
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆண்கள் எப்படி உறங்கி விழித்தாலும், குடும்பத்தின் குத்துவிளக்காக ஒளிவீசும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்துத் தலையில் துண்டுடனும், கையில் காபியுடனும் கணவனை எழுப்புவது அல்லது தூபக்காலை கையிலேந்தி சாம்பிராணி புகையை இல்லம் முழுதும் காட்டும் பெண்கள் மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பே இருந்து வந்தது.
பெரும்பான்மையான பெண்களும் தாம் அவ்வாறு இருப்பதையே விரும்பினர். இப்போது எல்லாம் கேள்விக்குறியாகிப் போய்விட்டது. கதிரவன் உச்சிக்கு வரும்போது குளிரூட்டப் பெற்ற அறையின் ஜன்னல்களின் திரைச்சீலை ஒளியை உள்ளேவிட மறுத்து விடுகின்றது, வாழ்க்கையிலும்தான்.
தொழில் யுகமாக மாறிய இக்காலத்தில் பகல், இரவு எது என்று பிரித்தறியாத அளவுக்கு வேலைகள் எல்லா நேரங்களிலும் செய்யப் பெறுகின்றன. சூரியன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவனது பணி மின்சாரத்திடம் மாற்றி விடப்படுகிறது. சூரியனுக்குப் பகல் ஷிப்ட், மின்சாரத்திற்கு இரவு ஷிப்ட் என்று ஆகிப்போனதால் மனிதனும் ஷிப்ட் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளது.
அதிலும் முக்கியமாக கணினியில் பணிபுரிவோர் அதாவது தொலைத் தொடர்புத் துறையில் (ஐ.டி) அங்கெங்கெனாதபடி பரவிவிட்டபின் பகல், இரவு வேறுபாடு இல்லாது போயிற்று என்று கூறினால் நிச்சயம் பொருந்தும்.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகிப்போன இக்காலத்தில் நைட் ஷிப்ட் பார்க்க பெண்களும் தயங்குவதில்லை. தயங்கவும் முடியாது. முக்கியமாக ஐ.டி. துறையில் இருப்போருக்கு இந்த ஷிப்ட் முறையும் கைகொடுப்பதில்லை. கையில் எடுத்த ஒரு ப்ராஜக்ட் முடியும்வரை மூன்று, நான்கு, ஐந்து நாள் என்று போய் ஒரு வாரம் கூட உறங்காமல் இருக்கும் பணியாளர்களையும் பார்க்க முடிகிறது. உரிய நேரத்தில் உறக்கம் இல்லை. தேவையான அளவு உறக்கமும் இருப்பதில்லை. அதனால்தான் இளம் வயதிலே ஊதிப் பருத்து நோயாளிகளாக மாறி விடுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.
இரவில் முன் கூட்டியே தூங்கச்சென்று அதிகாலையில் கண்விழிப்பது உடல்நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார்.
அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை நம் முன்னோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த விந்தையை எப்படிக் கூறுவது? அவர்களின் உடலியல் நுட்பத்தை எப்படி பாராட்டுவது? நாம் நம் கையில் இருக்கும் தீபத்தைத் தூக்கி எறிந்துவிட்டு இந்த ஆராய்ச்சியை இப்போது நடத்திய இங்கிலாந்தைப் பாராட்டுகிறோம். இருக்கட்டும். ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?
இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1,100 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல்நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அதிக வேலையை சோர்வின்றி செய்தனர்.
அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளைத் தொடங்குபவர்கள் உடல்நலத்துடன் இருப்பதை நாம் இப்பொழுதும் பார்க்கலாம்.