கர்ப்பிணிப் பெண்கள் இரவில் நன்றாகத் தூங்குவதற்கான வழிகள்!

Ways for pregnant women to sleep well at night
Ways for pregnant women to sleep well at nighthttps://www.jammiscans.in
Published on

வ்வொரு பெண்ணிற்கும் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்ப காலம் என்பது மிகவும் இனிமையானது. அதேசமயம், கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில், ஒரு பெண் உடல் ரீதியான மாற்றங்கள், ஹார்மோனல் தொந்தரவுகள், நெஞ்சு எரிச்சல், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், தசைப்பிடிப்பு போன்ற தொந்தரவுகளை எதிர்கொள்வதால், இரவில் நன்றாகத் தூங்க முடியாது. ஆறாவது மாதம், ஏழாவது மாதம் முதல் சரியான தூக்கம் இல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் அவஸ்தைப் படுவார்கள். அவர்களுக்கு நன்கு தூக்கம் வருவதற்கான சிறந்த வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

உணவில் கவனம்: கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் காபி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல டீ, சோடா, சாக்லேட் போன்றவையும் சாப்பிடக்கூடாது. குறிப்பாக, மாலை நேரங்களில் சாப்பிடுவது கூடாது. ஜூஸ், இளநீர் போன்றவற்றை பகல் நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு அல்லது மாலை நேரங்களில் இவற்றை எடுத்துக் கொள்ளும்போது இரவு தூங்கும்போது, சிறுநீர் கழிப்பதற்கு அடிக்கடி எழுந்திருக்க வேண்டும். இதனால் தூக்கம் தடைபடும். காரமான மசாலா உணவுகளை உண்ணும்போது நெஞ்செரிச்சல், ஜீரணம் ஆவதில் சிக்கல் போன்றவை நிகழக் கூடும். எனவே, இரவு நேரங்களில் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவு தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு மிகவும் எளிதான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தூங்குவதற்கு முன்பு நல்ல புரோட்டின் நிறைந்த பாசிப்பயிறு அல்லது சுண்டல் போன்றவற்றை ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். அது சர்க்கரை அளவை சரியாக வைக்கும். வாந்தி வராமல் தடுக்கும். நடு இரவில் பசியும் எடுக்காது.

உடற்பயிற்சி: தவறாமல் உடற்பயிற்சி செய்து வரும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைக்கும். கால்களில் ஏற்படும் சதை பிடிப்பும் இரவுகளில் நிகழாது. அதனால் நிம்மதியாகத் தூங்கலாம்.

பகல் நேர தூக்கம்: பகலில் அரை மணி நேரம் மட்டும் தூங்கினாலும் போதுமானது. அதற்கு மேல் தூங்கினால் இரவு தூக்கத்தை தொந்தரவு செய்யும். பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது போன்றவற்றை தூங்குவதற்கு முன்பு செய்யலாம். ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். அதேபோல தூங்கும் முன் வெந்நீரில் குளிப்பதும் இரவில் நன்கு தூங்குவதற்கு வழிவகுக்கும்.

தூங்கும் முறை: இடது பக்கம் ஒரு சாய்த்து படுப்பதே நல்லது. இதனால் கருப்பை அழுத்தப்படுவது தவிர்க்கப்படும். மேலும், இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக நடைபெறும். இரண்டு முழங்காலுக்கு இடையில் ஒரு தலையணை வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் கால் வயிற்றில் படுவது தவிர்க்கப்பட்டு நன்றாகத் தூங்க முடியும்.

இதையும் படியுங்கள்:
வீட்டு வைத்தியத்தில் வெற்றிலையின் பங்கு!
Ways for pregnant women to sleep well at night

ஸ்ட்ரெஸ்ஸை தவிர்க்கவும்: எப்போதும் எதையாவது நினைத்து குழப்பிக் கொண்டிருக்கக் கூடாது. அதிலும், குறிப்பாக தூங்குவதற்கு முன்பு எதைப் பற்றியும் நினைத்து கவலைப்படக்கூடாது. உங்களுடைய மனம் விரும்பியவருடன் கணவரிடம் அல்லது நெருங்கிய உறவினரிடம், தோழியரிடம் மனதில் இருப்பதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். லேசான மனத்துடன் தூங்கப் போக வேண்டும்.

படுக்கை என்பது தூங்க மட்டுமே: படுக்கையில் அமர்ந்து கொண்டு அல்லது படுத்துக்கொண்டு டிவி பார்ப்பது, செல்போன் பார்ப்பது, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். படுக்கை என்பது தூங்குவதற்காக மட்டும்தான். எனவே, ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டு தூங்கலாம். பிடித்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தூக்கம் தானாக வந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com