காதலிக்க நேரமிருக்கு... ஆதலினால் காதல் செய்வீர்!

Love
Love
Published on

Valentine's day, இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் வழியே உலகிற்கே பரிச்சயமான நாளாகி மாறிக் கொண்டு வருகிறது. காதலர் தினம் யாரெல்லாம் கொண்டாட வேண்டும்? அது இன்று‌ புதிதாய் காதலிக்கும் நபர்களுக்காக மட்டும் தானா? காதல் செய்யும் உரிமை அவர்களுக்கு மட்டும் தானா? அப்படி எதுவும் வரைமுறைகள் எங்கும் இல்லையே!.

இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு வழியில் காதலைக் கொண்டாடிவிட்டுப்‌ போகட்டுமே.‌ அதில் நம் கவனத்தைத் திருப்ப வேண்டாம். திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள், பதினைந்து ஆண்டுகள், இருபது முப்பது ஆண்டுகள் கடந்த தம்பதியர்களும் காதலை கொண்டாடலாமே...

குடும்பம், அலுவலக பணி, குழந்தை, பெற்றோர்களை கவனிப்பது என‌ சதா காலமும் ஓடிக் கொண்டே இருக்கும் இல்வாழ்க்கையில் கொஞ்சமாவது காதலுக்காக நேரம் ஒதுக்குவது இன்றைய காலக்கட்டத்தில் அவசியம்தானே!

காதலைக் கொண்டாடுவது என்றால் உடனே திரைப்படங்களில் வருவது போல் செயற்கையான முறைகளில் இருக்கவேண்டும் என்றில்லை.

ஒரு நாளில் இருக்கும் இருபத்துநான்கு மணி நேரத்தில், ஒரு ஐந்து நிமிட உரையாடல், சின்னதாக ஒரு ஸ்பரிசம், ஒரு சிறிய பாராட்டு, இவையெல்லாம் கூட காதல் தானே..

மனைவியை வாரத்தில் ஒரு நாள் உட்காரவைத்து, 'நான் சமைக்கிறேன்' என சமையலறை ஓய்வை அவளுக்கு அளித்தால் அதுவும் காதல் தான்.

கணவனின் பைக் ரிப்பேர் ஆனால், தன்‌ ஸ்கூட்டியில் மனைவி அவனை ஆபிஸுக்கு ட்ராப் செய்வதும் காதல் தான்.

இதையும் படியுங்கள்:
காதலர்களே, Love bombing என்றால் என்னவென்று தெரியுமா?
Love

'அட இன்னிக்கு இவ்வளோ ஸ்மார்ட் ஆ இருக்கீங்களே' என ஒரு முறை உங்கள் கணவரிடம் சொல்லிப் பாருங்கள்... இந்த எதிர்பாராத பாராட்டில் கண்டிப்பாக மகிழ்ந்து தான்‌ போய்விடுவார் அவர்! எந்த வயதாக இருந்தால் என்ன? உங்கள் கணவரை பாராட்ட உங்களை விட‌ மேலானவர் யார் இருக்கப் போகிறார்கள்?

மெனோபாஸ் காலத்தில், எத்தனை மனைவிமார்கள், மன அழுத்தத்தை கணவன் மீது காண்பித்திருப்பார்கள். அத்தனைக்கும் அமைதியாய் இருந்து, ஆண்கள்‌ பலர் வாழ்க்கையை கடந்து போக வில்லையா! காதல் இருந்தாலொழிய இது சாத்தியம் இல்லையே!

திருமணம் ஆன புதிதில் மனைவி சமைத்த உணவை, சுமாராக இருந்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்ததில் காதல் கண்டிப்பாக இருந்திருக்கும்..

தான் என்ன வேண்டுமானாலும் குறை கூறலாம், ஆனால் தன்‌ துணையை யாராவது குறை கூறினால் கோபம் பொத்துக் கொண்டு வருமே, அங்கே இருப்பதும் காதல் தான்.

இருவருக்கு மத்தியில் பேச ஒன்றும் இல்லையெனினும், துணையின் இருப்பு ஒன்றே போதும் என எத்தனை தம்பதியர்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இதுவும் காதல் தான்..

இப்படி‌ அடுக்கிக் கொண்டே போகலாம் காதலின் விளக்கங்களை...

இதையும் படியுங்கள்:
Valentine’s day special: உங்கள் காதலனுக்கான Best Love Quotes!
Love

எனவே, காதல் என்பது திருமணத்திற்கு முன் ஏதோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது போல் பாவித்து, செயற்கையான நினைவுகளில் வாழ்வது இல்லை..

காதலித்து மணந்த துணையோ, குடும்பங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து அமைந்த துணையோ, திருமண பந்தத்தில் இணைந்த பின் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பந்தத்தை விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை பயணிக்கும் வாழ்க்கையே காதல்..

இது போன்ற பந்தங்களில் ,

காதல்.. அன்பினால் வெளிப்படலாம்..

காதல் ..கோபத்தினால் வெளிப்படலாம்.

காதல்.. விட்டுக் கொடுப்பதில் வெளிப்படலாம்..

காதல்.. அக்கறையில் வெளிப்படலாம்..

காதல்.. பல சமயங்களில் மௌனத்தில் வெளிப்படலாம்..

எந்த வயது தம்பதியராக இருந்தாலும், காதலைக் கொண்டாடுவோம். முடிந்த அளவுக்கு துணையிடம் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

காதலிக்க நேரமில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்காமல், காதலிக்க நேரமிருக்கு என‌ நினையுங்கள். சின்ன சின்ன செய்கைகளால் துணையை மகிழ்ச்சியாக பாரத்துக் கொள்ளுங்கள். இளைய தலைமுறை உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளட்டும் மெய்யான காதல் என்றால் என்ன என்று.....

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com