பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் வன்கொடுமைகள் நாட்டில் நிறைய நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே ஆண்களும் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது நிதர்சனம். அவை என்ன, அவற்றை சமாளிக்கும் விதங்கள் யாவை என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
குடும்ப துஷ்பிரயோகம்: பல குடும்பங்களில் ஆண்கள் தங்கள் துணைவியரிடமிருந்து உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளை அனுபவிக்கின்றனர். ஆண்களைப் பற்றிய ஒரே மாதிரியான கருத்துக்கள் சமூகத்தில் விரவிக் கிடப்பதால் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி என்கிற ஆணித்தரமான கருத்து பெரும்பான்மையான பெண்களின் மனதில் இருக்கிறது. எனவே, தங்கள் துணைவர் சிறு தவறுகள் செய்யும்போது இதுபோலத்தான் எல்லா ஆண்களும் நடந்து கொள்கிறார்கள் என்கிற பொதுப்படையான கருத்து பெண்கள் மனதில் எழுகிறது.
தங்கள் வார்த்தைகளால் துணைவரை புண்படுத்துவதும், சிலர் அடிக்கவும் செய்கின்றனர். சிறிய விஷயங்களில் அவர்கள் செய்யும் தவறுகளை பெரிய விஷயமாகக் கருதி அவர்களை அவமானப்படுத்துவதும் நடைபெறுகிறது. காய்கறி சரியாக வாங்கி வரவில்லை என்றால் கூட, 'ஒரு வேலையும் உருப்படியா பண்ணத் தெரியாது' என்கிற ஏச்சுப் பேச்சிற்கும், ஆடம்பர செலவுகளுக்கு பணம் தராத ஆண்கள் அவமானங்களையும் சந்திக்கிறார்கள். ஒரு மனிதனின் சுயமரியாதையை குறைத்து மதிப்பிடும் நோக்கத்தில் கையாளப்படும்போது கடுமையான மன உளைச்சலை அடைகிறார்கள்.
சமூக களங்கம்: பல கலாசாரங்கள் ஆண்கள் வலுவாகவும் நெகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்ற கருத்தை ஊக்குவிக்கின்றன. பெண்களுக்கு ஆதரவாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது என்னும்போது ஆண்களுக்கான ஆதரவு குறைவாகவே இருக்கிறது. அவர்கள் மேல் அவநம்பிக்கை மற்றும் கேலி கருத்துகளை வீச சமூகம் தயங்குவதில்லை. பெரும்பாலும் ஆண்களை குற்றவாளிகளாகத்தான் இந்த சமூகம் சித்தரிக்கிறது. சில விவாகரத்து வழக்குகளில் பொய்யான குற்றச்சாட்டுகளை பெண்கள் முன்வைக்கிறார்கள் என வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். சில இடங்களில் ஆண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலையும் சந்திக்கிறார்கள். இது அவர்களது மனதிலும், உடலிலும் காயங்களாக மாறி மனநலப் பிரச்னைகளு வழி வகுக்கலாம்.
உடல்ரீதியான வன்முறை: சில குடும்பங்களில் ஆண்கள் தங்கள் மனைவி அல்லது உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். காதலில் ஈடுபடும் ஆண்கள் தனது காதலியின் குடும்பத்தாரால் மிரட்டப்படுவது, கடுமையாக தாக்கப்படுவது, சில இடங்களில் கொலை செய்யப்படுவது போன்றவை நடக்கின்றன.
துன்புறுத்தல்: கல்வி அமைப்புகள் அல்லது பணியிடங்களில் சிறுவர்களும் ஆண்களும் கொடுமைப்படுத்துதலை எதிர்கொள்ள நேரிடலாம். பாலியல் நோக்கு, உடல் தோற்றம் போன்றவற்றிற்காக அவர்களுக்கு எதிரான வன்முறை நடைபெறுகிறது. இது நீண்டகால உணர்ச்சிகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
நிறுவன வன்முறை: ஆக்கிரமிப்பு, காவல் நடைமுறைகள், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் போன்ற அமைப்பு ரீதியான வழிகள் மூலம் ஆண்கள் வன்முறையை சந்திக்க நேரிடலாம். தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறைக்குச் செல்லவும் நேரலாம்.
மோதல்: ஆயுத மோதல்களில் பெரும்பாலும் ஆண்கள் பெரும்பான்மையான போராளிகளை உருவாக்குகிறார்கள். இது அவர்களுக்கு உடல் ரீதியான தீங்கு, அதிர்ச்சி மற்றும் உணர்ச்சி சீர்குலைவு ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனால் அரசியல் அமைதியின்மை, ஏற்பட்டு வன்முறைக்கு ஆளாக நேரிடலாம்.
எதிர்கொள்ளும் விதங்கள்: வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆதரவு சேவைகள் மற்றும் ஹாட் லைன்களை நிறுவுதல் வேண்டும். அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளைத் தர முன் வர வேண்டும். தங்கள் உணர்வுகள் மற்றும் வன்முறை தொடர்பான அனுபவங்களைப் பற்றி விவாதிக்க சமூக ஆதரவு தரப்பட வேண்டும்.
பாலினத்தை பொருட்படுத்தாமல் வன்முறையில் இருந்து அனைத்துத் தனி நபர்களையும் பாதுகாக்கும் கொள்கைகளுக்காக வழக்கறிஞர்கள் வாதிட முன்வர வேண்டும். ஆண்கள் பாதிக்கப்படுவதை நிவர்த்தி செய்வதற்கான விரிவான சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.