உடலில் குறைபாடுகள் உள்ள மனிதர்களின் மரியாதையை மேம்படுத்தவும் கூட்டுப்புரிதலை உருவாக்கவும் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை உருவாக்கியது. இது இன்று டிசம்பர் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடல் குறைபாடுகளை பொருட்படுத்தாதிருத்தல்: மாற்றுத்திறனாளி ஒருவரைப் பார்த்தவுடன் அவரை சக மனிதராக நடத்த வேண்டும். அவருடைய உடல் குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். அவருக்கென்று தனிப்பட்ட அடையாளங்கள் உள்ளன. நம்மைப் போன்ற உணர்வுகள் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆர்வங்கள், பொழுதுபோக்குகள், இலக்குகள், கனவுகள் மற்றும் ஆசைகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நடத்தையை மாற்றக்கூடாது: மாற்றுத்திறனாளி ஒருவரை சந்திக்கும்போது சாதாரண மனிதர்களிடம் எப்படிப் பேசுவோமோ, தொடர்புகொள்வோமோ அதைப்போலவே இவரிடமும் நடந்துகொள்ள வேண்டும். அவருக்காகப் பேசும் தொனி, ஒலி, வேகம் இவற்றை குறைக்கவோ கூட்டவோ கூடாது. நிதானமாகப் பேச வேண்டும். அவர்களிடம் பேசும்போது கண்ணியமான, மரியாதையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
கேட்காமல் உதவக் கூடாது: மாற்றுத்திறனாளிகள் பிறரை சார்ந்து இருப்பதை விரும்ப மாட்டார்கள். கண் பார்வைத் திறனற்றவர்கள், செவித்திறன் அற்றவர்கள் தங்களுக்குரிய கருவிகளை வைத்து அதன் மூலம் பிறரை தொடர்பு கொள்வார்கள். அவர்களாகக் கேட்டுக் கொள்ளாமல் யாருக்கும் தானாகப் போய் உதவிகள் செய்யக்கூடாது. அவர்கள் அதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அவர்கள் மேல் பரிதாபப்படுவதற்குப் பதிலாக அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு: பல்வேறு வகையான குறைபாடுகள் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட திறன்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பிறருக்கும் அவற்றைக் கற்பிக்கலாம். குறைபாடுகள் தொடர்பான களங்கத்தைக் குறைக்கவும், பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் சமூக நிகழ்வுகள் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தொடர்பு மொழி: பல்வேறு குறைபாடுகள் உள்ள நபர்களுடன் திறம்பட தொடர்பு கொள்வதற்குத் தெளிவான மொழி மற்றும் மாற்று வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும். வாய் பேச இயலாதவருக்கு சைகை மொழி விளக்கம், கண் பார்வை திறன் அற்றவர்க்கு ப்ரெயில் முறை போன்றவை உதவும். நடக்க இயலாத அல்லது கால்கள் பலவீனமாக உள்ளவர்களுக்கு சக்கர நாற்காலிகள் போன்ற பயன்பாட்டை வழங்க வேண்டும்.
தன்னார்வ வாய்ப்புகள்: மாற்றுத்திறனாளிகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கேற்ற தன்னார்வ வாய்ப்புகளை எளிதாக்கித் தர வேண்டும். அவர்களின் திறன்களை சரியாகப் பயன்படுத்தவும் அனுபவத்தை பெறவும் உதவ வேண்டும். ஆதரவுக் குழுக்கள், மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான கல்வித் திட்டங்கள் போன்ற தகவல்களைச் சேகரித்தல், அவற்றை அவர்களுக்குக் கொண்டு சேர்த்தல், தொழில் மேம்பாடு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற துறைகளில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் வழிகாட்டல், திட்டங்களை உருவாக்குதல் போன்றவை. மேலும், தனிப்பட்ட தேவைகளை மதிப்பிட்டு அவர்களுக்கு தேவையான உதவி, ஆலோசனை அல்லது திறன் மேம்பாட்டு திட்டங்கள் போன்ற பொருத்தமான ஆதரவையும் வழங்க வேண்டும்.
வாழ்க்கைத் திறன்கள் பயிற்சி: மாற்றுத்திறனாளிகள் நிதிக் கல்வியறிவு, வேலைத் தயார் நிலை மற்றும் தகவல் தொடர்பு கொண்ட வாழ்க்கை திறன்களில் சிறந்து விளங்க உதவிகளை செய்ய வேண்டும். அவர்களுக்கான கலை, விளையாட்டு, அறிவு சார்ந்த பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை நன்கு ஆராய்ந்து உதவ வேண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் சமூகத்தையும் மேம்படுத்தும் செயல்முறைகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து, அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அங்கீகாரம்: நேர்மறையான மற்றும் ஆதரவான அணுகுமுறையை பேண வேண்டும். அவர்களின் சாதனைகள் மற்றும் திறன்களைக் கொண்டாட வேண்டும். சமூக நிகழ்வுகளிலோ அல்லது விருதுகள் மூலமாகவோ அவர்களின் சாதனைகள் சிறியதாகவோ பெரியதாக இருந்தாலும் அவற்றை அங்கீகரித்துக் கொண்டாட வேண்டும். வெற்றிகரமான மாற்றுத்திறனாளிகளை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக் காட்ட வேண்டும்.