
கங்காருவைப்போல் குழந்தைகளை யாராலும் நிச்சயமாக பராமரிக்க முடியாது. அன்று முதல் இன்று வரை தாய்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக கங்காருவை கூறலாம். அது தன் குட்டியை ஈன்றவுடன் தன் வயிற்றிலிருக்கும் பைகளிலியே வைத்து பராமரிக்கிறது. கிட்ட தட்ட 8 மாதம் வரை வைத்து பராமரிக்கும். அதைப் போலவே தாய்மார்களும் குழந்தைகளை பராமரித்தால் குழந்தைகளும் மிகவும் நன்றாக இருக்கும்
உங்களுக்குத் தெரியுமா? குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தாலோ அல்லது எடை குறைவாக பிறந்தாலோ இந்த கங்காருவின் பராமரிப்பு முறை பின்பற்றப்படுகிறது.
அதாவது, கங்காரு தாய் பராமரிப்பு (KMC) என்பது குறைப்பிரசவ அல்லது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளை, தாய் அல்லது வேறு எந்த பராமரிப்பாளருடன் தோலுடன் தொடர்பு கொள்ளும் வகையில் பராமரிக்கும் முறையை தான் கங்காரு தாய் பராமரிப்பு என்று கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Kangaroo Mother care (KMC) என்று கூறுவார்கள். தொழில்நுட்ப அடிப்படையிலான பராமரிப்புக்கு மாற்றாக இந்த KMC இப்போது தரமான பராமரிப்பாக மாறியுள்ளது.
KMC முறை புதிதாகப் பிறந்த குழந்தைகளை சூடாகவும் வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. குழந்தைகள் குளிர் அழுத்தம் மற்றும் தாழ்வெப்பநிலை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இதயம் மற்றும் சுவாச விகிதங்கள், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் தூக்க முறைகளை உறுதிப்படுத்தப்படுகின்றன.
இந்த முறையை கையாளும்போது தய்மார்கள் பால் உற்பத்தி கணிசமாக அதிகரிப்பதாக கருதுகிறார்கள். மேலும் பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கும் விகிதமானது இந்த பராமரிப்பு முறையால் கூடுதலாகிறது என்பதே நிபுணர்களின் கருத்து. எடை அதிகரிப்பை மேம்படுத்துகிறது, சுவாசக்குழாய் மற்றும் நோசோகோமியல் தொற்று நிகழ்வுகளைக் குறைக்கிறது, இது குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான உணர்ச்சி பிணைப்பையும் மேம்படுத்துகிறது.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு, தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையுடன் குணமடையும்போது குறுகிய KMC பராமரிப்பையும் கொடுக்கத் தொடங்கலாம்.
குழந்தை வெளியே வளைந்தோ அல்லது கைகால்களை வெளியே நீட்டியோ வர முயற்சி செய்யுமேயானால் அந்த குழந்தைக்கு இனி KMC தேவையில்லை என்று கருதப்படுகிறது.
குழந்தை ஆரோக்கியமாக பிறந்தாலும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இவ்வாறு அணைத்து கொள்ளும்போது தாய் சேயிற்கான பிணைப்பு அதிகமாகலாம்.
இந்த காலத்தில் தாய்மார்களும் வேலைக்குச் செல்வதால் தாய்ப் பாலை கூட சரியாக கொடுப்பதில்லை. தாய்மார்களே, குறைந்த பட்சம் ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய பிறகு தாய்ப் பாலை கொடுக்கவும். குழந்தையை பார்த்து கொள்ள ஆயாமார்கள் இருந்தாலும் இரவு நேரத்தில் குழந்தையை முடிந்த வரை உங்களருகில் அணைத்து வைத்து கொள்ளுங்கள். அந்த ஸ்பரிசம்தான் குழந்தைக்கு மிக மிக அவசியம்.
இதைத் தவிர முக்கியமான இன்னொரு விஷயம் என்னவென்றால் குழந்தை சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்த பிறகு எல்லோருமே இக்காலத்தில் ஸ்பூனால்தான் ஊட்டுகிறார்கள். Cerelac, nestum கஞ்சி போன்றவற்றை ஸ்பூனால்தான் ஊட்ட முடியும், ஒத்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
ஆனால் இட்லி சாதம் போன்றவற்றை கையால் ஊட்டலாமே.. இன்றைய நாகரீகத்தின் படி கையால் ஊட்டினால் வியாதிகள் வரும். ஏன், ஸ்பூனால் ஊட்டினால் வராதா? கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்து கொண்டு ஊட்டினால் எப்படி வியாதி வரும். நம் அம்மா பாட்டி அத்தை இவர்கள் எல்லோரும் நமக்கு கைகளால் தானே ஊட்டினார்கள். நாம் நன்றாக இல்லையா?? ஏன் இதை பற்றி இத்தனை கூறுகிறேன், தெரியுமா??
ஏனென்றால் தாய் தன் கையால் குழந்தைக்கு ஊட்டும்போது ஒரு விதமான பிணைப்பு அதாவது bonding உண்டாகிறது. அந்த பிணைப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தாய் மீது குழந்தையின் பாசம் அதிகரிக்கும். பந்த பாசத்தை உணரச்செய்யும்.
ஆகவே, தயவு செய்து இனிமேலாவது குழந்தைகளுக்கு கையால் ஊட்டும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். மேலும் கங்காருவை போல் குழந்தையை அரவணைத்து முடிந்த வரை தாய்ப்பாலை ஊட்டி ஆரோக்கியமான குழந்தையை வளர்க்கவும்.