தங்களது குழந்தைகளுக்கு எந்த வயதில் தனி அறை கொடுத்து உறங்க வைக்கலாம் என்பது இன்றைய கால பெற்றோர்களுக்கு பெரும் யோசனையாகவே உள்ளது. குழந்தை பிறந்தது முதல் அது அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமாகி விடுகிறது. பிறந்தது முதல் குழந்தைகள் பெரும்பாலும் தனது தாயின் அரவணைப்பிலேயேதான் தூங்கிப் பழக்கப்பட்டிருக்கும். ஆனாலும், எந்த வயது வரை குழந்தையை தங்களது அரவணைப்பில் தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் பெற்றோர்கள் பலருக்கும் இருக்கிறது.
பொதுவாக, ஏழு வயது வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர். ஏழு வயது வரை அவர்கள் மனதளவில் குழந்தைதான். எனவே, இருட்டைக் கண்டு பயப்படுவது, அழுவது போன்றவை நிகழாமல் இருக்க பெற்றவர்களுடன் தூங்குவதே சரியானது. அவர்களுக்கு அந்த வயது வரை தாயின் அணைப்பு நிச்சயம் தேவை. குழந்தை தானாகவே எப்பொழுது தனிமையை விரும்புகிறதோ அந்த நாள் வரை குழந்தையுடன் நாம் சேர்ந்து தூங்குவதில் தவறில்லை. நாமே அவர்களைக் கட்டாயப்படுத்தி தனியறையில் தூங்க வைப்பது சரியாகாது. வயதாக ஆக உனக்கென்று ஒரு அறை அவசியம் என்பதை நிதானமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து அவர்களை இரவு தனி அறையில் தூங்கப் பழக்கலாம்.
பொதுவாக, சில குழந்தைகள் 10 வயது வரை கூட பெற்றவர்களுடன் தூங்க விரும்புகிறார்கள். அதையும் மனதில் கொண்டு நம் குழந்தைக்கு எது சரியோ அதை செய்யலாம். குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால், தனியாக தூங்கும்போது பயம் உண்டாகலாம் அல்லது அடிக்கடி விழிப்புணர்வு வந்தாலோ அந்த சமயத்தில் குழந்தைகளை தனியாக படுக்க விடாமல் தாயின் அணைப்பில் வைத்திருப்பது நல்லது.
ஏழு முதல் எட்டு வயதுக்குப் பிறகு குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கலாம். அதையும் எடுத்த உடனே, ‘உனக்கு இவ்வளவு வயசு ஆயிடுத்து. இனி நீ தனி ரூம்லதான் தூங்கணும்’ என்று சொன்னால் பயப்படுவார்கள். எனவே, தனி அறையில் அவர்களுக்கென ஸ்பெஷலாக படுக்கை ஏற்பாடு செய்து கொடுத்து, ‘இது இனி உன் ரூம், உனக்கே உனக்கானது, இதனை நீதான் அழகாக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என கூறினால் அவர்கள் அங்கு தூங்குவதை விரும்புவார்கள்.
ஒரு சில குழந்தைகள் ஸ்பெஷலாக அறையை கொடுத்தாலும் இருளைக் கண்டு பயந்து, பெற்றோர் இல்லாமல் தூங்க மாட்டார்கள். எனவே, தனியாக தூங்க விரும்பாத குழந்தைகளை தாத்தா, பாட்டி என்று பெரியவர்கள் யாரேனும் வீட்டில் இருந்தால் அவர்களுடன் தூங்க வைக்கலாம்.
அதேபோல், அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன் டிவி, மொபைல் ஃபோன்களை பயன்படுத்த ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் தூக்கம் வரும் வரை புத்தகங்கள் படிக்க பழக்கலாம் அல்லது நல்ல இசையை கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இப்படிச் செய்ய ஆரம்பித்தால் குழந்தைகள் பயமின்றி தாமாகவே தனி அறையில் தூங்கி விடுவார்கள்.