
Kitchen Sink: நாம் உயிர் வாழ அத்தியாவசியங்களில் ஒன்று உணவு. அந்த உணவை சமைக்க உதவும் சமையலறையில் இருக்கும் மிக மிக அத்தியாவசியமான உபகரணங்களில் ஒன்றுதான் சமையலறை சிங்க். தற்போது மாடுலர் கிச்சன்களில் உள்ள நவீன சிங்க் முதல் அந்தக் காலத்தில் இருக்கும் கடப்பாக்கல் சிங்க் வரை அனைவர் வீடுகளிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது சிங்க்.
சமையல் செய்யும் பாத்திரங்களை கழுவ உதவி சமையலறை சுத்தத்திற்கு உதவும் சிங்குகள் குப்பைகள், பூச்சிகளால் திடீரென அடைத்துக் கொண்டால் அதன் மூலம் எழும் அழுத்தம் அதீதமானது. வேலை பளுவில் எரிச்சல் தரும் சிங்க் அடைப்பை எப்படி நீக்குவது?
கிச்சன் சிங்க் அடைப்பு நீக்க சில எளிய வழிமுறைகள் (Unclog kitchen sink tips):
1 கப் பேக்கிங் சோடாவை சிங்க் வடிகாலில் ஊற்றவும். தொடர்ந்து 1 கப் வினிகரை வடிகாலில் ஊற்றவும். சில மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே விடவும், பின்னர் சூடான நீரை வடிகாலில் ஊற்றவும். இதன் மூலம் அடைப்பை நீக்கலாம்.
அடுத்து அடைப்பை உறிஞ்சுவதற்கு ஏற்ற உபகரணமான ப்ளங்கரைப் பயன்படுத்தலாம். பிளங்கர் வடிகாலில் சரியாக அமர்ந்திருப்பதை உறுதிசெய்வது அவசியம்.
குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்ற ஆகர் எனப்படும் வடிகால் கருவியை பயன்படுத்தவும்.ஒரு ஆகரின் செயல்பாடு துளைகளைத் துளைப்பதாகும். ஆகர் ஒரு மைய இயக்கி தண்டைக் கொண்டுள்ளது, அதில் ஒரு சுழல் சுற்று மற்றும் ஒரு வெட்டுத் தலை அல்லது பிளேடு உள்ளது. தண்டைச் சுழற்றுவதன் மூலம், வெட்டுத் தலை மரத்திற்குள் செல்லும் திருகு போலவே தரையில் தோண்டுவதன் மூலம் அடைப்பை விடுவிக்கும்.
மேலும் படிந்த கரையாத கிரீஸ் மற்றும் உணவுத் துகள்களைக் கரைக்க உதவும் சூடான நீரை வடிகாலில் ஊற்றலாம்.
சில வீடுகளில் எப்போதும் நீள நீள மெல்லிய குச்சிகள் அல்லது கம்பிகள் சிங்குகளின் அருகில் இருப்பதைக் காணலாம். அதன் மூலம் தினமும் வேலை முடிந்ததும் குத்தி விட்டு அடைப்பை நீக்குவது உண்டு.
ரசாயன வடிகால் சுத்தம் செய்யும் ஆசிட் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் அப்போது வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவது முக்கியம்.
என்சைம் சார்ந்த சுத்திகரிப்பு பொருள் கரிமப் பொருட்களை உடைத்து அடைப்புகளை அகற்ற உதவும்.
ஆனால், இதற்கெல்லாம் மெனக்கெடாமல் வரும் முன் அடைப்புகளை எப்படி தடுக்கலாம்?
எண்ணெய் கிரீஸ் மற்றும் கெட்டியான உணவுத் துகள்களைக் கரைக்க ஒவ்வொரு சிங்க் பயன்பாட்டிற்கும் பிறகு வடிகால் வழியாக சூடான நீரை ஊற்றிக் கழுவலாம்.
பெரிய உணவுத் துகள்கள் மற்றும் பிற குப்பைகள் வடிகாலில் இறங்குவதற்கு முன்பு அவற்றைத் தடுக்க வடிகால் திரை அல்லது வடிகட்டியைப் பயன்படுத்துவது நல்லது.
எண்ணெய், நெய் போன்றவைகளை வடிகாலில் நேரடியாக ஊற்றுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை திடப்படுத்தி அடைப்புகளை ஏற்படுத்தும்.
எப்படி முயன்றும் அடைப்பு நீங்கவில்லையா? வீட்டில் பல வடிகால்கள் அடைபட்டுள்ளதா? மிகப் பழைய அல்லது சிக்கலான குழாய்களில் அடைப்பு இருக்கிறதா? இப்போது நாம் அதற்கான ஒரு பிளம்பிங் நிபுணரை அழைப்பது அவசியமாகிறது.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் சமையலறை சிங்க் வடிகால்களை தூய்மையாக்கி அடைப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். டென்ஷனும் பறந்து போகும்.