

என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் தான் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் இல்லை என்றால் ஒரு மனிதர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார். நற்பெயரையும், மரியாதையையும் பணிபுரியும் இடத்தில் பெறுவது எப்படி என்பதற்கான 10 உத்திகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பொறுப்புடன் செயல்படுதல்: அலுவலகத்தில் உங்களை நம்பி ஒரு வேலை ஒப்படைக்கப்பட்டால் அதை முழு பொறுப்போடு செய்து முடிக்க வேண்டும். அதில் ஏதேனும் தவறுகளோ சிக்கல்களோ ஏற்பட்டால் அதற்காக பிறர் மீது பழி போடாமல் அதைத் தானே சரி செய்ய முன்வர வேண்டும். இதுதான் ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம். மேலும், ஒரு நல்ல பணியாளருக்கான அடிப்படைக் குணமும் இதுதான்.
2. நேர மேலாண்மை: அலுவலகத்திற்கு எப்போதும் சரியான நேரத்திற்கு அல்லது அதற்கு முன்னதாக வருவது மிகவும் அவசியம். தாமதமாக வந்துவிட்டு அதற்காக. ‘ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டேன், பவர் கட்டானதால் வீட்டில் சமையல் செய்ய நேரம் ஆகிவிட்டது’ என்ற சாக்குப்போக்குகளை சொல்லக் கூடாது. காரணங்களை சொல்பவர்களை விட சவால்களைக் கடந்து வேலைகளை முடிப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.
3. உடல் மொழி: எப்போதும் உடல் மொழி ஒருவருடைய ஆளுமைத்தன்மையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறரிடம் பேசும்போது கண்களைப் பார்த்து பேச வேண்டும். இது நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதோடு, உங்கள் மீது பிறருக்கான நம்பிக்கையும் அதிகரிக்கும்.
4. சொல்லும் செயலும் ஒன்று: எப்போதும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது. ஒரு வேலையை செய்து முடிப்பதாக வாக்குறுதி அளித்தால் அதைக் குறித்த நேரத்தில் தரம் குறையாமல் செய்து முடிக்க வேண்டும். முடியாத செயல்களை செய்வேன் என்று பொய் வாக்குறுதி அளிக்கக் கூடாது. சொன்னதை செய்தால்தான் அதிகம் மரியாதை கிடைக்கும்.
5. உதவுவதில் கவனம்: உடன் பணிபுரிபவர்கள் வேலையில் சந்தேகம் கேட்டால் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். தேவையான உதவிகளையும் செய்யலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக உதவி செய்தால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் கெட்டுவிடும். தனக்கான வேலையை அதற்குரிய நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். பிறருக்கு உதவுவதிலும் எல்லைகளை அமைத்துக் கொண்டு செய்வதுதான் நல்லது.
6. அதீத மன்னிப்பு வேண்டாம்: தவறு செய்யும்போது உடனடியாக பிறரிடம் மன்னிப்பு கேட்பது நல்லது. ஆனால், ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் சாரி சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு பலவீனமான, தன்னம்பிக்கையற்ற நபராக நீங்கள் மாறுவீர்கள். மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக அந்தத் தவறை எப்படி சரி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
7. கற்றுக்கொள்ளும் திறன்: துறை சார்ந்த புதிய மாற்றங்களை கற்றுக்கொண்டு ஒருவர் தன்னை புதுப்பித்துக் கொண்டு, தனது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்டேட்டாக இருக்கும் ஒரு நபருக்கு மரியாதையும் மதிப்பும் எப்போதும் கூடும்.
8. உணர்ச்சிகளைக் கையாளுதல்: வேலையில் பிறர் தவறு செய்யும்போது அவர் மீது கோபப்படுவது அல்லது வருத்தப்படுவது இயல்பு. ஆனால், அவற்றை நாசூக்காக சுட்டிக்காட்டவும். கடினமான சூழலில் கூட நிதானமாக செயல்படுபவர்களைதான் உயர் அதிகாரிகள் விரும்புவார்கள். பிறரைப் பற்றி புறம் பேசுவது நல்லதல்ல. இது உங்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும்.
9. தெளிவான தகவல் தொடர்பு: பேசும்போதும், மின்னஞ்சல் செய்யும்போதும் ஒரு தொழில் முறை ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நண்பர்களிடம் பேசுவது போல மிகச் சாதாரணமாகப் பேசுவதைத் தவிர்த்து அலுவலகத்திற்கே உரிய கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.
10. கவனிக்கும் திறன்: அலுவலக மீட்டிங்களில் பிறர் பேசும்போது பொறுமையாக கவனித்து கூர்ந்து கேட்பது மிகவும் முக்கியம். அவர்கள் பேசி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து பிறகு பதிலளிப்பது ஒருவரின் மனமுதிர்ச்சியை காட்டும், மரியாதையைப் பெற்றுத் தரும்.