
பயம் எல்லோருக்குமே ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்கத்தான் செய்யும். குழந்தைகளுக்கு குறும்பு செய்து விட்டால் பெற்றோர்கள் திட்டுவார்களோ என்ற பயம். பெரியவர்களுக்கு ஏதாவது வேண்டுமென்று கேட்டு விட்டால் பிள்ளைகள் சங்கடப்படுவார்களோ என்று பயம். வாலிபப் பிள்ளைகளுக்கு பரீட்சையில் என்ன மார்க் வருமோ, அதை எப்படி எதிர்கொள்வோமோ என்ற பயம். திருமணமான பெண்ணிற்கு மாமியார் வீட்டிற்கு சென்று முதன் முதலாக அவர்களிடம் பழகி எப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்ளப் போகிறோமோ என்ற பயம். இது எல்லாம் எல்லோருக்கும் இருக்கும் பயம்தான். ஆனால், ஒரு வாலிபருக்கு பயம் வந்தால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் காண்போம்.
அன்பு மகனை ஒரு தாய் மிகவும் ஆசை பாசமாகத்தான் வளர்த்தார். இன்னும் சொல்லப்போனால் நல்ல ஒழுக்கங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். என்றாலும் சிறு வயதிலிருந்தே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பழக விட மாட்டார். யாராவது சிறுவர் சிறுமியர் சேர்ந்து விளையாடுவதற்கு வந்தால் தனது மகனை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்து விடுவார். இதனால் அந்தப் பையனுக்கு யாரிடமும் சேர்ந்து பேசவோ சிரிக்கவோ ஒரு அச்ச உணர்வு இளம் வயதிலிருந்து தொற்றிக்கொண்டு விட்டது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர், ‘குழந்தையை எல்லோருடனும் விளையாட விடு. பேசிப் பழக விடு’ என்று சொன்னால் ‘என் பிள்ளையை எனக்கு வளர்க்கத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று சட்டென்று கூறி விடுவார். இதனால் பயந்து கொண்டு யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.
அவன் அதிகமாகவும் படிக்கவில்லை. படிப்பதற்கு சென்றால் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து பையன் கெட்டு விடுவான் என்று அந்தத் தாய்க்குப் பயம். இப்படியாக வளர்ந்த பையனுக்கு திருமண பேச்சு ஆரம்பித்தது. திருமணமும் நன்றாகத்தான் நடந்தது, என்றாலும் மனைவியுடன் பேச, அவளைப் பார்ப்பதற்கே அவனுக்கு ஒரு அச்சம். மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்வதென்றால் அவனுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிடும். ‘நான் அங்கெல்லாம் வர மாட்டேன். நீ வேண்டுமானால் உன் அம்மா வீட்டிற்கு சென்று வா’ என்று மனைவியை நேருக்கு நேர் கூட பார்த்து பேசாமல் இந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு பேசுவான்.
அந்தப் பெண்ணிற்கு எப்படி இருக்கும்? மிகவும் கவலை அடைந்தாள். இவரை எப்படி திருத்தப் போகிறோம் என்று அவளுக்குப் பயம் வந்துவிட்டது. தனது மகன், மருமகளோடு நல்ல பேச்சு வார்த்தையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அவனது தாயும், தந்தையும் இதுகுறித்து கவலைப்பட ஆரம்பித்தனர். அந்தத் தாய்க்கு அதுவரையில் நாம் மகனை நன்றாக வளர்த்து விட்டோம். நம் சொற்படிதான் கேட்கிறான், நடந்தும் கொள்கிறான். அவன் இதுவரை எந்தத் தவறும் செய்ததில்லை. மிகவும் நல்ல பையன் என்று பெயர் வாங்கி இருக்கிறான். இது போதும். நன்றாக வாழ்ந்து விடுவான். நன்றாக வளர்த்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் மிதந்த தாய்க்கு அப்பொழுதுதான் தன்னுடைய வளர்ப்பு முறையில் இருந்த தவறே புரிய ஆரம்பித்தது.
உற்றார் உறவினர் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் கூட பிள்ளையை அங்கு அழைத்துச் சென்று அதில் கலந்து கொள்ள விடுவதில்லை. இப்படியாக மற்றவர்களுடன் கலந்து பேசி உரையாடுவதற்கான ஒரு வாய்ப்பையே அந்த பையனுக்குக் கொடுக்காமல் வளர்த்ததால் அவனும் நாளடைவில் மனிதர்களைப் பார்த்து பேசுவது என்றாலே வெட்கப்பட ஆரம்பித்தான். அதுவும் பெண் பிள்ளை, மனைவி என்றால் அவளைப் பார்த்து பேச அவன் மனம் இடம் கொடுக்காததால் அமைதியாகவே இருந்து வந்தான். அப்படிப் பேசுவதை கூட நாம் செய்வது தவறோ என்று நினைக்க ஆரம்பித்தான்.
பின்னர் இதைப் புரிந்து கொண்ட அவனது அப்பா மெல்ல மெல்ல பையனிடம் நெருங்கிப் பேசி அவனுக்கு சில விஷயங்களைப் புரிய வைத்தார். ஊரில் நடக்கும் திருமண வைபவம் மற்றும் எல்லா விதமான விசேஷங்களுக்கும் அழைத்துச் சென்றார். அங்கே அவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதிலிருந்து எல்லாவற்றையும் அவன் கையில் கொடுத்து செய்ய வைத்தார். அங்கு வந்திருக்கும் உறவு முறைகளை அறிமுகப்படுத்தி உறவுமுறைகளை சொல்லி அழைக்க வைத்தார். இப்படியாக மெல்ல மெல்ல அவனை மாற்றி ஒரு சாதாரண மனிதனாக கொண்டு வருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன.
அதன் பிறகுதான் மனைவியுடன் சகஜமாகப் பேசுவோ பழகவோ ஆரம்பித்தான். என்றாலும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றால் அதை செய்வதற்கு ஒரு தயக்கம் இருக்கும். அதோடு இல்லாமல் நாம் செய்வது சரியா? தவறாக செய்கிறோமோ என்று எப்பொழுதும் எதிலும் ஒரு பயம் வந்து கொண்டே இருக்கும்.
இதை அவனது மனைவி நன்றாகப் புரிந்து கொண்டு ஊக்கப்படுத்தி உங்கள் பயம் யாரையெல்லாம் பாதிக்கும் தெரியுமா? உங்களை நம்பி இருக்கும் நம் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் என எல்லோரையும் இது நெருக்கடியில் தள்ளிவிடும். நம் குழந்தைகளுக்கும் இது பெரிய சுமையாக மாறிவிடும். பிறகு குழந்தைகள் உங்களிடம் பேசுவதை புறக்கணிப்பார்கள். அப்பாவுக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அது உங்களை மீண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு அழைத்துச் செல்லும். ஆதலால் எந்த ஒரு வேலையையும் இயல்பாக செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். சிறிது நேரம் ஆனாலும் பரவாயில்லை. நாங்கள் யாரும் எதுவும் உங்களை குற்றமாக பேச மாட்டோம் என்று மெல்ல மெல்ல சிறு குழந்தைக்கு பாடம் கற்பிப்பதை போல் அந்தப் பெண் பொறுமையாக இருந்து அந்தப் பையனை நல்வழிப்படுத்தினாள்.
வீட்டிற்கு தூணாக இருக்கும் ஒரு ஆண் மகன் எல்லாவற்றிற்கும் பயந்தால், அது வீட்டில் இருக்கும் எல்லோரையும் ஒருவித சோகத்தில் தள்ளிவிடும். வாய்க்கும் மனைவியும் இதை சரிவர புரிந்து கொண்டு நடந்து விட்டால் பிரச்னை இல்லை. என்றாலும் சரியாகப் புரிந்து கொள்ளாதவராக இருந்தால் அந்த வீட்டில் எரிமலை, பூகம்பம் எல்லாமே வெடிக்க ஆரம்பித்து விடும்.
ஆதலால் ஆணோ பெண்ணோ அவர்களை குழந்தை பருவத்திலிருந்து எல்லோரோடும் நன்றாகப் பழகி விளையாட அனுமதிக்க வேண்டும். குழந்தை பருவத்தில் அவர்களை எப்படியெல்லாம் கையாள வேண்டுமோ அப்படி ஒவ்வொரு பருவத்திலும் பருவத்திற்கு தகுந்த மாதிரியான விஷயங்களை சொல்லிக் கொடுத்து எல்லோருடனும் அன்பாகவும், இணக்கமாகவும், சில நேரம் குழந்தைகளுக்குள் சண்டை வந்தால் கூட அதை எப்படி விட்டுக் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும், உணவுப் பொருட்களை எப்படிப் பகிர்ந்து உண்ண வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினர், பெரியவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்து பழக்கி வருவது தாயாரின் கடமை.
நம் குழந்தை மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்கள் அடித்து விடுவார்களோ, அவர்களுடன் சேர்ந்து இவன் கெட்டவனாக மாறி விடுவானோ என்ற பயத்தில் நாம் பூட்டி வைக்க ஆரம்பித்தால், அது பின் நாட்களில் அவனையே பாதித்து, மனைவியை பெரும் போராட்டத்திற்கு வழி வகுக்க வைத்து விடும்.
ஆதலால் குழந்தைகளுக்கு பயத்தை களைய வேண்டியது தாயின் கடமை. அதேபோல் வளர்ந்த பருவத்தில் எதில் பயம் இருந்தாலும் அதை மனதில் போட்டு பூட்டி வைக்காமல் பெற்றோரிடம், வாழ்க்கைத் துணையிடம், நண்பர்களிடம் மற்றும் தனக்கு மேலானவர்கள் இவர்கள். இவர்களிடம் கூறினால் நமக்கு ஆறுதல் கிடைக்கும் என்று யாரை விரும்புகிறீர்களோ அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் தீர்வுகளும் ஆறுதலும் நிச்சயம் கிடைத்து நேர்மறை ஆற்றலுடன், செய்யும் செயலில் தீவிரத்தையும் ஏற்படுத்தித் தரும்.