

வாஸ்து சாஸ்திரப்படியும், இந்து சாஸ்திர முறைகளின்படியும் சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பொருட்களை தொடர்ந்து வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். வீட்டில் செல்வம் தங்காது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் இருந்து அகற்ற வேண்டிய 5 பொருட்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
1. வாடிய துளசி செடிகள் : வாஸ்து சாஸ்திரப்படி வாடிய துளசி செடியை வீட்டில் வைப்பது நல்லதல்ல. ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என நம்பப்படுகிறது.
மேலும் காய்ந்த அல்லது வாடிய துளசி செடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்; லட்சுமி கடாட்சத்தை தடுக்கும். துளசி செடிகள் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், வாடிய செடிகளை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய துளசி செடியை மாற்றுவது அவசியம். வீட்டின் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பது மிகவும் மங்களகரமானது. துளசி செடியை வீட்டில் உள்ள கழிவறைகள் அல்லது குளியலறைக்கு அருகில் வைக்கக்கூடாது. அதுவும் வீட்டிற்கு நல்லதல்ல.
2. சேதமுற்ற கடவுள் படங்கள் அல்லது சிலைகள் : சேதமடைந்த கடவுள் படங்கள் அல்லது சிலைகளை வீட்டில் வைப்பது நல்லதல்ல. அவை வீட்டில் எதிர்மறை சக்தியை உண்டாக்கி, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கும். மேலும் வீட்டில் வைத்திருக்கும் பழைய மற்றும் கிழிந்த படங்கள் மற்றும் உடைந்த சாமி சிலைகளில் தெய்வ சக்தி தங்காது. உடைந்த படங்களை வீட்டில் வைத்துக்கொள்வதை தவிர்த்து, அவற்றை முறையாக நீக்கி, புதிய, முழுமையான படங்களை வைத்து வழிபடுவது நல்லது.
3. விரிசல் விட்ட பாத்திரங்கள் : இந்த பாத்திரங்களை சமையலுக்கோ அல்லது உணவு பரிமாறவோ பயன்படுத்தக் கூடாது. இத்தகைய பாத்திரங்கள் வீட்டில் இருந்தால் அன்னபூரணியின் அருளை குறைத்து வீட்டில் வறுமையை உண்டாக்கும். விரிசல் பாத்திரங்கள், உடைந்த கண்ணாடிகள் போல, வீட்டினுள் எதிர்மறை அதிர்வுகளைப் பரப்பும்.
4. தேய்ந்து போன துடைப்பம் : வாஸ்து சாஸ்திரத்தின்படி, துடைப்பம் தேயத் தேய வீட்டில் உள்ள செல்வமும் கரையும் என்பதால், அது உடைந்துபோகும் முன், புதிய துடைப்பம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் பழைய, உடைந்த துடைப்பத்தை வாசலில் படுக்க வைப்பது, மகாலட்சுமிக்கு அவமரியாதை செய்வது போலாகும், இதனால் செல்வம் தங்காது என்றும் கூறப்படுகிறது. எனவே தேய்ந்த துடைப்பத்தை உடனே மாற்றி புதியதை வாங்கி, அதை வாஸ்துப்படி சரியான இடத்தில் வைப்பது அவசியம். புதிய துடைப்பத்தை வீட்டின் ஒரு மூலையில், வாசலை அடைக்காதவாறு, மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வைக்க வேண்டும்.
5. கிழிந்த பழைய கால் மிதியடி : கிழிந்த பழைய கால் மிதியடி எப்படி அழுக்கை வீட்டிற்குள் நுழைய விடுமோ அதேபோல் எதிர்மறை ஆற்றலையும் வீட்டின் உள்ளே நுழைய விட்டுவிடும். அது எதிர்மறை ஆற்றலை (Negative Energy) ஈர்க்கும், செல்வ வரவைக் குறைக்கும், புதிய வரவுகளைத் தடுக்கும் என்பதால், அதை உடனடியாக அப்புறப்படுத்துவது நல்லது.
பழைய மிதியடி போன்ற சேதமடைந்த பொருட்கள் வீட்டிற்குள் இருப்பது மங்களகரமானதல்ல. குறிப்பாக நவகிரகங்களின் தாக்கம் உள்ள நாட்களில் அவற்றை நீக்குவது அவசியம், ஏனெனில் அவை நல்ல அதிர்ஷ்டத்தையும், புதிய வாய்ப்புகளையும் தடுக்கும்.
புதிய வருடம் தொடங்கி விட்டது. இந்த வருடம் உங்களுக்கு நல்ல ஆண்டாக அமைய உங்கள் வீட்டில் இத்தகைய பொருட்கள் இருந்தால் உடனடியாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். ஆனால் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் அகற்றக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.