இந்தியர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பீகாரி, பெங்காலி, குஜராத்தி, மராட்டி, பஞ்சாபி... என பல்வேறு மொழிகளில் பேசுகின்றனர்.
அன்றாடம் உபயோகப் படுத்தப்படும் சொற்களுக்கு அர்த்தங்கள் பல்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக சொல்லப்படுகின்றன. அதே போல் உறவு முறைகளும் பல்வேறு மொழிகளில் வித விதமாக அழைக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு அம்மா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் மா, மாதாஜி, அம்மே, மம்மா, ஆய் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
ஆனால் ஒரே ஒரு உறவுமுறையை மட்டும் அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரியாக அழைக்கிறார்கள். அது எது தெரியுமா ?
மாமா... மாமா... மாமா!
ஆம், எல்லோரும் ஒரே மாதிரியாக ஆசையோடு கூப்பிடும் சொல் எது என்றால், அது மாமா என்கிற உறவுமுறை தான்.
தாயின் உடன் பிறந்த சகோதரனை மாமா என்று தான் அனைத்து இந்தியர்களும் அழைக்கிறார்கள். உண்மையிலேயே மாமா என்கிற அந்த உறவுமுறைக்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை.
இந்தியா முழுவதும் ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணமோ அல்லது எந்த சடங்கும் நடந்தாலும், மாமாவிற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.
நாம் நம்மிடம் உள்ள சில சொல்ல முடயாத பிரச்னைகளை பெற்றவர்களிடம் கூட கூற மாட்டோம். மாமாவிடம் தான் சொல்வோம். மாமா என்கிற உறவு நமக்கு தந்தை என்கிற உறவை விட உயர்ந்தது. எந்த நேரத்திலும் தோள் கொடுப்பார்கள் மாமாக்கள்.
திருமணத்திலே மாலை மாற்றுவதற்கு நம்மை மாமாக்கள் தானே தூக்கி தோளில் சுமக்கிறார்கள்.
எல்லா மதத்திலும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து தொடர்ந்து சீர் செய்யக் கூடிய ஒரே உறவு மாமா தான்.
தன் சகோதரிகளின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பவர் இந்த மாமா. அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதிற்கும் கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பார். குழந்தைக்கு முதன் முதலாக காது குத்தும் போது மாமா மடியில் தான் குழந்தையை உட்கார்த்தி வைப்பார்கள்.
பெங்காலி திருமணத்தில் டோலியில் மணப்பெண்ணை வைத்து மாமா தான் தூக்கி கொண்டு வருவார் மண்டபத்திற்கு.
நம் வீட்டில் எதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் ஆறுதல் கூற முதலில் வருவது மாமா தான்.
இந்த மாமாக்கள் தங்கள் சகோதரியின் குடும்பத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்.
நம் தமிழ் திரைப்பட உலகில் இந்த மாமா உறவுமுறையை எடுத்துரைத்து நிறைய படங்கள் வெளியிடப் பட்டுள்ளன.
பாசமலர் படத்திலே, “மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்” என்ற பாடல் வரிகளை யாராலும் மறக்க முடியாது.
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்...