தர்பூசணி தோலை இனி குப்பையில் வீசாதீங்க! செடிகள் செழித்து வளர வீட்டிலேயே 'லிக்விட் உரம்' தயாரிப்பது எப்படி?

kitchen-garden-tips
kitchen-garden-tips
Updated on

கோடை வெயில் உச்சத்திற்கு சென்றுவிட்ட நேரம் இது. வெயிலின் தாக்கத்திற்கு எத்தனை குளிர் பானங்களை அருந்தினாலும் நா வறட்சி தீருவதில்லை. இதற்கு முடிவு கட்ட அனைவரது வீடுகளிலும் வாட்டர் மெலன் எனப்படும் தர்பூசணிப் பழத்தை முழுசாக வாங்கி வைத்துக்கொண்டு அவ்வப்போது ஜூஸ் பண்ணியோ அல்லது ஸ்லைஸ் போட்டு அப்படியே உட்கொண்டோ தாகத்தை தணித்து வருகின்றனர்.

மற்ற எந்தப் பழங்களிலும் இருப்பதைவிட தர்பூசணிப் பழத்தில் பழச்சாற்றின் அளவு மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும். இப்பழத்தின் சதைப்பற்றான பகுதியைப் பயன்படுத்திய பின், அதன் தடிமனான வெளிப்புறத்தோலை தூக்கி எறிந்துவிடாமல் கிச்சன் கார்டனில் உள்ள செடிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உரமாக மாற்றி உபயோகிக்கலாம். அது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

வெள்ளை நிறத்தில், கொஞ்சம் கடினத் தன்மை கூடிய சதைப் பற்றுடைய வாட்டர் மெலனின் வெளிப் புறத்தோலில் (rind) பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட்ஸ் போன்ற பல நுண்ணுயிர்ச் சத்துக்கள் அடங்கியுள்ளன. தர்பூசணியின் தோல் சுலபமாக சிதைவுற்று விரைவில் உரமாக மாறுவதற்கு உதவும் வகையில் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்வது அவசியம். அவ்வாறு நறுக்கிய துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் போடவும்.

ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் வாளிக்குள் தண்ணீர் ஊற்றவும். அதாவது பத்துக் கப் அளவு தோல் துண்டுகள் இருக்குமானால், இருபது கப், குழாயிலிருந்து பிடித்த தண்ணீர் சேர்க்கவும். அனைத்தும் கொள்ளும் அளவுக்குத் தேவையான சற்றுப் பெரிய அளவிலான கொள்கலனைத் தேர்ந்தெடுக்கவும். பின் இந்த பக்கெட்டை மூடி போட்டு இறுகமூடவும். பிறகு அதை, சூரிய ஒளிபடாத, நிழலான இடத்தில் வைத்துவிடவும்.

பின் ஒவ்வொரு நாளும் ஒருமுறை மூடியைத் திறந்து உள்ளிருப்பதை நன்கு கிளறிவிடவும். மூன்று தினங்களுக்குப் பிறகு திரவ உரம் (liquid fertilizer) உபயோகிப்பதற்கு தயாராகிவிடும். கலவையை வடிகட்டி, சத்துக்கள் கலந்திருக்கும் திரவத்தை பிரித்தெடுத்து கண்ணாடி பாட்டில்களில் அடைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
திருமணம்: ஆயிரம் காலத்துப் பயிரா? அல்லது காலாவதியான ஃபேஷனா?
kitchen-garden-tips

இந்த திரவ உரத்தை அப்படியே செடிகளுக்கு ஊற்றலாம் அல்லது 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்தும் உபயோகிக்கலாம். சிறிதும் இரசாயனக் கலப்பின்றி நூறு சத விகிதம் இயற்கை முறையில் தயாரிக்கப்படும். இந்த உரத்தை, உங்கள் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான அளவை, அனுபவத்தில் கண்டறிந்து பயன்படுத்துவது சிறப்பு.

இந்த உரத்தை அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு அல்லது சாயங்காலம் சூரியன் மறைந்த பின் செடிகளின் வேர்ப் பகுதியில் ஊற்றுவதே சிறந்த பலன் அளிக்கும். உங்கள் வீட்டில் வாங்கி உபயோகிக்கும் வாட்டர் மெலன் பழங்களின் தோலை தூக்கி எறிந்துவிடாமல், இந்த எளிய முறையில் உரமாக மாற்றி செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com