

‘ஒரே நேரத்துல என்னால பல வேலைகள் செய்ய முடியும். இது எனக்குக் கிடைச்ச வரம். என்ன போல நீ வேலை செய்ய முடியுமா? போன் பேசிட்டே சின்னச் சின்ன வேலை எல்லாம் செஞ்சு முடிச்சிடுவேன்’னு சொல்றத கேட்டு இருப்பீங்க இல்ல. அது பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
நம் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் ஒரு அடுப்பில் சாதத்தையும், மற்றொரு அடுப்பில் சாம்பாரையும் வைத்து சமையல் செய்துகொண்டே குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தபடியே இரவு சமையலை முடித்து விடுவார்கள். இல்லத்து அரசர்களும் போனில் பேசியபடியே கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பார்கள். மேலும், ஒரு முக்கியமான கணக்கைக் கூட தன்னை சந்திக்க வரும் விருந்தினர்களிடம் பேசிக்கொண்டே வேலையை முடித்து விடுவார்கள். அவர்களது எண்ணம் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை முடித்து விட்டோம் என்பது.
ஆனால், இவ்வாறு செய்வது நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்று கூறினால் அது முற்றிலும் தவறு. ஏனெனில் இப்படி செய்யப்படும் வேலைகளில் பல தவறுகள் ஏற்படுகின்றன என்பதே உண்மை. போனில் பேசியபடி கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது 100 என்பதற்கு 1000 என மாற்றிப் போட்டாலும் அது பிரச்னையில் முடிந்து விடுகிறது.
சமையல் செய்துகொண்டே குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும்போது சமையலில் முழுமையாக கவனம் செலுத்தாமல், அதன் சுவை கெடுவதோடு குழந்தைகளுக்கும் தெளிவாக புரிய வைத்து பாடம் எடுப்பதில் குறைபாடுகள் இருக்கும். மேலும், இரண்டு விஷயங்களில் ஒரே நேரத்தில் நம் மூளை கவனம் செலுத்தும் விதமாக பழக்கப்படவில்லை என்பதுதான் முற்றிலும் உண்மை. ஒருவேளை செய்யும்போது நம் மூளை ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மற்றொரு வேலை செய்யும்பொழுது கவனம் சிதறுகிறது.
உதாரணமாக, ஒரு முக்கியமான ஃபைலைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது, இடையில் போனில் ஒரு மெசேஜ் பார்க்க விரும்பினால் மீண்டும் உங்கள் கவனம் அந்த பைலில் முழுமையாக திரும்ப 25 நிமிடங்கள் ஆகும். நம் மூளை இப்படித்தான் பழகி இருக்கிறது என்கிறார்கள் நரம்பியல் நிபுணர்கள். இரண்டு மூன்று வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போது நம் உடலுக்குள் வெளிப்படும் ஹார்மோன்கள் மன அழுத்தத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்க்க சில யோசனைகளைக் காண்போம்.
* ஒரு வேலை செய்யும்போது இடையில் போன் நோண்டுவது, கம்ப்யூட்டரில் விளையாடுவது போன்ற எதிலும் கவனத்தை செலுத்தாமல், முழு கவனத்தையும் அந்த வேலையில் மட்டும் செலுத்தினால் வழக்கத்தை விட விரைவாக வேலையை முடிக்க முடியும்.
* கடிதங்கள் மற்றும் மெசேஜ்களுக்கு ஒரு நாளின் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பதில் அளிப்பது என்பதை பழக்கப்படுத்துங்கள்.
* வேலை செய்து கொண்டிருக்கும்போது அவசியமில்லாத தொலைபேசி உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும்.
* சில நிமிடங்களில் செய்து முடிக்கும் சின்னச் சின்ன விஷயங்களைத் தள்ளிப்போடாமல் அப்பொழுதே செய்து முடியுங்கள்.
* அலுப்பு தட்டாமல் இருக்க ஒரே மாதிரி இருக்கும் இரண்டு மூன்று வேலைகளை ஒன்றாக அடுத்தடுத்து செய்யுங்கள்.
* தினமும் காலையிலேயே எந்த வேலையை முதலில் செய்வது, அடுத்து எந்த வேலையை செய்வது என திட்டமிட்டு செய்தால் நேரம் மிச்சமாவதோடு செயல் தெளிவாக நிறைவடையும்.
பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது புத்திசாலித்தனம் அல்ல. எந்த ஒரு வேலையையும் திறம்பட குறைந்த நேரத்தில் முழு கவனத்துடன் செய்யும்போது வேலையும் முழுமையாக இருக்கும், உடலும் உற்சாகமாக இருக்கும்.