
1. நவராத்திரி பூஜை செய்யும்போது ஸ்வாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இவற்றை கைகளால் வைப்பதற்குப் பதிலாக, காட்டன் பட்ஸ் கொண்டு பொட்டு வைத்தால் அழகாக வரும்.
2. கொலு பார்க்கில் செடி வளர்க்க கேழ்வரகு, வெந்தயம், கொத்தமல்லி விதைகளை வைத்தால் நன்கு வளரும்.
3. கொலுவில் அம்மனுக்குக் காட்ட முத்தாலத்திக்கு பித்தளை தாம்பாளத்தில் ஒட்டும் பேஸ்டால் கோலம் வரையவும். ஜவ்வரிசியை வாணலியில் லேசாக வறுத்தால் பெரியதாக பொரியும். அதைக் கோலத்தில் ஒட்டவும். காய்ந்த பிறகு தண்ணீர் விட்டு ஆரத்தியாக எடுக்கவும். இது அம்மனுக்கு ரொம்ப விசேஷம்.
4. கொலுவில் செட்டியார் பொம்மை மளிகைக்கடை போல் பரப்ப பல்லாங்குழியை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் ரொம்ப சிறிய கிண்ணங்களில் போட்டு வைத்தால் போதும்.
5. நவராத்திரிக்கு இழைக்கோலம் போட அரிசியுடன் சிறிதளவு வெந்தயத்தையும் போட்டு ஊற வைத்துக் கோலம் போட்டால் சீக்கிரம் அழியாது. பார்க்க அழகாகவும் இருக்கும்.
6. நவராத்திரி சமயத்தில் பயன்படுத்தும் விளக்கை சாம்பலுடன், இரண்டு, மூன்று சொட்டு கெரசின் ஆயில் விட்டுக் கலந்து தேய்த்த பின், தனிச்சாம்பலால் நன்றாகத் தேய்த்து சுத்தமான துணி கொண்டு துடைத்து விட்டால் விளக்கு பளபளவென்று இருக்கும்.
7. நவராத்திரி சமயத்தில் ஒரு சாதாரண தாம்பாளத்தில் கூட கோந்தினால் அந்தந்த நாளைப் பொறுத்தோ அல்லது ஐஸ்வர்ய கோலம், ஹிருதய கமலம் போன்றவற்றைப் போட்டு, அதன் மேல் கசகசா அல்லது ஜவ்வரிசி தூவி, சிறிது நேரம் கழித்துக் கவிழ்த்தால், அதிகப்படியானது கீழே உதிர்ந்து விடும். கோலத்தில் கலர் பொடி அல்லது சம்கி தூள் அலங்கரித்து, அதன் நடுவில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க கோலம் மட்டுமல்ல, நம் வீட்டுக்கொலுவே பார்க்க ரம்மியமாக இருக்கும்.
8. நவராத்திரி கொலுவை பராசக்தியின் விஸ்வரூப தரிசனம் என்றும் கூறலாம். எல்லாமாக இருப்பது சக்தியே என்பதை சுட்டிக்காட்டும் பரிணாம வளர்ச்சியை விளக்கி, இவை அன்னையின் அருளாலேயே நடைபெறுகிறது என்பதை உணர்த்துவதே கொலுவின் தத்துவமாகும்.
9. வீட்டில் உள்ள பெண்கள் கொலு நாட்களில் ஜீன்ஸ், டிஷர்ட் அணியாமல், தங்கள் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி அணிய வேண்டும். தலைவிரி கோலமாக இல்லாமல் பின்னியோ அல்லது க்ளிப் போட்டோ பூ வைத்துக்கொள்ள வேண்டும்.
10. கொலு பார்க்க வரும் குழந்தைகளைப் பாடச் சொல்லிவிட்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்காதீர்கள். அது அவர்களை அல்ல, அம்பாளை அவமதிப்பது போன்றது.
11. நவராத்திரி சமயத்தில் பூஜைக்கு வாங்கிய வெற்றிலை வாடாமல் இருக்க வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள்.
12. பழைய நண்பர்கள், உறவினர்களை கொலு பார்க்க அழைத்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.