
சாதாரணமாக 30 வயதில் ஆண்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை கூட இருக்கலாம். நல்ல வேலை கிடைத்து ஓரளவு வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்கலாம். இந்த நிலையில் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுவதற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஏழு விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. தசை பருமனை (Muscle mass) மெயின்டெயின் செய்வது
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்களுடைய தசை பருமனில் கவனம் செலுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது வலிமை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பளுத் தூக்குதல் போன்ற செயல்பாடுகள் தசை வலிமை மற்றும் செயல்பாட்டை பராமரிக்க உதவுகின்றன. மெலிந்த இறைச்சிகள், பால் பொருள்கள், சுண்டல் போன்ற பருப்பு வகைகள், பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தசைக் கட்டமைப்பையும் வலிமையையும் பராமரிக்க உதவுகின்றன.
2. சரியான இடுப்பு அளவு
மனிதர்களின் வயது அதிகரிப்பதற்கு ஏற்ப அவர்களின் வளர்ச்சிதை மாற்றம் குறைகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும். பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் மற்றும் இடுப்பு பகுதியில் வெயிட் போடுவது டைப் டூ நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு வரவேற்பது தருவது போல் ஆகிவிடும். எனவே ஆண்கள் தங்கள் இடுப்பு அளவை தொடர்ந்து சரி பார்த்து வரவேண்டும். தங்கள் மொத்த உடல் எடையில் பாதி தான் இடுப்பின் சுற்றளவு இருக்க வேண்டும். 40 இன்ச் என்பது ஆபத்து தான். ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி மூலம் இடுப்பின் சுற்றளவை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
3. இதய ஆரோக்கியம்
அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை இதய நோயுடன் தொடர்புடையவை. எனவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை கைவிட வேண்டும். தளர்வு நுட்பங்கள் அல்லது பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
4. வழக்கமான சுகாதார பரிசோதனைகள்
கொலஸ்ட்ரால் அளவுகள் உள்ளிட்ட பரிசோதனைகளை 30 வயதிலிருந்தே செய்யத் தொடங்க வேண்டும். ஆண்டு தோறும் இவற்றை தவறாமல் செய்து வரும் போது ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் முன்னரே கண்டுபிடிக்க எளிதாக இருக்கும்.
5. எலும்பு ஆரோக்கியம்
வயதாகும் போது எழும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். எனவே முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் வைத்து போதுமான கால்சியம் மற்றும் விட்டமின் டி உள்ள உணவுகளை உட்கொள்வது, நடைபயிற்சி, ஓடுதல் போன்ற எலும்புகளின் எடையை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்..
6. மன ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். மன அழுத்தத்திலிருந்து மிக விரைவில் விடுபட்டு மனநிறைவு தரும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். நாட்குறிப்பு எழுதுதல், அல்லது விரும்பும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவை மனதை லேசாக வைக்கும். நண்பர்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
7. வாழ்நாள் முழுவதும் கற்றல்
புதிய விஷயங்களை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கும் போது அது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கு நேர்மறையான பங்களிப்பை அளிக்கிறது.