காத்திருத்தலும் சுகமே!

காத்திருத்தலும் சுகமே!
Published on

சாலைகளில் க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரங்களில் கவனித்திருப்பீர்கள். பைக்கின் திராட்டிலைப் பிடித்து முறுக்கிக்கொண்டு முகத்தில் பொறுமையின்மை வெளிப்படையாகத் தெரிய தவிப்புடன் காத்திருக்கும் இளைஞர்கள், பச்சை விளக்கு கண்ணில் பட்டவுடன் ‘சர்’ என வண்டியில் சீறிப் பாய்ந்து கிளம்புவர் .'’அப்படி இவ்வளவு அவசரமாக எங்கேதான் போறாங்க இவங்க? ‘’ என்று நமக்குள் ஒரு கேள்வி எழும் தானே? தற்போது இளைஞர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயது மற்றும் 60 வயதைக் கடந்த பெரியவர்கள் கூட வண்டி ஓட்டும் போது பொறுமையை கடைப்பிடிப்பது இல்லை என்பது கசப்பான உண்மை.

துணிக்கடைகள், மால்கள் நகைக் கடைகளில், லிஃப்ட்களில், லிஃப்ட் ஆபரேட்டர்களை நியமித் திருப்பர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் சேர்ந்த பின்பு ஒவ்வொருவரையும், " நீங்க எந்த ஃப்ளோர் போகணும்?" என்று விசாரித்து ஒவ்வொரு தளத்திலும் மின் தூக்கி நிற்கும்போது இறங்க வேண்டியவர்களை இறக்கி விட்டு, புதிதாக வரும் வாடிக்கையாளர்களை செல்லுமிடம் கேட்டு தெரிந்து நெறிப்படுத்துவது தான் அவருடைய வேலை. லிஃப்ட் ஆபரேட்டர்கள் மட்டும் இல்லை என்றால் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட இடங்களில் வாய்த் தகராறு எழுவது நிச்சயம். ஏனென்றால் மக்களுக்கு காத்திருக்கும் பொறுமை இல்லாமல் போனதுதான். 

லுவலகங்கள் மற்றும் சிறிய அடுக்ககங்களில் (அப்பார்ண்ட்மெண்ட்) மின் தூக்கியை உபயோகிக்கும் போது சில விஷயங்களை கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும். லிப்ஃட்டின் கதவுகளை மூடும் முன், காரிடாரில் யாராவது நடந்து வந்து கொண்டிருந்தால் அவருக்காக சற்றே காத்திருந்து, அவர்கள் உள்ளே வந்த பின்பு கதவை மூடுவதுதான் முறை. "நான் முன்னாடி போகிறேன் அவர்கள் அப்புறம் வரட்டும்" என்ற எண்ணமே கூடாது. நாம் மற்றவர்களின் நேரத்தை மட்டும் அல்ல மின்சாரத்தையும் வீணடிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பார்ட்மெண்ட்களில் வசிப்பவர்களிடம் காமன் கரண்ட் பில் எவ்வளவு வருகிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டால் நிச்சயம் மயக்கம் வரும்.  சிலர் லிஃப்ட்டுக்காக காத்திருக்கும் அந்த முப்பது வினாடிகளில் கூட பொறுமையின்றி தவிப்பதை பார்த்திருக்கிறேன். இந்த மிகச் சில வினாடி நேரத்தை மிச்சப்படுத்தி இவர்கள் என்ன சாதித்து விடப் போகிறார்கள் என்று நினைத்து ஆச்சரியப்படத் தோன்றும்.

அதே போல ரயில்களில், வண்டி நிலையத்தை அடையும் முன்பே பெட்டி, பைகளுடன் கதவருகிலும், நடைபாதையை அடைத்தபடியும் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது,  ‘’ஏனுங்க.... இதுக்கு முன்னாடி  நீங்கள்லாம் வாழ்க்கையில ஒரு நிமிஷத்தைக் கூட வேஸ்ட் பண்ணினது இல்லன்னு உங்க மனசாட்சியத் தொட்டு சொல்லுங்க?’’ என கவுண்டமணி அவர்களைப் பார்த்துக் கேட்பதைப் போல கற்பனை செய்து கொள்வேன். ரயிலில் மட்டுமல்ல, விமானப் பயணங் களிலும் இதே கதைதானே நடக்கிறது? விமானம் தரையிறங்கியதும், கதவு திறக்கப்படும் முன்பே நிறையப் பேர் எழுந்து நின்று ஹேன்ட் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி பாயத் தயாராக இருக்கின்றனரே? 

கடந்த மாதம் நான் குடும்பத்துடன் பழனிக்குச் சென்றிருந்தேன். அது ஒரு விடுமுறை நாள் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. யானைப் பாதை படிகளில் ஏறிச்செல்லும் போது பின்புறமிருந்தும், பக்கவாட்டிலும் பக்தர்கள் கூட்டம் நெட்டித் தள்ளியது. சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில் காத்திருந்தபோது, ஐயப்பசாமி பக்தர்கள் கும்பல் நின்றிருந்த ஒற்றை வரிசையை சட்டை செய்யாமல் அவர்களாகவே இரண்டு மூன்று வரிசைகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறினர். பொதுவாக ஐயப்ப மலைக்கு மாலை போடும் சாமிகள் பிற மனிதர்களின் மீது தங்கள் அங்கங்கள் படாமல் ஜாக்கிரதையாக இருப்பர். ஆனால் இவர்கள் அதை எல்லாம் லட்சியம் செய்யாமல் மற்றவர்கள் மேல் இடித்து மோதியபடி முன்னேறியதைப் பார்த்து வருத்தம் மேலிட்டது. அது ஒரு கோயில் என்பதையும் சுவாமி தரிசனம் செய்யத்தான் அத்தனை பக்தர்களும் காத்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட்டு துளிகூட பொறுப்பில்லாமல் நடந்து கொண்டனர். 

நான் தினமும் வாக்கிங் செல்லும் சாலையில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் இரண்டு மூன்று மயில்கள் தங்கள் குஞ்சுகளோடு வந்து இரை தேடித் திரியும். நான் தினமும் ஒரு கைப்பிடி அளவு அரிசி அல்லது கோதுமையை எடுத்துச் சென்று மயில்கள் மேயும் இடத்தில் போட ஆரம்பித்தேன்.

சமீபத்தில் ஒருவர் ஒரு கிலோ அரிசி இருக்கும், மயில்கள் மேயும் இடத்தில் அப்படியே குவியலாக தரையில் கொட்டினார். ‘'என்ன செய்றீங்க?'’ என்று நான் கேட்டேன். "எனக்கு ஜாதகத்துல தோஷமாம். அதனால பறவைகளுக்கு தீவனம் வைக்கிறது நல்லதொரு பரிகாரம், கெடு பலன்கள் குறையும்னு ஜோசியக்காரர் சொன்னாரு. தினம் தினம் வந்து வைக்கிறதுக்கு யாருக்கு சார் நேரம் இருக்கு? அதான் ஒரு மாசத்துக்கு ஒருக்கா இப்படி வந்து ஒரு கிலோ அரிசியை மொத்தமா போட்டுட்டு போயிரலாம்னு நினைக்கிறேன்" என்றார். "அடக்கடவுளே.... இந்த விஷயத்தில் கூடவா இவருக்கு பொறுமை இல்லை? தினமும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், என எத்தனை மணி நேரங்களை அலைபேசி யிலும், வெட்டி அரட்டையிலும் செலவழிக்கிறோம்? ஒரு பத்து நிமிடம் வந்து தினமும் இந்த பறவைகளுக்கு உணவளிக்க கூடாதா என்று நினைக்கத் தோன்றியது எனக்கு. 

சமீபத்தில் பார்த்த ஆஸ்கார் விருது பெற்ற ஒரு குறும்படம் காத்திருத்தலின் அவசியத்தையும் விட்டுக் கொடுத்தலின் மேன்மையையும் மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தது. மால் ஒன்றில், மூடப் போகும் லிஃப்ட்டின் கதவுகளை கவனித்து ஓடி வந்து ஏறுகிறான் ஒரு இளைஞன். ‘ஓவர் லோட் ஒன் பர்சன்’ என்று எச்சரிக்கை காட்டும் லிஃப்ட் நகர மறுக்கிறது. ஒரு ஆள் அதிலிருந்து வெளியேறினால்தான் அது செயல்படும். புதிதாக வந்த இளைஞன் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போல தன் கையில் இருக்கும் செல்போனில் கவனம் கொள்கிறான். அங்கிருக்கும் மற்ற நபர்களும் தங்கள் கைக்கடிகாரத்தை பார்த்தபடி முகம் சுழித்துக் கொண்டு நிற்கிறார்களே ஒழிய, ஒருவருக்கும் வெளியே போகும் எண்ணமில்லை. அப்போது அந்தக் கூட்டத்தின் உட்புறம் நின்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தாங்கு கட்டைகளுடன் அந்த லிப்டில் இருந்து வெளியேறிச் செல்கிறார். மாற்றுத்திறனாளிகளால் பொதுவாக தங்களுடைய வேலைகளை மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் தான் செய்ய முடியும். நேரமாகிறதே என அவர்கள் அலுத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பார்த்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா?

ரு குழந்தை இந்த மண்ணில் வந்து பிறப்பதற்கு பத்து மாதங்கள் காத்திருக்கிறோம். நாம் விரும்பியபடி வீட்டை கட்டி முடிக்க குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்கிறோம். இந்த நாட்டை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்க ஐந்து வருடங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது மிகச் சில வினாடிகளை மிச்சப்படுத்தி நாம் பெரிதாய் சாதித்து விடப் போவது ஒன்றும் இல்லை இனி சிக்னலிலும் லிப்ஃட்டிலும், ரயில் விமானப் பயணங்களிலும் சில வினாடிகள் காத்திருப்பை பொறுமையுடன் இனிமையாக எதிர்கொள்வோமா? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com