ஆங்கிலத்தில் செட்டில்மெண்ட் என்று சொல்லுவார்கள். தன்னுடைய சொத்தை ரத்த உறவுகளுக்கு மட்டும் மாற்றிக் கொடுப்பதுதான் தானப் பத்திரம். ரத்த உறவுகள் என்றால் சகோதரன், சகோதரி, மகன், மகள், பேரன், பேத்தி, மகன் வழிக்கொள்ளுப்பேரன் போன்றோருக்குத் தானமாக எழுதித் தரலாம். தானம் தருவது என்றால் தானப் பத்திரம் என்றும், சொத்தை செட்டில்மென்ட் செய்வது போல எழுதினால் செட்டில்மென்ட் என்றும் குறிப்பிடுவார்கள். 'செட்டில்மென்ட்' என்று எழுதினால் அதை மாற்ற இயலாது.
ஆனால் உயில் அப்படி அல்ல. மாற்றி மாற்றி எழுத முடியும். எனவே அவசரகதியில் செட்டில்மென்ட் எழுதுவதற்கு முன் பலமுறை யோசித்து முடிவெடுப்பது சாலச்சிறந்தது. இதை உரிய கட்டணம் செலுத்தி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இது விருப்ப ஆவணம். சொத்தைத் தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித் தரும் முறைதான் உயில். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களைத் தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு தனது சுய நினைவோடு எழுதித் தருவதுதான் உயில். ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தைத் தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாயமில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும்கூட உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்குச் சொத்து தானாகச் சேர்ந்துவிடும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமானால் அதற்குக் காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரைப் புறக்கணித்து விட்டுப் பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதி மன்றத்தில் இதை மறைத்துத் தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்தத் தீர்வு ரத்து செய்யப்படும்.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமனச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்குக் கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோர முடியும்.
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இது போன்று பல அடிப்படை விஷயங்களைக் கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளைக் கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.