‘வடை போச்சே...!' வடிவேலு சொன்ன இந்த வசனத்துக்குப் பின்னால் இத்தனைக் கதைகளா...?

Pokkiri Movie - Vada Poche
Vada Poche
Published on

போக்கிரி படத்தில் நடிகர் வடிவேலு பயன்படுத்திய ’வடை போச்சே...!’ என்ற வசனம் தமிழ்நாடு மட்டுமின்றி, தமிழ் மொழி பேசும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, நடக்க வேண்டிய செயல் நடக்காமல் போனால், அதைக் குறிப்பிட, இந்த வசனத்தைப் பெரும்பான்மையாகப் பயன்படுத்துகின்றனர்.  ‘வடை போச்சே...!’ என்ற இந்த வசனத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். 

‘வடை போச்சே...!’ என்பதை உணர்த்தும் சில கதைகளை நாம் இதற்கு முன்பாக, பல முறை கேட்டிருக்கிறோம். அந்தக் கதை ஒன்றல்ல, இரண்டல்ல... கதைகளை நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்...!  

அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு நிலாவில் பாட்டி வடை சுடுவதாக, ஒரு கதையைச் சொல்லி ஏமாற்றி உணவு ஊட்டுவார்கள். அந்தக் காலக் குழந்தைகளும், அதை உண்மையென்று நம்பி நிலாவை வேடிக்கை பார்ப்பதுடன், நிலாவில் பாட்டி வடை சுடுகிறது என்கிற நம்பிக்கையையும் கொண்டிருக்கும். அந்தக் குழந்தை நாள்தோறும் அம்மாவின் நிலாக் கதையைக் கேட்டு ஏமாந்து, அம்மா ஊட்டும் உணவைச் சாப்பிடும். இந்தக் கதையில், நிலாவில் பாட்டி சுட்ட வடை கிடைக்காமல் ஏமாந்த குழந்தைக்கு ‘வடை போச்சே...! கதைதான். 

இதே போன்று, வடை சுடும் பாட்டியிடம் இருந்து காகம் ஒன்று வடையைச் சுட்டுக் (திருடிக்) கொண்டு போய், அருகிலுள்ள மரத்தில் சென்று அமர்ந்து இருக்கும். அதைக் கண்ட நரி ஒன்று, அந்தக் காகத்திடமிருந்து வடையைச் சுட்டு (ஏமாற்றி) சாப்பிட்டு விடவேண்டும் என்று நினைத்து, காகத்தைப் பாடச் சொல்லும். காகமும், பாட்டு பாடுவதாக நினைத்துப் பாட, அந்தக் காகத்தின் வாயிலிருந்து வடை கீழே விழுந்துவிட, அந்த வடையை நரி எடுத்துக் கொண்டு ஓடி விடும். இந்தக் கதையில் பாட்டி, ‘வடை போச்சே...!’ என்று நினைப்பார். காகமும் திருடிக் கொண்டு வந்த ‘வடை போச்சே...!’ என்று நினைப்பார். 

பாட்டியிடம் வடையைச் சுட்டுக் (திருடிக்) கொண்டு சென்ற காகத்திடம், வடையைச் சுட்டு (ஏமாற்றி) விட நினைத்த நரி காகத்தைப் பாடச் சொல்லிக் கேட்கும், காகம் முந்தையக் காலத்தில் தனது மூதாதையர்கள் ஏமாந்த மாதிரி ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த வடையைத் தன் காலில் கவ்விக் கொண்டு பாடும். நரி இந்தக் காகத்தை ஏமாற்ற முடியாது என்று திரும்பச் சென்று விடும் என்று பழைய கதையைச் சிறிது மாற்றிச் சொல்வதுமுண்டு. இந்தக் கதையிலும் பாட்டி, ‘வடை போச்சே...!’ என்று நினைப்பார். காகத்தை ஏமாற்ற நினைத்த நரி, ‘வடை போச்சே...!’ என்று நினைத்து ஓடிப் போனது.

இந்த மூன்று கதைகளும் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இதேப் போன்று, தமிழ் நாட்டார் கதைகளில் ‘வடை போச்சே...!’ பாணியிலான ஒரு நகைச்சுவைக் கதை இருக்கிறது. அந்தக் கதை தெரியுமா?  

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!
Pokkiri Movie - Vada Poche

வடை சாப்பிட வேண்டுமென்று நினைத்த கணவன், மனைவியிடம் வடை செய்வதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து, குறைந்தது 20 வடைகளை செய்ய வேண்டுமென்று சொல்லி வேலைக்குச் சென்றான். வேலையில் இருந்து திரும்பிய கணவன் தட்டில் ஒரே ஒரு வடை மட்டும் இருப்பதைக் கண்டு, கோபத்துடன் 'மற்ற வடைகள் எங்கே?' என்று கேட்டான். வடைகள் ருசியாக இருந்ததால், ஒரு வடை போக, அத்தனை வடைகளையும் அவள் சாப்பிட்டு விட்டதாகச் சொன்னாள். 'நான் வரும் முன்பு எப்படி நீ வடையைச் சாப்பிட்டாய்?' என்று கேட்டுச் சண்டையிட்டான். உடனே அவள், அந்தத் தட்டில் மீதமிருந்த அந்த ஒரு வடையையும் எடுத்து, தன் வாய்க்குள் போட்டு, 'இப்படித்தான் சாப்பிட்டுவிட்டேன்' என்றாள். அப்போது அந்தக் கணவன், ‘வடை போச்சே...!” என்று அங்கிருந்து வெளியேறினான். 

‘வடை போச்சே...!’ வடிவேலு படத்தில் சொன்ன இந்த வசனத்துக்குப் பின்னால் இத்தனைக் கதைகளா...?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com