
சாம்பார், ரசம் போன்ற உணவுப் பொருட்களுக்கு கறிவேப்பிலை, வாசனை தருவதுடன் மட்டும் நிற்பதில்லை. ஜீரணம், இதய ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படச் செய்யும் ஊட்டச் சத்துக்களையும் தன்னுள் நிறைத்து வைத்துள்ளது. ஆனால், கடையிலிருந்து வாங்கி வரும் கறிவேப்பிலைகளில், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதை அப்படியே உபயோகித்தால் உடல் நலக் கோளாறுகள் உண்டாவது உறுதி. ஊட்டச் சத்துக்களின் அளவு குறையாமல், அசுத்தங்களை நீக்க நான்கு எளிய வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. உப்பு மற்றும் வினிகர் சேர்த்த கரைசலில் ஊற வைத்தல்: ஒரு டேபிள் ஸ்பூன் உப்பையும் இரண்டு டேபிள் ஸ்பூன் வினிகரையும் ஒன்றாய் கலந்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். அந்த கரைசலில் கறிவேப்பிலை கொத்துகள் நன்கு மூழ்கியிருக்கும்படி 10 முதல் 15 நிமிடங்கள் போட்டு வைக்கவும். சிராய்ப்புத் தன்மையுடைய உப்பு இலை மீது படிந்திருக்கும் அசுத்தங்களைப் பிரியச் செய்யும். வினிகரின் அமிலத்தன்மை ரசாயனங்களை உடைத்துவிடும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் கறிவேப்பிலையை வெளியில் எடுத்து, குழாயை திறந்துவிட்டு ஓடும் நீரில் நன்கு கழுவி விடவும். இந்த முறையில் கறிவேப்பிலை சுத்தமாவதுடன் ஃபிரஷ்ஷாகவும் சுவை குறையாமலும் இருக்கும்.
2. புளி நீரில் முக்கி எடுத்தல்: புளிப்பு சுவையுடைய புளி, இயற்கையாகவே சுத்தப்படுத்த உதவும் குணமுடையது. இதிலுள்ள சிறிதளவிலான அமிலத் தன்மை, கறிவேப்பிலைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை, ரசாயனங்களின் உதவியின்றி, நீக்க உதவும். முதலில் கறிவேப்பிலைகளை சுத்தமான நீரில் கழுவி தூசு மற்றும் அழுக்குகளை நீக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புளி பேஸ்ட்டை சேர்த்து கரைக்கவும். அக்கரைசலில் கறிவேப்பிலையைப் போட்டு 15 நிமிடம் வைத்திருக்கவும். பின் அதை எடுத்து மறுபடியும் தண்ணீரில் கழுவியெடுக்கவும். இயற்கையான முறையில், சுற்றுச் சூழலியலை பாதுகாக்க விரும்புபவர்கள் பின்பற்றும் முறை இது.
3. பேக்கிங் சோடா பாத்: கறிவேப்பிலையின் மேற்பரப்பில் வலுவாகப் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தினை நீக்குவதற்கு பேக்கிங் சோடா சிறந்த முறையில் உதவும். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்கவும். அந்தக் கரைசலில் கறிவேப்பிலையை முக்கி 10 முதல் 15 நிமிடம் வைத்திருக்கவும். அந்த நேரத்தில் பேக்கிங் சோடா சிறப்பாக செயல்புரிந்து கறிவேப்பிலையில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நீக்கிவிடும். பின் கறிவேப்பிலையை வெளியில் எடுத்து, குழாயை திறந்துவிட்டு ஓடும் நீரில், பேக்கிங் சோடா மற்றும் அசுத்தங்கள் ஏதுமில்லாதவாறு நன்கு கழுவி விடவும்.
4. வெது வெதுப்பான நீரில் முக்கி எடுத்தல்: கறிவேப்பிலையை சுத்தப்படுத்த எந்த முறையை தேர்ந்தெடுத்தாலும், அது முடிந்த பின், லேசான சூடுள்ள நீரில் கறிவேப்பிலையை முப்பது செகண்ட்ஸ் முக்கி எடுத்தல் அவசியம். இதனால் கறிவேப்பிலையில் ஒட்டியிருக்கும் சுத்திகரிப்பானின் மிச்சம் ஏதாவது இருந்தால் அதுவும் நீங்கிவிடும். இப்போது கறிவேப்பிலையின் டெக்ச்சர், சுவை மற்றும் மணம் போன்றவற்றில் எந்த மாற்றமும் இன்றி, அவை சமையலில் உபயோகிக்க தயாராகிவிடும்.
கறிவேப்பிலைதானே என்று கவனக்குறைவுடன் சமையலில் இறங்காமல் முறையாகக் கழுவி அதை உபயோகிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.