சுதந்திரம் இல்லாத அன்பு சுமையானது: உண்மையான நேசம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

True love
affection couple
Published on

வ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவையாக இருப்பது அன்பு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம். உண்மையில் அன்பு செலுத்துதல் என்பது ஒரு கலை. எரிக் ஃப்ரம் என்கிற எழுத்தாளர் தன்னுடைய, 'அன்பு எனும் கலை' (Art of Love) என்கிற நூலில் அன்பு கற்றுத்தரும் ஆறு முக்கியமான பாடங்களைப் பற்றிச் சொல்கிறார். அவை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. அன்பு என்பது ஒரு உணர்வு அல்ல. அது ஒரு தீர்மானம். நாம் நினைப்பது போல அன்பு என்பது நம் மனதில் இருந்து எழும் ஒரு உணர்வு அல்ல என்கிறார் எரிக். அவரைப் பொறுத்தவரை அன்பு என்பது ஒரு வாய்ப்பு. நாம் யார் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் அன்பே இல்லாதவர்களாக இருந்தாலும் கூட, நமது அன்புக்குரியவர்களாக அவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். எனவே, அன்பு என்பது ஒரு தீர்மானம் ஆகிறது.

இதையும் படியுங்கள்:
புத்தாண்டில் உங்கள் உடலையும் உள்ளத்தையும் மாற்றப்போகும் 5 நிமிட ரகசியம்!
True love

2. எரிக் நான்கு விதமான அன்பைப் பற்றி சொல்கிறார். முதலாவது காதலர்களுக்குள் தோன்றும் அன்பு. இரண்டாவது நண்பர்களுக்குள் ஏற்படும் அன்பு. மூன்றாவது சுயநலம் இல்லாத அன்பு. நான்காவது குடும்பத்தின் மேல் ஏற்படும் அன்பு. ஒவ்வொரு விதமான அன்பிற்கும் அதற்குரிய மதிப்பும் தன்மையும் இருக்கிறது என்கிறார். இந்த நான்கு விதமான அன்பும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கும்.

3. உண்மையான அன்பில் சுதந்திரம் நிறைந்திருக்கும். அதில் பொசசிவ்னஸ் எனப்படும் உடைமைக் குணம் இருக்காது. ஆனால், நிறைய பேர் செய்யும் தவறு தனது மனதுக்குப் பிடித்தவர்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பது. அவர்களை தனது ஆளுமைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், உண்மையான அன்பு என்பது அவருக்குப் பிரியமானவரை அல்லது நேசிப்பவரை சுதந்திரமாக செயல்பட விடுவதுதான். அவர்களது சுதந்திரத்தில் எந்த விதமான தலையீடும் இல்லாமல் இருப்பதே அவர் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு சான்று என்கிறார். பிரியம் செலுத்தும் நபர் ஒரு பொம்மையல்ல. நீங்கள் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை.

இதையும் படியுங்கள்:
வயது ஒரு பொருட்டல்ல; விருப்பம் போல் வாழ்ந்தால் நூறாண்டு கடந்தும் வாழலாம்!
True love

4. ‘அன்பு என்பது ஒரு கலை. அதற்கு நிறைய பயிற்சிகள் தேவை’ என்கிறார். இந்தக் கலையை கற்றுக்கொள்ள நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்படும். நாம் அன்பு செலுத்தும் நபரைப் பற்றி அறிந்துகொள்ளும் அதேநேரம் நம்மைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் அவரிடம் செலுத்தும் அன்பில் உண்மைத் தன்மை இருக்கிறதா? அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறோமா? இன்னும் எந்த விதத்தில் எல்லாம் நாம் அன்பு செலுத்துவதில் மாற்றங்கள் செய்ய வேண்டும்? எப்படி எல்லாம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்? அன்பை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும்? என்கிற விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.

5. அன்பு என்பது செயலற்றது அல்ல. அது எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவது. ஒருவரிடம் அன்பு செலுத்துகிறோம் என்றால் வெறும் வாய் வார்த்தையில், ‘உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று சொல்வது முக்கியம் அல்ல. அதை செயலில் காட்ட வேண்டும். அவர்கள் மீது எந்த அளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் செயல்களில் நிரூபிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனப் பதற்றத்தை விரட்ட வியக்க வைக்கும் 'பட்டாம்பூச்சி அணைப்பு'!
True love

அவர்களுக்குப் பிடித்த சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அது கடினமானதாக இருந்தாலும் அவர்களுக்காக அதை செய்யும்போதுதான் அங்கே உண்மையான அன்பு வெளிப்படுகிறது. இதற்குத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே அன்பு செலுத்த லாயக்காணவர்கள் என்கிறார்.

6. அன்பு என்பது முழுமைத் தன்மையுடையது அல்ல. அது சில குற்றம், குறைகளுடன் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. எப்போதும் நாம் அன்பு செலுத்தும் நபர் எல்லா விஷயத்திலும் முழுமை பெற்றவராக, அதாவது பர்ஃபெக்க்ஷனிஸ்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், உண்மையான அன்பு பிழைகளைப் பொருட்படுத்தாது. நீங்கள் ஒருவரை விரும்பினீர்கள் என்றால் அவர்களை அவர்களது குறைகளுடன் ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

எஸ்.விஜயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com