
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அவர்கள் பாடங்களைப் படிக்கவும், ஹோம் ஒர்க் செய்து முடிக்கவும் தகுந்த சூழலை உருவாக்கித் தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதை அவர்கள் நூறு சதவிகிதம் சரிவர செய்து கொடுக்கும்போது குழந்தைகள் வெற்றி பெறுவது நிச்சயம். அதற்கு பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் கவனம் சிதறாமல் பாடம் படிக்க, டிவி மற்றும் மிக்ஸியின் அலறல் சத்தம் இல்லாத அமைதியான இடம் தேவை. அதற்காக ஒரு தனி அறையைக் கொடுத்து ஒரு மேஜையையும் நாற்காலியையும் போட்டு விட்டால் போதாது, அவர்களின் முழு ஈர்ப்பையும் பாடத்தில் செலுத்த, அவர்கள் உணர்வுபூர்வமாக படிக்கும் அறையிலுள்ள வசதிகளை உள்வாங்கி, மனதிற்குள் இறுத்தி, தினசரி அந்த அறைக்குள் சென்று பள்ளிப் பாடங்களை மகிழ்ச்சியுடன் முடித்துவிட்டு வெளிவர என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
1. படிப்பதற்கு ஓர் அறையை அமைத்துக் கொடுக்கும்போது, மேஜை நாற்காலிகளை அறையின் மூலையில் போடாமல், இயற்கை வெளிச்சம் மற்றும் காற்று வரக்கூடிய ஜன்னல் அருகே போடலாம். அந்த அறையானது, அதிக சத்தம் இல்லாமல் உயிர்ப்புடனிருக்கும் ஹாலுக்கு அருகிலிருப்பது படிக்கும் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். சுற்றுப்புறம் அமைதியுடனும், ஒரு சிலரின் நடமாட்டத்துடனும் இருப்பது குழந்தை படிப்பில் அதிக கவனம் செலுத்த உதவும்.
2. தொடர்ந்து சத்தமே இல்லாத அமைதியான சூழலில் இருப்பதும் சில குழந்தைகளுக்கு கவனச் சிதறலை உண்டுபண்ணும். ஜன்னல் வழியே அவ்வப்போது பறவைகளின் 'கீச்' ஒலி கேட்கும்படியான இடத்தைத் தேர்வு செய்வது மற்றும் அறைக்குள் இசைக் கருவிகளின் மெல்லிய ம்யூசிக் ஒலிக்கும்படியான அமைப்பை உண்டுபண்ணுவது ஆகியவை மூளையை அமைதிப்படுத்தி படிப்பில் அதிக கவனம் செலுத்த உதவும்.
மேஜை மற்றும் ஜன்னல் ஓர விளிம்புகளில் சிறிய வகை இன்டோர் பிளான்ட்களை வைப்பது, லேவண்டர் ஆயிலின் நறுமணத்தை அறையில் பரவச் செய்வது, உட்காரும் நாற்காலியில் மிருதுவான குஷன் சீட் வைத்துக் கொடுப்பது மற்றும் குடிக்கும் நீரில் சிறு துண்டு நறுக்கிய லெமன், துளசி, புதினா இலை போன்றவற்றைப் போட்டு வைப்பது ஆகிய செயல்கள் குழந்தைகளின் நுண்ணிய உணர்வுகளையும் திருப்தியடையச் செய்து, ஆர்வமுடன் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கத் தூண்டும்.
3. விளையாடிக் கொண்டு அல்லது டிவி பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தையை படிக்க உட்கார வைப்பதற்கு முன் வெது வெதுப்பான ஏதாவதொரு பானத்தைக் கொடுத்து குடிக்க வைக்கலாம். கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் பண்ணச் செய்யலாம். இவை எல்லாம் மூளையின் மூடு மாற உதவும்.
4. குழந்தைகள் நேர மேலாண்மையை கற்றுக்கொள்ள பொமொடோரோ டெக்னிக்கை பயன்படுத்தலாம். அதாவது, படிக்க ஆரம்பித்து ஒவ்வொரு 25 நிமிடம் ஆனதும் ஐந்து நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாம்.
5. படித்து முடித்ததும் உடனே புத்தகங்கள், பென்சில் பாக்ஸ் போன்ற மற்ற உபகரணங்களை முறையாக அடுக்கி வைக்கவும் சொல்லித்தருவது அவசியம்.
இள வயது முதலே குழந்தைகளுக்கு வாழ்வியல் முறையை சரியாகக் கற்றுக் கொடுத்தால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.