‘Gaslighting’ என்பது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை, ‘நாம்தான் தவறு செய்துவிட்டோமோ?' என்று நம்ப வைப்பதாகும். இது சமீப காலமாக உறவுமுறைகளில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்தப் பதிவில் Gaslighting என்றால் என்ன என்பதைக் காண்போம்.
தான் செய்த குற்றத்தை அடுத்தவர் மீது சுமத்துவதன் மூலம் அவர்களே, ‘நாம்தான் தவறு செய்துவிட்டோம். அவர் சொன்னதை கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது’ என்று தன் மீதே பழியைப் போட்டுக்கொள்ளும் அளவிற்கு ஒருவரை Manipulate செய்யும் முறைதான் Gaslighting ஆகும்.
இந்தப் பிரச்னை கணவன், மனைவி, நண்பர்கள், காதலர்கள் போன்ற எல்லா உறவுகளிலும் இருக்கிறது. கணவன், மனைவியை வாக்குவாதத்தில் அடித்து விட்டால் அதற்காக மன்னிப்பு கேட்காமல், 'நீ செய்த தவறுக்காகத்தான் உன்னை அடித்தேன். நீ தவறு செய்யாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது' என்று பாதிக்கப்பட்டவர் மீதே தவறு இருப்பது போல சித்தரிப்பது. இதனால் பாதிக்கப்படவர்களும் தவறு தன் மீதுதான் இருக்கிறதோ? என்று நம்ப ஆரம்பிப்பார்கள்.
சந்தேக குணம் அதிகம் உள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவர் என்று நினைப்பவர்கள், தனக்கு மட்டும்தான் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறுவயதில் அன்பு கிடைக்காமல் போனவர்கள், அதிகம் கோபப்படுபவர்கள், வன்முறையை அதிகம் கையாள்பவர்கள் ஆகியோர் இதை அதிகமாக பயன்படுத்துவார்கள்.
இந்தப் பிரச்னை பல காலங்களாக இருந்து வந்தாலும், தற்போது இது மனரீதியாக ஏற்படுத்தும் உளவியல் சிக்கலை மக்கள் புரிந்துக்கொள்ளத் தொடங்கியுள்ளர். உறவுமுறைகளில் Gaslighting பிரச்னையால் அதிகம் பாதிப்பு ஏற்படுவது கணவன், மனைவி உறவில்தான். ஏனெனில், இந்தப் பிரச்னையால் விவாகரத்து வரை வந்துவிடுவதால் நீதிமன்றம், காவல்துறை, உளவியல் ஆலோசனை மையம் போன்ற இடங்களில் இந்தப் பிரச்னை அதிகமாகப் பேசப்படுகிறது.
Gaslighting பிரச்னைக்குக் காரணமான நபர் தனது தவறை உணர்ந்து கொண்டு திருந்துவது என்பது கடினமான விஷயமேயாகும். இருப்பினும், பாதிப்பை ஏற்படுத்தும் நபரும், பாதிக்கப்பட்ட நபரும் சேர்ந்து கவுன்சிலிங் சென்றால், அவர்களுக்கு ஓரளவு எதார்த்தத்தை எடுத்து புரியவைக்க முயற்சிப்பார்கள். இதுவும் நம்பிக்கையை ஏற்படுத்துமே தவிர, நிரந்தர தீர்வு என்று சொல்ல முடியாது. இந்தப் பிரச்னையை போக்க இருவருமே தொடர்ந்து கவுன்சிலிங் வருவதும், தவறு செய்தவர் தனது தவறை புரிந்துக் கொண்டு உணரும்போதுதான் இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
Gaslighting பிரச்னையில் பாதிக்கப்படும் நபர் இன்னொருவரை சார்ந்தே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும் சுயமாக முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். தனக்குத் தவறு இழைக்கப்படும்போது, அதை எதிர்த்து கேள்விக் கேட்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கான வழிகளைத் தேட வேண்டியது மிகவும் அவசியமாகும்.