ஒரு இருபது வருடம் பின்நோக்கிச் சென்று பார்த்தால், மண்பானை என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக இருந்திருக்கும். தண்ணீர் அருந்த, உணவு சமைக்க, அரிசி, புளி போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைக்க என்று மண்பானைகளை நம் வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்தியிருப்போம்.
மண்பானையில் உணவு சமைக்கும்போது, அதற்கு தனி ருசி உண்டு என்று கூறுவார்கள். கோடைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள மண்பானையையே பெரிதும் பயன்படுத்துவோம். மண்பானைகளை இன்றைய பிரிட்ஜுடன் ஒப்பிடுவதுண்டு.
தண்ணீரை மண்பானையில் பிடித்து வைத்தால் எந்நேரமும் ‘குளுகுளு’வென்று குளிர்ச்சியாகவே இருக்கும். இரவில் மண்பானையில் பழைய சோறு வைத்து மூடி வைத்துவிடுவார்கள். அடுத்த நாள் காலையில் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அமிர்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். உடலுக்கும் குளுமை மற்றும் நன்மை பயக்கும்.
இப்போது மண்பானைக்கு பதில் சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான் போன்றவை வந்துவிட்டன. எனினும், பானை விற்பனையை ஆங்காங்கே காண முடிகிறது. பொங்கல் போன்ற பண்டிகையின்பொது மக்களிடம் மண்பானைகளின் தேவை அதிகரிக்கிறது.
மண்பானைகளில் நுண்துளைகள் இருப்பதால் தண்ணீரில் இருக்கும் அழுக்குகளை வடிகட்டி விடுவதால் தூய்மையான நீர் நமக்குக் கிடைக்கிறது. களி மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை தண்ணீருடன் கலந்துவிடும். தினமும் இந்தத் தண்ணீரை அருந்துவதால், உடலில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மண்பானையில் இருக்கும் ஆல்கலைன் தண்ணீரில் இருக்கும் அசிடிட்டியை தடுத்து நல்ல தண்ணீரை நமக்கு மண்பானை கொடுக்கும்.
மண்பானையை பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் தேவை குறையும். மண்பானை மக்கும் தன்மை கொண்டதனால், இது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மண்பானையில் தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.
சன்ஸ் ட்ரோக் என்பது சூரிய ஒளி நம் மீது படுவதால் ஏற்படும் சோர்வாகும். இது அதிகப்படியாக வயதானவர்களுக்கே வரக்கூடியதாகும். உடலில் உள்ள வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸில் இருந்து 40 டிகிரி செல்ஸியஸ்அதிகரிக்கும்போது உடலில் பல வியாதிகள் வரக்கூடும். மண்பானை தண்ணீர் அருந்துவது உடலை சீக்கிரமே ஈரப்பதத்திற்குக் கொண்டு வந்துவிடும். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
பிரிட்ஜில் வைத்து குடிக்கும் நீர் தொண்டை அரிப்பு மற்றும் வலியை உருவாக்கும். ஆனால், மண்பானை குளிச்சியாக நீரை வைத்திருக்கும். மேலும் இது நிறைய சத்துக்களைக் கொண்டது. இதில் வைத்து நீர் அருந்துவது உடலுக்கும் மிகவும் நல்லதாகும். எனவே, இந்த வெயில் காலத்தில் மண்பானையின் தேவை நமக்கு மிகவும் அவசியமாகும். கோடைக்காலத்தின் தாக்கத்தை தாக்குப்பிடிப்பதற்காகவே மண்பானையில் நீர்மோர் பந்தல் என்று ஆரம்பித்து மக்களுக்கு மோர் வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நாமும் இக்கோடைக்கால வெப்பத்தை சமாளிக்க மண்பானையை வாங்கி பயன்படுத்துவது உசிதமாகும்.
மண்பாண்டங்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம், அதை நேரே சென்று உற்பத்தி செய்பவர்களிடமே வாங்குவது மிகவும் அவசியமாகும். ஆன்லைன் போன்ற இடங்களில் வாங்குவதைத் தவிர்த்து, நேரிலே குயவர்களிடம் சென்று வாங்குவதால் விலையும் குறைவாகக் கிடைக்கும், அவர்கள் தொழிலும் வளர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.