குளிர்சாதனப் பெட்டிகள் நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத சாதனமாகிவிட்டன. நமது உணவை எப்போதும் புதிதாகவும், குளிர்பானங்களை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இவை பெரிதளவில் உதவுகின்றன. இருப்பினும் மற்ற மின்சாதனங்களைப் போலவே சரியாக பராமரிக்கப்படாவிட்டாலோ அல்லது இயக்கப்படாவிட்டாலோ சில அபாயங்களை ஏற்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டிகளுடன் தொடர்புடைய பெரும் ஆபத்துகளில் ஒன்று அதன் கம்ப்ரஸர் வெடிக்கும் நிகழ்வாகும். உண்மையிலேயே இந்த நிகழ்வு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இந்தப் பதிவில் கம்ப்ரஸர் வெடிப்புகளுக்கு பின்னால் உள்ள காரணங்களையும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பார்க்கலாம்.
குளிர்சாதனப் பெட்டியில் உள்ள கம்ப்ரஸர் வெடிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான காரணம் கம்ப்ரஸர் ஓவர்லோடு ஆகும். குளிர்சாதனப் பெட்டியானது அதிக வெப்பத்திற்கு உட்படுத்தப்படும்போது அல்லது சரியான குளிரூட்டல் இல்லாமல் நீண்ட நேரம் செயல்படும்போது கம்ப்ரஸர் வெப்பமடையும். அதிகரித்த வெப்பநிலை காரணமாக கம்ப்ரஸரில் அழுத்தம் ஏற்பட்டு வெடிப்புக்கு வழிவகுக்கிறது.
மேலும் கம்பஸரில் உள்ள கூலன்ட் கசிவதால் கூட வெடிப்பு ஏற்படலாம். பிரிட்ஜின் குளிரூட்டும் செயல்முறையில் ‘ஃப்ரீயான்’ என்கிற குளிரூட்டும் கேஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பில் கசிவு ஏற்பட்டால் அது காற்றுடன் வினைபுரிந்து வெடிப்பதற்கு வழிவகுக்கும். இதன் மூலமாக தீப்பொறி ஏற்பட்டு தீயைக் கூட பரப்பலாம்.
மேலும், முறையாக பிரிட்ஜை இன்ஸ்டால் செய்யாமல் போவது மற்றும் கம்ப்ரஸரை பராமரிக்காமல் இருப்பது போன்றவை வெடிப்பு சம்பவங்களுக்கு காரணங்களாக அமைகின்றன. இதுபோன்ற காரணங்களால் அதிகப்படியான அதிர்வு, கம்ப்ரஸரில் உராய்வு மற்றும் மின் செயலிழப்பு ஏற்பட்டு விபத்துக்கு வழிவகுக்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடிப்புகளைத் தடுக்கவும், உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நீங்கள் எடுக்கக்கூடிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன. அதில் முதலாவதாக உற்பத்தியாளர்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒரு தகுதி வாய்ந்த நிபுணரால் குளிர்சாதனப் பெட்டியை இன்ஸ்டால் செய்யவும். உங்கள் விருப்பம் போல நீங்களே ஃப்ரிட்ஜை மாட்டினால், கம்ப்ரஸர் வெடிப்பு போன்ற எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படலாம்.
எந்த மின்சாதனப் பொருளாக இருந்தாலும் அதற்கு வழக்கமான பராமரிப்பு முக்கியமானது. குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தில் உள்ள கம்பிகளை அவ்வப்போது சுத்தம் செய்து தூசி மற்றும் குப்பைகள் சேராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் கசிவுகள், தேவையில்லாத ஒலிகள் அல்லது எண்ணெய் போன்ற திரவங்கள் வெளிவருவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பழுது பார்க்கும் சேவையைத் தொடர்பு கொண்டு அந்த பிரச்சினையை சரி செய்யவும்.
உங்கள் பிரிட்ஜில் அதிகப்படியான பொருட்கள் வைப்பதைத் தவிர்க்கவும். இது கம்ப்ரஸருக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து வெப்பமடையச் செய்யும். குளிர்சாதனப் பெட்டி எப்போதும் காற்றோட்டமான இடத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள். இது வெப்பத்தை திறமையாக வெளியேற்ற உதவுகிறது.
கம்ப்ரஸரை நீங்களே சரி செய்யவோ அல்லது மாற்றவோ முயற்சிக்க வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது என்பதால் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை அழைத்து சரிசெய்வது முக்கியம். எனவே இதுபோன்ற காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி புரிந்து கொண்டு செயல்படுவதால் பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்கும் அபாயத்தைக் குறைக்க முடியும்.