பாடாய் படுத்தும் OTP!

OTP
OTP

ஓடிபி இல்லாமல் ஒரு காரியமும் நடைபெறுவது இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

ஆன்லைன், பல இடங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ள இன்றைய காலகட்டத்தில், ஓடிபி இல்லாவிட்டால் கையும் ஓடுவது இல்லை. காலும் நகர மறுக்கின்றது. சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால், டெலிவர் செய்ய வருபவர்கள் டெலிவர் செய்ய மறுக்கிறார்கள், தயங்குகிறார்கள்.

அதுவும் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்த மகளோ, மகனோ, மருமகளோ டெலிவரி வரும் சமயத்தில் அந்தப் பொருளை வாங்கிக்கொள்ள வீட்டில் இல்லாவிட்டால், வீடுகளில் இருக்கும் வயதான பெரிசுகளின் பாடு திண்டாட்டம். அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, காலகட்டம் வேறு. தற்போதைய நிலைமை, வாழ்க்கை முறை வேறு. அந்த வயதானவர்கள் வேறு இடத்தில் இருந்து வந்திருந்தால் கேட்கவே வேண்டாம்.

குறிப்பாக ஆர்டர் கொடுத்தவர்கள் வெளியில் சென்றுவிட்டாலோ, வேலை அதிகம் காரணமாக வீட்டில் டெலிவரி வாங்கிக்கொள்பவர்களுக்கு அந்த ஓடிபி நம்பரைக் கூற மறந்துவிட்டாலோ, டிலே செய்தாலோ, இங்கு இருப்பவர்களின் திண்டாட்டங்கள் குறித்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
போதாகுறைக்கு கேட்டட் கம்யூனிடியில் (Gated Community) வரிசையாக இருக்கும் ஒரே மாதிரியான வீடுகளில் வசிப்பவர்கள், அடிக்கடி அனுபவிக்கும் தொல்லை வேறுவிதமானது. அடுத்த வீட்டிற்கோ அல்லது பிளாட்டிற்கோ செல்வதற்குப் பதிலாக பார்சலோடு வந்து ஓடிபி நம்பர் சார், மேடம் என்று கேட்டு, இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு டென்ஷன் அதிகரிக்க வைப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இதையும் படியுங்கள்:
இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!
OTP

டெலிவர் செய்ய வந்தவர் ஓடிபி நம்பர் இல்லை என்றால் கொண்டுவந்த பொருளைக் கொடுக்காமல் திருப்பி எடுத்துச்சென்று, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் செய்துவிட்டுப் போவது ஓடிபி சிஸ்டத்தின் ஹைலைட்!

வீட்டில் இருப்பவர்கள் மதிய தூக்கம் சமயத்திலோ, டிவி சீரியல் பார்த்துக்கொண்டு, உடன் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் தருணத்திலோ வந்து கதவை தட்டும் ஓடிபி ரிக்வெஸ்ட் பல நேரங்களில் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சல் மூட்டுவது என்னமோ மறுக்க முடியாத உண்மை. ஓடிபி நம்பர் ரெடியாக வைத்துக்கொண்டு, பார்சல் கொண்டு வருபவரை வரவேற்க வழி மேல் விழி வைத்து காத்திருந்து , குறிப்பிட்ட நேரத்தில் வராமல் ஏமாந்து போகும் சம்பவங்களும்
ஓடிபி சரித்திரத்தின் சில பக்கங்களில் அடங்கும்.
OTP என்பது என்னதான் பாதுகாப்பாக என்று இருந்தாலும், இது போன்ற சங்கடங்கள் ஏற்படும்போது எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லையே! என்ன நான் சொல்வது?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com