவு குறைந்து குறட்டை ஒலி ஏற்படுகிறது.
புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். மேலும் தைராய்டு, மூக்கடைப்பு, சைனஸ், தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்ற காரணங்களினால் குறட்டை ஏற்படுகிறது.
தடுப்பது எவ்வாறு?
இரவு தூங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக அரை ஸ்பூன் ஏலக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் குறட்டையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
யூகலிப்டஸ் எண்ணெய் சிறிதளவு சூடாக உள்ள நீரில் போட்டு ஆவி பிடிக்க குறட்டையில் இருந்து விடுபட முடியும்.
இரவு உறங்குவதற்கு முன்பாக நீரில் ஏலக்காய் பொடி ½ ஸ்பூன், மஞ்சள் தூள் ¼ ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து இளஞ்சூடான நீரில் தேன் கலந்து குடித்து வரலாம்.
அடுத்ததாக துளசி, புதினா ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு நீரில் சுண்ட காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரவு உறங்குவதற்கு முன்பாக குடித்து வந்தால் குறட்டையில் இருந்து விடுபடலாம்.
மேலும் சில தகவல்கள்:
உடல் பருமனை குறைப்பதன் மூலம் குறட்டையில் இருந்து விடுபட முடியும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இரவு உறங்குவதற்கு தூக்க மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.
மேலும் நீங்கள் உறங்கும் நிலையை மாற்ற வேண்டும். உறங்கும் பொழுது தலையை சற்று உயரமான நிலையில் வைத்து தூங்கினால், சுவாசத்தை எளிதாக்க உதவும்.
மேலும் மன அழுத்தத்தை தவிர்ப்பது, எப்பொழுதும் உடலை நீரோற்றமுடன் வைத்துக் கொள்வது, தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது குறட்டை பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம்.
பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் குறட்டையில் இருந்து விடுபடலாம். இது சுவாசப்பாதையில் காற்று தடையின்றி செல்வதற்கு உதவுகிறது.