
குழந்தைகள் நாம் பேசுவதிலிருந்து மட்டுமல்ல, நாம் என்ன செய்கிறோமோ அதையே அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரின் பேச்சு, செயல்கள், பண்புகள் ஆகியவையே குழந்தைகளிடம் எதிரொலிக்கின்றன. அப்படி உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க சில விஷயங்களைப் பின்பற்றலாம்.
உறவுகளை மதிப்பார்கள்: பொருட்களைத் தாண்டி மனிதர்களே முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். பணம், அந்தஸ்து, செல்வாக்கு போன்ற வித்தியாசங்களை கடந்து மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துங்கள். உங்கள் குழந்தைகளும் மற்றவர்களிடமும் உறவுகளையும் மதிப்பார்கள்.
துணிச்சல் பெறுவார்கள்: எளிதான செயல்களை மட்டுமே செய்து கொண்டு இருக்காதீர்கள். சவாலான விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். அச்சத்தை கடந்து நீங்கள் அடி எடுத்து வைப்பதை பார்த்து குழந்தைகளும் துணிச்சல் பெறுவார்கள். நேர்மறை சிந்தனை அவர்களுக்குக் கிடைக்கும்.
தன்னம்பிக்கை பெறுவார்கள்: எப்போதும் வெற்றிகளை மட்டுமே சந்திப்பவர்கள் என்று யாரும் கிடையாது. தேர்வில் மதிப்பெண் குறைந்தோ, விளையாட்டில் சக குழந்தைகளால் ஏளனம் செய்யப்பட்டோ கண்ணீருடன் குழந்தைகள் வரக்கூடும். அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். நீங்கள் அடைந்த தோல்விகளையும், உங்களின் பலவீனங்களையும், அவர்களிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். இந்தக் தடைகளில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்? என்றும் குழந்தைகளிடம் உணர்த்துங்கள். அப்போது அவர்கள் தன்னம்பிக்கை பெறுவார்கள்.
அனுபவங்களைப் பழக்குங்கள்: படிப்பு, கலைகள், புதிய திறன்கள் என்று உங்களின் தனிப்பட்ட மேம்பாட்டுக்கு நீங்கள் நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பதை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களும் ஆர்வமாகி அதுபோல செய்வார்கள். பாடப் புத்தகங்களை தாண்டி இதர புத்தகங்கள் மூலம் அவர்களுக்கு அறிவு, அனுபவங்கள் கிடைக்கும். அறிவுத் தேடல் மற்றும் அனுபவங்களை குழந்தைகளுக்குப் பழக்குங்கள்.
வேலைகளில் ஒழுங்கை கடைப்பிடியுங்கள்: தினசரி வேலைகளில் ஒழுங்கை கடைப்பிடியுங்கள். தூங்கி விழிப்பது, சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்வது என்ற எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை நீங்கள் பின்பற்றுங்கள். மன அழுத்தம் எரிச்சல், கோபம் எல்லாம் காணாமல் போகும்.
உங்கள் குழந்தைகளும் ஒரு நாளும் பள்ளிக்கு தாமதமாக செல்ல மாட்டார்கள். எதற்கும் கோபப்பட்டு ரீயாக்ட் செய்ய மாட்டார்கள். எந்த சூழலிலும் உங்களை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செய்து முடியுங்கள். உங்கள் குழந்தைகளும் நம்பிக்கைக்குரிய மனிதர்களாக வளர்வார்கள்.
குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்: குடும்பத்தினர் யார் என்ன நல்ல விஷயம் செய்தாலும் அதை மனம் திறந்து பாராட்டுங்கள். நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னிப்பு கேளுங்கள். எல்லோரையும் பாராட்டும் குணத்தையும் தங்கள் தவறுகளுக்கு வருந்தும் பண்பையும் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்!
சரி என்று தோன்றுவதை செய்யுங்கள்: குழப்பமான தருணங்களில் அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பது சரிதான். ஆனால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்று கவலைப்பட்டுத் தயங்காமல் உங்கள் மனதுக்கு சரி என்று தோன்றுவதை செய்யுங்கள். அர்த்தமுள்ள செயல்களை உங்களால் செய்ய முடியும், எப்படிச் செயல்படுவது ? என்று குழந்தைகளுக்கும் கற்றுத் தர முடியும். இதனால் குழந்தைகளும் கற்றுக் கொள்வார்கள்.
கவனம் செலுத்துங்கள்: குழந்தைகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வளர வேண்டும். அதற்கான வாழ்க்கை முறையை அவர்களுக்கு முன் உதாரணமாக இருந்து பழக்குங்கள். உடற்பயிற்சி அல்லது விளையாட்டு சத்தான உணவு, நிறைவான தூக்கம் என்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்!
யாருமே எதிர்பார்க்காத நேரத்திலும், சாலை விதிகளை மதிப்பது, குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டும் போடுவது என்ற சட்டத்தையும் விதிகளை மதிக்கும் நல்லவற்றை பார்த்து உங்கள் குழந்தைகளும் அதை அப்படியே செய்வார்கள்!
கிண்டல் செய்வதை பழக்காதீர்கள்: ஒருவரை நிறம், உடல் தோற்றம் இதனை வைத்து யாரையும் கிண்டல் செய்யாதீர்கள்! குழந்தைகளுக்கும் அதை பழக்காதீர்கள். தோற்றத்தைத் தாண்டி ஒருவரின் குணம், விடாமுயற்சி மற்றும் ஆரோக்கியமே முக்கியம் என்பதை குழந்தைகளிடம் புரிய வையுங்கள்!