பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டும் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள். ஆனால், இவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன. அவற்றின் வேறுபாடுகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பேக்கிங் சோடா என்றால் என்ன?
இது சோடியம் பை கார்பனேட் என அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்திலும் தூள் வடிவத்திலும் இருக்கும்.
பேக்கிங் சோடாவின் பயன்கள்: வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கிறது. வயிற்று வலி மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. தீயை அணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. சோப்பு நுரை உருவாக இது பயன்படுத்தப்படுகிறது. பொருட்களின் பண்புகளை சேதப்படுத்தாமல் அதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. பேக்கிங் தொழில்களில் பயன்படுகிறது. அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
பேக்கிங் சோடா எவ்வாறு செயல்படுகிறது?
பேக்கிங் சோடா ஒரு அடிப்படையான பொருளாகும். இதனுடன் வினிகர், எலுமிச்சைச் சாறு, மோர் அல்லது தயிர் போன்றவற்றை கலக்கும்போது அது கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயு வேகவைத்த பொருட்களில் குமிழிகளை உருவாக்குகிறது. குக்கிகள், கேக்குகள் ரொட்டிகள் போன்ற வேகவைத்த பொருட்களுக்கு பஞ்சு போன்ற மென்மைத் தன்மைக்கு உதவுகிறது.
இறைச்சியை வேக வைக்கும்போது சிறிதளவு இதைச் சேர்த்தால் இறைச்சியை மென்மையாக வேக வைக்கும். சமையல் செய்யும்போது அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவுகிறது. சமையலறை மேற்பரப்புகள், கவுண்டர்டாப்புகள், குளிர்சாதனப் பெட்டி, கேஸ் ஸ்டவ், சிம்னி மற்றும் குளியலறை சுத்தத்திற்கும் இது பயன்படுகிறது. பேக்கிங் சோடா காபி கோப்பைகள், பளிங்கு, கிரீஸ் மற்றும் பலவற்றில் உள்ள கறைகளை நீக்கும்.
பேக்கிங் பவுடர் என்றால் என்ன?
பேக்கிங் பவுடர் என்பது பொதுவாக அமிலம் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் மூலப்பொருள் ஆகியவற்றின் கலவை ஆகும். இது பேக்கிங் சோடா மற்றும் அமிலம் இரண்டையும் கலந்த ஒரு கலவை ஆகும். இதை உபயோகப்படுத்தும்போது ஈரப்பதம் மற்றும் வெப்பத்துடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்குகிறது. கேக்குகள், மஃபீன்கள், பிஸ்கட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே அமிலம் இருப்பதால் பேக்கிங் சோடாவை விட பேக்கிங் பவுடர் பரந்த அளவிலான சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வேறுபாடுகள்: பேக்கிங் சோடா என்பது வெறும் சோடியம் பை கார்பனேட் ஆகும். அதேசமயம் பேக்கிங் பவுடர் என்பது பேக்கிங் சோடா மற்றும் அமிலத்தின் கலவை ஆகும். பேக்கிங் சோடா வேலை செய்ய ஒரு அமிலம் தேவை. அதேநேரத்தில் பேக்கிங் பவுடரில் ஏற்கெனவே அமிலம் உள்ளது. கூடுதல் அமிலப் பொருட்கள் இல்லாமல் வேலை செய்ய முடியும். பேக்கிங் சோடா பெரும்பாலும் இயற்கையான அமிலப்பொருள்கள் கொண்ட சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் செய்முறையில் அமிலம் இல்லாதபோது பேக்கிங் பவுடர் பயன்படுத்தப்படுகிறது.
பேக்கிங் சோடா பெரும்பாலும் அமிலப் பொருட்கள் அடங்கிய சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் பேக்கிங் பவுடர் நடுநிலை pH தேவைப்படும் சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பேக்கிங் சோடா வேகவைத்த பொருட்களை நன்றாக பழுப்பு நிறமாக்க உதவுகிறது. கார வடைகளில் பிரவுன் நிறம் வர, பேக்கிங் பவுடருடன் சிறிது பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். அது அமிலங்களை நடுநிலையாக்கி, அவற்றை காரமாக மாற்றி, பிரவுன் நிறத்தைத் தருகிறது.