Wallpaper Removal Tips:
வீட்டைப் புதுப்பிக்க நினைக்கும் பலரும் முதலில் செய்வது சுவர்களுக்கு அழகான வால்பேப்பர்களை ஒட்டுவதுதான். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த காகிதங்கள், காலப்போக்கில் நிறம் மங்கினாலோ அல்லது கிழிந்து போனாலோ அதை அகற்றுவது மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும்.
பல நேரங்களில் நாம் அதைச் சுரண்டி எடுக்கும்போது, சுவரில் இருக்கும் சிமெண்ட் பூச்சும் பெயர்ந்து வந்துவிடும். இதனால் வீட்டின் அழகே கெட்டுப்போகும். ஆனால் அதிகச் செலவில்லாமல், சரியான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால், ஒரு மணி நேரத்தில் சுவர் சேதமில்லாமல் பழைய வால்பேப்பர்களை நீக்க முடியும்.
முன்னெச்சரிக்கை!
வேலையைத் தொடங்குவதற்கு முன் அறையில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பது அவசியம். வால்பேப்பரை நீக்கும்போது அதிகப்படியான தண்ணீர் மற்றும் பசை கீழே சிந்த வாய்ப்புள்ளது. எனவே தரையில் பிளாஸ்டிக் ஷீட் அல்லது பழைய துணிகளை விரித்துவிடுங்கள். சுவரில் இருக்கும் மின்சாதனப் பெட்டிகள் மற்றும் ஸ்விட்ச் போர்டுகளின் மூடிகளைக் கழற்றி வைத்துவிடுவது பாதுகாப்பானது.
நீராவி முறை!
பிடிவாதமாக ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய வால்பேப்பர்களை நீக்க நீராவி முறை சிறந்ததாகும். இதற்குப் பிரத்யேகமாக விற்கும் ஸ்டீமர் கருவியைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவி சுவரில் சூடான நீராவியைச் செலுத்தும். அந்த வெப்பத்தில் வால்பேப்பருக்குப் பின்னால் இருக்கும் பசை இளகிவிடும். பசை இளகியவுடன் ஒரு சுரண்டி கொண்டு மெதுவாக எடுத்தால் பேப்பர் மிக எளிதாகக் கழன்று வரும். பிளாஸ்டிக் அல்லது பூச்சு வேலை செய்யப்பட்ட சுவர்களுக்கு இந்த முறை மிகவும் பாதுகாப்பானது.
சமையலறைப் பொருட்கள்!
ரசாயனங்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் வினிகர் மற்றும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம். சம அளவு வினிகர் மற்றும் நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து சுவரில் நன்கு தெளிக்க வேண்டும். வினிகர் இல்லையென்றால் துணிகளுக்குப் பயன்படுத்தும் ஃபேப்ரிக் சாஃப்ட்னரையும் பயன்படுத்தலாம். இந்தத் திரவம் பேப்பரில் ஊறிப் பசையை வலுவிழக்கச் செய்யும். நன்கு ஊறிய பிறகு கைகளால் உரித்தாலே பேப்பர் வந்துவிடும்.
ரிமூவர்!
சில வகை தடிமனான வினைல் பேப்பர்களைத் தண்ணீரை வைத்து நீக்க முடியாது. இதற்குத் தனியாக விற்கப்படும் லிக்விட் ஸ்ட்ரிப்பர் அல்லது ஜெல் ரிமூவரைப் பயன்படுத்தலாம். வினைல் பேப்பராக இருந்தால், முதலில் அதன் மேல் ஒரு கீறும் கருவியை வைத்துக் கீறல்கள் போட வேண்டும். அப்போதுதான் அந்தத் திரவம் உள்ளே ஊடுருவும். ஜெல் வகை ரிமூவர் நீண்ட நேரம் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் என்பதால், தடவிவிட்டு 20 நிமிடங்கள் கழித்துச் சுரண்டி எடுத்தால் வேலை சுலபமாக முடியும்.
சுரண்டும்போது!
எந்த முறையைப் பயன்படுத்தினாலும், கடைசியில் பேப்பரைச் சுரண்டி எடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. கூர்மையான இரும்புத் தகடுகளைப் பயன்படுத்தினால் சுவரில் பள்ளம் விழ வாய்ப்புள்ளது. எனவே பிளாஸ்டிக் தகடுகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
அவசரப்பட்டுப் பாதியிலேயே கிழித்துவிடாமல், பொறுமையாகப் பசை இளகும் வரை காத்திருந்து எடுத்தால் சுவர் புத்தம் புதியது போலக் கிடைக்கும். மேலே சொன்ன நான்கு வழிகளில் உங்கள் சுவரின் தன்மைக்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்ற முறையைத் தேர்ந்தெடுங்கள்.